மனிதனின் நெருங்கிய நண்பன் நாய் என்று கூறுவர். கோபம் மற்றும் மற்றவர்களைக் குறைகூறும்போது நாம் நாய் என்றே ஏசுகின்றோம். ஆனால் அவற்றின் நல்ல குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில், நாம் பார்க்கும் போதே பயத்தை தரக்கூடியதும் மற்றும் தற்போது மிகவும் ஆபத்தான பட்டியலில் உள்ளதுமான ஒருசில நாய்களைப் பற்றி பேசவுள்ளோம்.
1. PITBULL
உலகிலுள்ள ஆபத்தான நாய் பட்டியலில் முதலிடத்தை இதற்கு கொடுக்கலாம். இவற்றின் வரலாற்றைப் பொறுத்தவரை, இதன் இனமானது பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து வந்தவை. இவை நடுத்தர அளவிலான உடலுடன் மிகவும் புத்திசாலித்தனமான இனமாகும். இது பயிற்சி பெறத்தக்க ஒரு இனமாகும். இவற்றின் ஆயுட்காலம் 8-15 வயதுக்கு இடைப்பட்டதாகும். இந்த பிடிவாதமான, துணிவுமிக்க, புத்திசாலியான நாய்களை நீங்கள் நேசித்தால், உங்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும். உங்களுடன் நட்பாக இருக்க ஆசைப்படும். வயது வந்த ஆண் நாய் ஒன்றுக்கு 16-30 கிலோ எடையும், பெண்களின் எடை 14- 27 கிலோவும் ஆகும். உயரம் ஆணில் 44-53 செ.மீ மற்றும் பெண்ணில் 43-50 செ.மீ வரை இருக்கும். அவை கறுப்பு, வெள்ளை, பழுப்பு போன்ற நிறங்களில் இருக்கும்.
2. ROTTWEILER
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவை ஒருவகையான நாய் இனமாகும். இவற்றை முற்காலத்தில் இறைச்சிக்கடைகளின் பாதுகாப்பிற்கும் தோட்டங்களின் பாதுகாப்பிற்கும்தான் வைத்துக்கொண்டனர். இவற்றின் ஆயுட்காலம் 8-10 ஆண்டுகள் மட்டுமே. மேலும் இவை பலம்வாய்ந்தவை என்பதால் இவற்றை வீட்டின் பாதுகாப்பிற்காக வளர்க்கவும் முடியும். இது தன் எஜமானை மிகவும் நேசிக்கும். சராசரியாக, றொட்வைலர் ஆண் 61-69cm உயரத்திற்கும் பெண் 56-63cm உயரத்திற்கும் இடையில் இருக்கும். எடையால், பெண் 35-48 கிலோ எடையும், ஆண் 50-60 கிலோவும் எடையுள்ளதாக இருக்கும். இவை குழந்தைகளைக் கண்டால் மோசமாக நடந்துகொள்ளும் என்று கூறப்பட்டாலும் இவற்றைவிட மோசமாக செயற்படும் நாய்கள் உண்டு. இவை பொலிஸ் மற்றும் உளவுத்துறையிலும் பயிற்சி பெற்று வருகின்றன.
3. GERMAN SHEPHERD
மிகவும் அழகான தோற்றம் கொண்ட நாய் இது. பெயரில் உள்ளது போலவே இவை ஜெர்மனி நாட்டை சேர்ந்தவை. இவற்றை பெரியளவிலான வேலைகளுக்கே பயன்படுத்தினர். ஆனால் இன்று அதிகமாக பொலிஸ் நாயாகத்தான் காணப்படுகின்றன. இது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கீழ்ப்படிதலுள்ள ஒரு நாய் இனமாகும். அவற்றின் நுண்ணறிவு மற்றும் நினைவாற்றல் காரணமாக, அவை கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இது வீட்டில் வளர்க்கத்தகுந்த சிறந்த வகை நாயாகும். தனது எஜமானுடன் நட்பாக இருக்கும். இவை பொதுவாக கறுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஒரு முதிர்ந்த பெண் நாயின் எடை 22-33 கிலோ வரை இருக்கும். மேலும் ஆண் நாயின் எடை சுமார் 30-40 கிலோ. அத்தோடு, ஆண் நாய் 26 அங்குல உயரத்தையும், பெண் நாய் 24 அங்குல உயரத்தையும் அடையும். இவற்றின் ஆயுட்காலம் 9 முதல் 12 ஆண்டுகளாகும்.
4. DOBERMANN PINSCHER
இதுவும் ஒரு ஜேர்மனி தயாரிப்புதான். உலகிலுள்ள பலம்பொருந்திய நாய்களின் பிறப்பிடம் ஜேர்மனி என்பதில் ஆச்சரியமில்லை. அந்த நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரை நம்மால் மறக்க முடியுமா? நீளமான கால்கள் உள்ள இவை மிகவும் பலமிக்கவை ஆகும். முதலில் இவை பாதுகாப்பிற்காகவே வளர்க்கப்பட்டன. நம்பிக்கை மிகுந்த புத்திசாலியான நாய் இனம் என்பதால் பொலிஸ் துறையில் இவற்றையும் வைத்திருக்கின்றனர். வெள்ளை, கறுப்பு, பழுப்பு நிறங்களில் உள்ள இவற்றின் சராசரி உயரம் ஆணுக்கு 66-72cm மற்றும் பெண்ணுக்கு 61-68cm ஆகும். ஆண் நாய் சுமார் 35 கிலோவும், பெண் நாயின் எடை சுமார் 35 கிலோவும் இருக்கும். நன்கு பயிற்சி பெறாவிட்டால் மிகவும் மோசமாக இருக்கும் ஒரு இனமாகும். நீங்கள் விரும்பினால் அதை வீட்டில் வளர்க்கலாம். ஆனால் இவற்றை ஒருவர் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
5. BULLMASTIFF
உருகிய பிளாஸ்டிக் வடிவதை போல் இருக்கும் முகத்தை கொண்ட இவை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவை. இவை கடந்த காலங்களில் தோட்டப் பராமரிப்பில் பணிபுரிந்த மிகவும் பாதுகாப்பு மிக்க, விசுவாசமான மற்றும் அன்பான நாய் வர்க்கம். ஆனால் அது மோசமாகிவிட்டால், மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறும். சிறு பிள்ளைகளுடன் விரைவில் பழகிக்கொள்ளும். இவற்றினால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதனாலே இவற்றை பாதுகாப்பு மிக்க நாய்களாக பார்க்கின்றனர். இவற்றின் ஆயுட்காலம் 8-10 ஆண்டுகள். வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இவை காணப்படும். சராசரியாக, ஆண் நாயின் எடை 50-59 கிலோ வரை இருக்கும். பெண் நாயின் எடை சுமார் 44-54 கிலோ. உயரம் சுமார் 68 செ.மீ.
6.SIBERIAN HUSKY
இவை மிகவும் அழகான நாய் இனமாகும். பெயருக்கேற்ப இது சைபீரியாவிலிருந்து வருகிறது. இது உலகின் மிக பயங்கரமான நாய்கள் பட்டியலில் வரும் ஒரு நாயாகும். கறுப்பு, வெள்ளை, சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் உள்ள இந்த நாய்கள், மற்ற நாய்களுடன் மற்றும் குழந்தைகளுடன் நண்பர்களாக இருக்கும்போது சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புத்திசாலித்தனமான நாய்களின் பட்டியலில் சேர்க்கக்கூடிய மற்றொரு நாய் இனம் இதுவாகும். மிகவும் செயற்பாட்டு மற்றும் வலுவான இனமாகும். இவற்றின் ஆயுட்காலம் 12-14 ஆண்டுகள். உடல் தடிமனான உரோம அடுக்குடன் மூடப்பட்டிருக்கும். இவைகளில் ஆண் நாய் 60 செ.மீ உயரமும் பெண் நாய் 56 செ.மீ உயரமும் கொண்டவை. அதிகபட்ச எடை 23-27 கிலோ இருக்கும்.
7. BOXER
இவை வேட்டையாடுவதற்கு பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற நாய்கள். இவை வலுவான தாடைகளுக்கு பெயர் பெற்றவை. குழந்தைகளிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதால் இவற்றை மிக மோசமான நாய் பட்டியலில் சேர்த்துள்ளனர். மேலும், வலுவான தாடைகளால் பிடிக்கப்பட்ட ஒன்றை கைவிடுவது மிகவும் அரிது. இந்த நாய் இனம் அடிக்கடி நோய்வாய்ப்படும். பாதுகாப்பு மற்றும் வேட்டைக்கு ஏற்ற நாயாகும். இவற்றின் உயரம் பெண் நாய்க்கு சுமார் 53-61cm மற்றும் ஆண் நாய்க்கு 56-64cm ஆகும். எடை அதிகபட்சம் ஆண் நாய்க்கு 37 கிலோவும் பெண் நாய்க்கு 32 கிலோவும் இருக்கும். இயற்கையாகவே அவை நுட்பமான, குறுகிய முடி அடுக்கு கொண்டவை. இவை 9-15 ஆண்டுகளுக்கு இடையில் வாழ்கின்றன.