எமது நாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு கௌரவ பரீட்சையை போல மாறிவிட்டது. குழந்தைகளை விட இப்பரீட்சை பெற்றோர்களுக்கு அவசியமாகிவிட்டது. சில குழந்தைகள் தமது பெற்றோர் விரும்பிய புள்ளிகளை பெற்றிருப்பார்கள். இன்னும் சிலர் குறைந்த புள்ளிகளைப் பெற்று திட்டு வாங்கிக் கொண்டிருப்பர். இருப்பினும், நாங்கள் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளைப் பற்றி பேசவில்லை. இந்த புலமைப்பரிசில் பரீட்சையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது 2000ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த குழந்தைகளே. அதற்கு முன்னர் பிறந்த குழந்தைகளின் இளமைக்கால அனுபவங்கள் இப்பிள்ளைகளுக்கு இல்லாமல் போயிருக்கலாம். பரீட்சை போட்டியில் சிறுவர்களை தள்ளிவிட முன் அவர்களது மனோநிலையிலும் சற்று கவனம் செலுத்தவும். அதன்படி சிறு பராயத்தில் குழந்தைகள் அனுபவிக்கவேண்டிய சில விடயங்கள் தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்.
விளையாட்டு வீடு
இன்றைய குழந்தைகளிடம் காண அரிதானதொரு விளையாட்டு இது. பிரத்தியேகமாக பெண்குழந்தைகளே இதனை அதிகம் விளையாடுவார்கள். அண்ணன் தங்கை இருக்கும் வீடு என்றால் அனைவரும் விளையாடியிருப்பார்கள். அம்மா அப்பாவின் உதவியுடன் கம்புகளால் நடப்பட்டு சாரிகளினால் சுற்றப்பட்டு ஒரு பழைய பாயினையும் கீழே விரித்து, ஒரு அறைபோல காணப்படும். இப்படி விளையாடிய வீட்டுக்கட்டமைப்பு பற்றி சொல்லும்போது சிலருக்கு விளையாடிய இடம்கூட ஞாபகம் வரும். அம்மா அப்பா கதை சொல்லி விளையாடிய அந்நாட்களில் விசேடமாக புத்தகத் தாள்களால் செய்யப்பட்ட பணமும் இருக்கும்.
பட்டம் விட்ட காலங்கள்
இது ஆண் சிறார்களிடம் பிரபலமானது. ஜூலை மாதம் ஆரம்பித்ததும் பருவக்காற்றும் ஆரம்பித்து விடுவதால் சிறுவர்கள் பட்டம் விட ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் காணப்படும் கழிவுப்பொருட்கள் முதலாவற்றைக் கொண்டு பட்டங்களை செய்வார்கள். ஆனால் இன்று காலி முகத்திடல் சென்றால் அங்கு அழகழகான பட்டங்களை விற்க வைத்திருப்பார்கள். ஆகவே அங்கு சென்றால் மட்டும் அதனை பறக்க விட்டு விளையாடுகிறார்கள். இன்று பட்டம் செய்து விளையாடும் சிறுவர்களை காண்பது மிகவும் அரிதாகிவிட்டது.
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு என்பது முன்னர் சிறுவர்களிடம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சிப்பிகள், முத்திரைகள், பறவை சிறகுகள் இவை போன்ற விடயங்கள் அதிகமாக சேகரிக்கப்பட்டன. ஆனால் இன்றைய குழந்தைகள் பொழுது போக்குக்காக அவர்கள் தொலைபேசியையே எதிர்பார்க்கின்றனர்.
ஆற்றில் குளிப்பது
பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்து, அம்மாவின் மிகவும் சுவையான உணவுகளுக்குப் பொறுப்பான குழந்தைகள் அடுத்த நொடியில் வீட்டில் இருக்க மாட்டார்கள். ஆற்றில் மீன்பிடிப்பது, சேற்றில் ஓடுவது, ஆழ்கிணத்தில் குளிப்பது போன்றன முன்னர் குழந்தைகளிடம் இருந்தன. கால்வாய் சூழலை அழித்த பூச்சிக்கொல்லிகள் காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு இன்று யாரும் அவ்வாறு செல்வதில்லை.
எல்லே விளையாட்டும் கிரிக்கெட்டும்
நெல் அறுவடை செய்யப்பட்ட பின்னர் அதை விளையாட்டு மைதானம் போல பயன்படுத்தி விளையாடுவார்கள். ஒவ்வொரு மாலையும் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதையோ அல்லது ஒரு ஆட்டத்தை விளையாடுவதையோ நான் தவறவிடவில்லை. இப்போதெல்லாம் பல கிராமங்களில் நெல்லும் இல்லை சிறுவர்களும் இல்லை விளையாட்டும் இல்லை.
வெசாக் பொசன்
வெசாக் – பொசன் என்றாலே சிறுவர்கள் வெசாக் கூடுகளைக் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தற்காலத்தில் கடைகளில் கம்பு வாங்கி செய்யப்பட்டவை அல்ல இந்தக் கூடுகள். பற்றைகளுக்கு சென்று மூங்கில்களை வெட்டி, இறப்பர் தோட்டத்திலிருந்து இறப்பர் குழி எடுத்து வந்து ஒட்டி, வர்ணங்களால் நிறம் பூசி அழகழகான வெசாக் கூடுகளை செய்வார்கள். அடுத்த வீட்டைவிட தன் வீட்டில் அழகான வெசாக் கூடுகளை செய்ய வேண்டுமென்பதில் சிறுவர்கள் ஆர்வமாக செயற்படுவார்கள். வெசாக் தினத்தன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விதவிதமான வெசாக் கூடுகள் தொங்கும். அத்தோடு தமது நண்பர் கூட்டத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வெசாக் பார்ப்பார்கள். சிறுவர்களை வெளியில் அனுப்பும் தாய்மார்களுக்கும் எவ்வித அச்சமும் காணப்படவில்லை. அன்றைய சூழல் அவ்வளவு அழகானது. இவை இன்றைய சிறுவர்களிடம் காணாமல் போயுள்ளது.