பச்சை குத்துதல் உண்மையில் சண்டித்தனமோ அல்லது பொறுப்பற்றவர்கள் செய்யும் செயலோ அல்ல. சிலர் அதனை ஒரு ஞாபகார்த்த அடையாளமாக உபயோகிக்கின்றனர். குறிப்பாக பொலிவூட் நடிகர்கள் பச்சை குத்தியுள்ளதன் பின்னணியில் உள்ள கதைகளை பற்றி அதிகமானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இன்றைய கட்டுரையில் நாம் அதுபற்றி குறிப்பிடவுள்ளோம்.
சஞ்சய் தத்
சஞ்சய் தத் என்பவர் பொலிவூட் துறையில் உள்ள பெரிய பச்சைக்குத்தும் களஞ்சியம் என்றால் தவறில்லை. இதனை பற்றி தனியாக ஒரு தொடரில் குறிப்பிடும் அளவுக்கு அவரது உடலில் உள்ள பச்சை குத்தலில் கதைகள் பல பொதிந்துள்ளன. தோள்பட்டை, கை, நெஞ்சுப்பகுதி என அதிகமான இடங்களில் பச்சை குத்தியுள்ளார். இவரது நெஞ்சில் உள்ள உருது மற்றும் தேவநாகர மொழியில் அமைந்த பச்சை அவரது பெற்றோர்களின் பெயர்களை குறித்து நிற்கின்றது. இடது பக்க தோளில் அமைந்துள்ள பச்சை அடையாளம் ஓம் நமசிவாய என்ற சிவபெருமானின் வாசகத்தை குறித்து நிற்கின்றது. வலதுபுற தோளில் குத்தப்பட்ட பச்சை அதிஷ்டத்திற்காக குத்தப்பட்டது என கூறியுள்ளார். இது மட்டுமின்றி தனது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை குறிப்பதற்காக மேலும் பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா சோப்ரா
பொலிவூட் போலவே ஹோலிவூட்டிலும் தனது பெயரை பொரித்து வருபவரே பிரியங்கா சோப்ரா. இவரது வலதுபுற கையில் மணிக்கட்டு அருகில் பச்சை குத்தியுள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த பச்சயத்தில் இருப்பது ‘DADDIES LIL GIRL’ [அப்பாவின் சிறிய பெண்குழந்தை] என்பதாகும். பிரியங்கா சோப்ரா தனது தந்தையுடன் அதிகமான அன்பை பெற்றிருந்தவர். இவர் தனது ஆரம்ப நடிப்புத்துறையின் போது தன் தந்தையுடன் மேடைகளுக்கு வந்திருந்தார். 2012 ஆண்டளவில் அவரது தந்தை புற்றுநோய்க்கு உள்ளானார். அந்த சந்தர்ப்பத்தில் தனது தந்தையின் கைகளால் குத்தப்பட்ட பச்சயமே இது. 2013 ஆம் ஆண்டளவில் இவரது தந்தை இறந்து விட்டார்.
அக்ஷய் குமார்
90களில் பொலிவூட்டில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக்கொண்டு இன்றளவும் முதற்தர நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை கொண்டுள்ள அக்ஷய் குமாரும் தனது உடலில் பச்சயங்களை குத்தியுள்ளார். தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்யாததால் தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களை தன் உடலில் பொரித்துள்ளதாக கூறுகிறார். தனது உடலில் AARAV மற்றும் NITARA என்று பச்சைக் குத்தியுள்ளார். இவை தனது குழந்தைகளின் பெயர் என அக்ஷய் குறிப்பிடுகின்றார். மேலும் இடது தோளில் குத்தியுள்ள பச்சையில் காணப்படும் TINA என்பது அவரது மனைவியின் செல்லப்பெயராகும்.
கங்கனா ரணாவத்
பொலிவுட்டில் சர்ச்சைக்குரிய திறமையான ஒரு நடிகையான கங்கனாவின் கழுத்தின் பின்புறத்தில் காணப்படும் பச்சையம் மிகவும் அழகாக இருக்கும். அதில் ஒரு வாள், இரண்டு தேவர்களின் சிறகுகள் மற்றும் ஒரு கிரீடம் அமைந்திருக்கும். இதிலுள்ள கிரீடம், தான் ஒரு ராணி என்றும் இவரது சினிமாத்துறையில் பிரபலமடைய வைத்த QUEEN திரைப்படத்துடன் சம்பந்தப்பட்டது என்றும் கூறியுள்ளார். அந்த இரண்டு சிறகுகளும் தனது வாழ்வின் ஆசைகளை குறிக்கின்றதெனவும் நடுவில் உள்ள வாள் தனது வாழ்வின் கடினத்தன்மையை குறிக்கின்றதாகவும் கூறியுள்ளார். காரணம் இவர் திரையுலகத்துடன் தொடர்பற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.
தீபிகா படுகோன்
பொலிவூட்டில் அதிகமாக பேசப்பட்ட பச்சையத்திற்கு சொந்தக்காரர் பிரபல நடிகை தீபிகா படுகோன். தீபிகா படுகோனின் கழுத்தின் பின்புறத்தில் இந்த பச்சையம் காணப்படுகின்றது. இதன் அர்த்தம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் குறிப்பிட்டிருக்கும் RK எனும் சொல்லின் அர்த்தம் ரன்பீர் கபூரை குறிக்கின்றது. இது இருவரும் காதலிக்கும் காலத்தில் காதலின் சின்னமாக குத்தியது. பின்னர் ரன்வீர் சிங்க் உடன் காதல்வயப்பட்டதின் பின்னரும் அதனை அழிக்காமல் வைத்திருந்தார். பிறகு இது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றெண்ணியோ தெரியவில்லை அண்மைய காலமாக அவரது கழுத்தில் குறித்த பச்சையத்தை காணவில்லை.
ரன்பீர் கபூர்
தீபிகாவின் சர்ச்சைக்குரிய பச்சையத்தை போலவே இவரது பச்சையமும் அதிக கருத்துக்களை முன்பு பெற்றிருந்தது. BOMBAY VELVAT படத்தின் படப்பிடிப்புகளின் போதே இதனை பற்றிய தகவல்கள் கசிந்தன. இவரது வலது கையில் குத்தப்பட்டிருந்த இந்த பச்சையத்தில் தேவநாகர மொழியில் “ஆவாரா ” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறான வழியில் செல்லும் சுதந்திரம் என்று பொருள்படுகின்றது. ரன்பீர் கபூரின் தாத்தா ராஜ் கபூரின் 1951 இல் வெளியாகிய பிரபல திரைப்படம் ” ஆவாரா “. ஆகவே தனது தாத்தாவின் நினைவாக குத்தப்பட்ட பச்சை என்பதாக சிலர் கூறியுள்ளனர்.
ஸாயிப் அலி கான்
ஸாயிப் அலி கானின் இடது கையில் குத்தப்பட்டுள்ள இந்த பச்சையம் தேவநாகர மொழியில் பதிக்கப்பட்டது. இது தனது முன்னாள் காதலியும் தற்போதைய மனைவியுமான கரீனா கபூரின் பெயராகும். இந்த பச்சையத்தை தனது மனைவியையும் தனது பெண்பிள்ளை தைமூரையும் தவிர வேறு யாரையும் தொட விட மாட்டாராம். பச்சை குத்தி பின்னர் அதனை விரைவில் அழித்துக்கொள்ளும் இந்த கலையுலகில் வாழும் கரீனா-ஸாயிப் தம்பதியினர் 2012 முதல் இன்றும் அன்புடனும் ஆதரவுடனும் ஒருவொருக்கொருவர் வாழ்கின்றனர்.