பிரச்சினைகள் இன்றி தொழிநுட்பங்களை பயன்படுத்துவது எப்படி?

புதிய தொழிநுட்பங்களால் அல்லது தொழிநுட்ப உபகரணங்களால் மனித உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படக்கூடிய பாதகங்களைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகின்றோம்.  ஆனாலும் அதன் பாவனை அதிகரித்தே செல்கின்றன. தொழிநுட்பங்களை பயன்படுத்துவது குற்றமில்லை. ஆனால் அதன் பாவனையால் எமது அன்றாட வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் சமூகத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டால் அது நல்லதல்ல என்பதையே கூற வருகின்றோம். ஆகவே பிரச்சினையில்லாமல் தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்களை  உங்களுக்கு தருகின்றோம்.

 

SMARTPHONE

இதுதான் சமூகத்தில் பலராலும் திட்டுவாங்கும் ஒன்று. உண்மையில் இதனால் எமது வாழ்க்கை சங்கடத்தில் சிக்கியுள்ளதா என்ற  கேள்விக்கான பதில் சிறிது சிக்கலானதுதான். எமது வாழ்க்கையில் தற்போது ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதனால் தகவல் தொழிநுட்பம் எமது கையளவு வந்துள்ளது. உதாரணமாக நாம் பஸ்ஸில் பயணித்துக்கொண்டே நாட்டு நடப்புகளையும் உலக நடப்புகளையும் தெரிந்துகொள்கின்றோம். ஆனால் இதற்கு அடிமையாகி விடக்கூடாது. உதாரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போது, வீட்டிற்கு நண்பர்கள் வந்துள்ளபோது, இரவு நித்திரைக்கு செல்லும்போது போன்ற சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது.

 

TELEVISION 

தொலைக்காட்சிப் பெட்டியால் நேரம் விரயமாவதாகவும் வேலைகள் கெட்டுப்போவதாகவும் கூறுவார்கள். எந்நேரமும் டிவிக்கு முன் அமர்ந்து எதையாவது பார்த்துக்கொண்டே இருந்தால் பிரச்சினைதான். வீட்டில் PEO TV அல்லது DIALOG TV அல்லது வேறு ஏதாவது ஒரு CABLE TV இருப்பது பரவாயில்லை. என் என்றால் பழைய ANTENNA களுக்கு விடை கொடுக்க வேண்டுமே. டிவி என்பது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டிய ஒன்றல்ல. ஏதாவது தேவையான முக்கிய விடயங்களை பார்க்க பயன்படுத்தலாம். கேபிள் டிவிகளில் 100கஇற்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளன. அவற்றின் மூலம் கலைநிகழ்ச்சிகள், உலக செய்திகள் போன்றவற்றினை பார்க்கலாம். ஆனால் எதை செய்தாலும் குறுகிய நேரத்தில் மட்டுமே பார்வையிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

SMARTWATCH  மற்றும் FITNESS TRACKER

SMARTWATCH என்பது இன்றைய காலத்தில் வேகமாக பரவிவரும் ஒரு கருவியாகும். அதிக நேரத்தில் ஸ்மார்ட்போனால் இயக்க கூடிய முறையில் உள்ள SMARTWATCH ஐ தான் அதிகமானோர் வாங்குகிறார்கள். உண்மையில் இது அவ்வளவு தீங்கு விளைவிக்கக்கூடியது அல்ல. ஆனால் இதனை பெருமைக்காக அன்றி உண்மையில் உடற்பயிற்சிக்காக பாவிப்பதாக இருந்தால் நல்லதாகவே கருத வேண்டும்.

 

E BOOK READER

டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களால்தான் அதிகமானோர் புத்தகங்களை படிக்கும் பழக்கத்திலிருந்து விலகிச்சென்றனர். ஒரு உண்மையான புத்தக ஆர்வலராக இருப்பின், அவர் ஒரு E BOOK READER ஐ வைத்திருப்பது சிறந்தது. எங்கும் கொண்டு செல்வது எளிது. முழு நூலகத்தையும் இதனுள் அடக்கிவிடலாம். ஆனால் இந்த நூலகத்தினுள் வாசிக்கும் நீங்களே அதன் பொறுப்பாளரும்கூட. இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய நூலை படிக்கவும் பார்க்கவும் முடியும். இது புத்தகப்பிரியர்களுக்கு ஏற்றதாக அமையும்.

 

VIDEO GAMING CONSOLE

வீடியோ கேம் என்ற விடயம் இன்றைய சிறுவர்கள் மாத்திரமல்ல, வளர்ந்தோர் மத்தியிலும் வேகமாக பரவிவருகின்றது. இதனால் பெற்றோர் கடிந்துகொள்கின்றனர். இதை விளையாட ஆரம்பித்தால் போதும் ஊண் உறக்கம் இன்றி விளையாடுவதால் ஏதோ போதைக்கு அடிமையானவரை போல ஆகிவிடுவீர்கள். சுய கட்டுப்பாட்டுடன் விளையாடினால் பரவாயில்லை. அதை மீறிச் சென்றால் பிரச்சினையும் ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக, பகலில் கடினமாக உழைக்கும்போது அல்லது ஏதாவது உடல் சோர்வின்போது சுமார் அரை மணிநேரம் விளையாடுவது பரவாயில்லை. ஆனால் அதைத்தவிர்ந்து விளையாடுவோரிடம் நேரக் கட்டுப்பாடு அவசியம். இதைக் கடைப்பிடித்தால் GAMING CONSOLE  ஒரு தீங்கான விடயமல்ல.

 

SMART SPEAKERS

இது சாதாரணமாக வீடுகளில் காணக்கூடிய அளவிற்கு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. ஆனால் இதன்மூலம் சிறந்த பயனை பெறமுடியும். இதற்கு எமது குரல் மூலம் கட்டளை பிறப்பிக்க முடியும். ஆனால் இதன் பாவனை இன்னும் அதிகரிக்கவில்லை. ஆகவே இதன் பாதகங்களை தற்போது கூறமுடியாதுள்ளது. இதற்கு இன்னும் மனிதர்கள் அடிமையாகவும் இல்லை. எவ்வாறாயினும், எதுவும் அளவோடு இருந்தால் நன்மையே.