ஐஸ்கிரீமை யார்தான் விரும்பாமலிருப்பார்கள்? ஐஸ்கிரீமை சிறியோர் முதல் பெரியோர்வரை அனைவரும் விரும்புவர். ஆனால் கடைகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீம் வகைகளே உள்ளன. அதனால்தான் இன்று நாம் உங்களுக்கு வீட்டிலே செய்யக்கூடிய சில ஐஸ்கிரீம் குறிப்புகளை வழங்கவுள்ளோம். இதனை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.
தரப்பூசணி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- விதைகளை அகற்றிய தர்ப்பூசணி – 2 கோப்பை
- சீனி – 4 மேசைக் கரண்டி
- வெள்ளை கிரீம் – 1 கோப்பை
தர்ப்பூசணி துண்டுகளை எடுத்து சீனியை போட்டு 2 நிமிடங்கள் நன்கு BLENDER இல் கலக்க விடவும். பிறகு அதனுடன் வெள்ளை கிரீமையும் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் கலக்கவும். பிறகு சுத்தமான கொள்கலனில் போட்டு 12 மணித்தியாலங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
ஸ்டோர்பெர்ரி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- ஸ்டோர்பெர்ரி – 200 கிராம்
- மில்க்மெயிட் – 2 கோப்பை
- ஸ்டோர்பெர்ரி எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- வெள்ளை கிரீம் – 2 கோப்பை
ஸ்டோர்பெர்ரி பழங்களை எடுத்து BLEND பண்ணிக்கொள்ளவும். அந்த கலவையை எடுத்து 30 நிமிடங்கள் வரை குளிரூட்டியில் வைத்து எடுக்கவும். அடுத்து ஒரு கோப்பையில் வெள்ளை ஐஸ்கிரீமை போட்டு நன்கு கலக்கவும். அதன் பிறகு அதில் மில்க்மெயிடை போட்டு மீண்டும் கலக்கவும். இதனுள் நாம் முன்பு செய்த ஸ்டோர்பெர்ரி கலவையையும் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை 6 மணித்தியாலங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்.
மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- நன்கு பழுத்த மாம்பழங்கள் – 3
- வெள்ளை ஐஸ்கிரீம் – 500 மி.லீ
- மில்க்மெயிட் – 1 சிறிய டின்
- வணிலா எசன்ஸ் – சிறிதளவு
வெள்ளை ஐஸ்கிரீமை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்தவுடன் அதனுடன் மில்க்மெயிட் சேர்த்து நன்கு கலக்கவும். மாம்பழங்களை சிறிது சிறிதாக வெட்டி அரைத்துக் கொள்ளவும். இந்த மாம்பழ கலவையுடன் முதலில் செய்த கலவையையும் சேர்த்து வணிலா எசன்ஸையும் சேர்த்து கலக்கவும். விரும்பினால் மாம்பழத்துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்து பிரட்டிக்கொள்ளவும். அதனை ஒரு கோப்பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். உண்பதற்கு முன்னர் மீண்டும் கலக்கிவிட்டு சாப்பிடுங்கள்.
அவகாடோ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- நன்கு பழுத்த அவகாடோ – 1
- மில்க்மெயிட் – 1 டின்
- எழுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- கெட்டியான ஐஸ்கிரீம் அல்லது வெள்ளை ஐஸ்கிரீம் – 2 கோப்பை
அவகாடோ துண்டுகளுடன் எழுமிச்சை சாறு, உப்பு மற்றும் மில்க்மெயிட் சேர்த்து BLEND செய்யவும். பின்னர் வெள்ளை ஐஸ்கிரீமுடன் அந்த கலவையை கொட்டி நன்கு கலக்கவும். பின்பு அதனை 12 மணித்தியாலங்கள் வரை குளிரூட்டியில் வைத்து எடுத்த பின் சாப்பிடலாம்.
வாழைப்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- மில்க்மெயிட் – சிறிய டின் 1
- சீனி – 1 / 4 கோப்பை
- ஜெலட்டின் தூள் – 1 தேக்கரண்டி
- வாழைப்பழ எசன்ஸ் – சிறிதளவு
- நன்கு அரைக்கப்பட்ட வாழைப்பழங்கள் – 8 – 10
முதலில் மில்க்மெயிடை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதே அளவு நீர் சேர்க்கவும். ஜெலட்டினுக்கு 3 மேசைக்கரண்டி நீரை சேர்த்து கலக்கி அதனை 10 நிமிடங்கள் வரை வைத்து பின் அதனுடன் மில்க்மெயிட் கலவையை சேர்க்கவும். இதற்குள் வாழைப்பழ கலவையுடன் சீனி, வாழைப்பழ எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்தெடுத்து சாப்பிடவும்.
தூரியான் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
- விதை அகற்றி அரைத்த தூரியான் – 8 – 10 சுளைகள்
- மில்க்மெயிட் – 1 டின்
- வெள்ளை ஐஸ்கிரீம் – 1 / 2 கோப்பை
அரைத்த தூரியானுடன் வெள்ளை ஐஸ்கிரீமை சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் மில்க்மெயிடையும் சேர்க்கவேண்டும். இதனை 1/2 மணித்தியாலம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்பு மீண்டும் எடுத்து நன்கு கலக்கிவிட்டு 12 மணித்தியாலங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.