பெண் என்றால் பக்குவமாக, பூவும் பொட்டுடன், பார்ப்பதற்கு சக்தியின் சொரூபமாக இருப்பார் என்றே காலாகாலமாக கூறி வருகின்றனர். ஆனால் கோபம் வந்தால் பத்ரகாளி ஆகிவிடுவர் என்றும் கூறுவர். ஆனால் அவர்களில் சிலர் வாயாடிகளாக இருப்பார்களே தவிர செயலில் பூச்சியமாகவே இருப்பர். எதற்கெடுத்தாலும் தமது குரலை உயர்த்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சில வேளைகளில் பெண்கள் தமது கணவருடன்கூட ஏட்டிக்கு போட்டியாக இருப்பார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் பிரகாசிக்கும் நிலையில், இவை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன. இவ்வாறான பெண்களை திருமணம் செய்தவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான வழிகளையே இன்று தரவுள்ளோம்.
கணவன் என்பவர் மனைவியின் தெய்வமா?
எதற்கெடுத்தாலும் சண்டை போடும் பெண்களுடன் வாழ்பவர்கள் “நானே எனது மனைவிக்கு தெய்வமாக இருக்கக்கூடியவன்” என்ற எண்ணத்தை மனதிலிருந்து நீக்கிக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து மனைவியுடன் அதிகாரமாக நடப்பீர்களானால் சட்டியினால் அடிவாங்குவது நிச்சயம். அதனால் இவர்களுடன் சம்பிரதாய முறையிலும், கணவன் என்ற அதிகாரத்திலும் செல்வதை குறைத்துக்கொள்ளவும்.
கணவன் மனைவியின் அடிமையா?
சண்டைக்கார மனைவியுடன் வாழும்போது அவர்களுக்கு அடிமைபோல் வேலை செய்யவும் கூடாது. அவர்கள் எதிர்பார்ப்பது கணவன் தன் மீது அதீத அன்பை செலுத்த வேண்டும் என்பதே ஆகும். அதை தவறாக விளங்கிக்கொண்டு அவர்களுக்கு பயந்து நடக்கக் கூடாது. அவர்களை பிறரிடம் விட்டுக்கொடுக்கவும் கூடாது. அவர்களுக்கு அடிமையாக வாழ்வதற்கு பதிலாக அவர்களுக்கு அன்பை செலுத்துங்கள்.
தவறு என்றால் தவறுதான்
இவர்களுடன் வாழும்போது உங்களால் நிகழும் தவறுகளுக்கு நீங்கள் மனமுவந்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையானால் வீட்டு சண்டை வீதிச்சண்டையில் போய் முடியும். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவர்களை இவர்களுக்குப் பிடிக்கும். அதேபோல் தவறு செய்தவர்களுடன் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள். ஆகவே ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.
பொறுமை பொறுமை!
சிறு விடயமாயினும் அதற்கு சண்டையிடும் பெண்களுடன் பொறுமையாக நடப்பது முக்கியம். அவர்களுக்கு உங்கள் மீது கோபம் வந்துவிட்டால் அந்த கோபத்தை அதிகரிக்கும் விடயங்களை செய்யாதீர்கள். உதாரணமாக அவர்கள் கோபத்தில் இருக்கும்போது பேசுவது பிடிக்காவிட்டால் கோபம் தணிந்தவுடன் பேசுங்கள். மாறாக கோபத்துடன் இருக்கும் வேளையில் பேசச் சென்றால் அவ்வளவுதான். அதேபோல கோபத்திலும் சிரிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளன. அவை உங்களது மனைவியின் கோபத்தை குறைக்கும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். அது பொருத்தமாக இருக்கும்.
எனது உயிரே…. சண்டைப்போட வேண்டாம்
பத்து பேரின் கோபம் ஒருவருக்கு வந்ததைப்போன்ற அளவிற்கு கோபம் கொள்ளும் பெண்களும் உள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் யாராக இருந்தாலும் அந்த இடத்தில் அவரை வெல்ல முடியாது. உதாரணமாக வீதியில் வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது தவறுதலாக இன்னொரு வாகனத்துடன் மோதிவிட்டால் உடனடியாக கீழிறங்கி தன் மீதுள்ள குறைகளை எடுத்துக்கூறி புரியவைக்க முயல்வார்கள். இதே தவறு மறுபக்கம் நடந்திருந்தால், அவரை உண்டு இல்லை என செய்துவிட்டே அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வார்கள்.
ஆகவே தனது மனைவியை அங்கிருந்து சிறிது தள்ளி வைத்துவிட்டு தவறிழைத்தவருடன் பொறுமையாக கதைத்தால் நட்டப்பணத்தை சற்று அதிகமாகவே பெறலாம்.
நீதான் சரி அன்பே..!
தனது மனைவி கோபத்தில் இருக்கும்போது எது சரி எது பிழை என்பது பற்றி கதைக்காதீர்கள். அது கோபத்தை மேலும் அதிகரிக்கும். அவ்வாறு கதைக்கும்போது அவர்களை பிழை என சுட்டிக்காட்டுவதால் அவற்றை சகிக்க முடியாத அவர்கள் அதனை மறுத்து உங்களுடன் சண்டைக்கு நிற்பார்கள். அதனால் அவர்கள் கோபத்தில் இருக்கும் போது அவர்களுடன் சரி பிழை பற்றி கதைப்பது அவ்வளவு நல்ல விடயம் அல்ல. அதற்கு பதிலாக சற்று பொறுத்திருந்து கதைப்பது நன்று. கதைக்கும்போது அவர்களை குறைகூறாமல் பொறுமையாக விளக்க முற்படுதல் நன்று.