ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்போது கவனத்திற்கொள்ளக் கூடாத விடயங்கள்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பவர் நாட்டின் பிரதம குடிமகன் ஆவார். ஆகவே அப்பதவிற்கு சிறுபிள்ளைத்தனமான ஒருவரை அமர்த்த முடியாது. நன்கு சிந்தித்து, நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய, தனிப்பட்ட விருப்பம் அற்ற ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்ததோர் நாட்டை உருவாக்குவதில் உள்ள முக்கிய படிகளில் ஒன்றாக, அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவு அமைகின்றது. ஆனால் நாட்டின் சிறந்த குடிமகனை தேர்ந்தெடுக்கும் போது கருத்திற்கொள்ளக்கூடாத விடயங்களை மக்கள் ஆராய்கின்றனர். அதனால்தான் நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்கக்கூடாத விடயங்களை பற்றி நாங்கள் பேசவுள்ளோம். இவற்றை முடிந்தளவு குறைத்துக்கொண்டால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும்.

 

1. குழந்தைகளை முத்தமிடுதல்

அரசியல்வாதிகள் எங்கு சென்றாலும் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுவதை நாம் பரவலாக அவதானிக்கின்றோம். அது உண்மையில் குழந்தைகளின் மீதுள்ள பாசத்தினால் என்றால் பரவாயில்லை. ஆனால் கேமராக்களுக்கும் மக்களின் பார்வையை திருப்புவதற்கும் உபயோகிக்கும் உத்தியாக இதனை பலர் பயன்படுத்துவதை நாம் அவதானிக்கின்றோம். முத்தமிடுவதை வைத்து மாத்திரமே இது குழந்தைகள் மீதுள்ள அன்பு கொண்ட செயலா இல்லையா என்பதை அறிய முடியாது. இதனை, நாட்டின் தலைவர்கள் குழந்தைகளுக்காக எடுத்துள்ள திட்டங்களையும் நடவடிக்கைகளையும் வைத்தே ஊகிக்க முடியும். குழந்தைகள் குறித்து தமது விஞ்ஞாபனங்களில் வாக்குறுதிகளை வழங்கியிருக்கலாம். ஆனால் குழந்தைகளை முத்தமிடுவதை வைத்து மட்டுமே அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டாம்.

 

2. சூர பப்பா போல் பன்னிரண்டு வேலைகளை செய்தல்

இவர்களில் சூர பப்பா சீசரின் பன்னிரண்டு வேலைகளை செய்பவர் போல சிலர் உள்ளனர். தென்னைமரம் ஏறுவது, நெல் நடுவது, ஊஞ்சல் விளையாடுவது, சைக்கிள் மிதிப்பது, சறுக்கும் படகில் கீழிருந்து மேலே ஏறுவது, கிராமத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களை சில அரசியல்வாதிகள் செய்வர். இவை உண்மையில் வேடிக்கையாக இருக்கும். இதன் மூலம் இவர்கள் தெரிவிக்க முனைவது என்னவென்றால் இவர்கள் எல்லாவற்றிலும் திறமையானவர் அல்லது எல்லோருடனும் இருக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால் வெறும் சுர பப்பா போன்ற செயல்களை வைத்து மட்டுமே ஒருவருக்கு ஜனாதிபதியாக  முடியாது.

 

3. குடும்பப் பின்னணி

எமது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினை இதுதான். இந்த குடும்பப் பின்னணி இலங்கை அரசியலில் எந்தளவு தாக்கம் செலுத்துகின்றது என்ற விடயத்தை, சாதாரண அரசியல் அறிவுள்ளவர்களும் அறிவர். பெரும்பாலான ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். ஒரு குடும்பத்தின் உறுப்பினர் மிகவும் பிரபலமான அரசியல்வாதி என்பதால் மாத்திரமே அவருக்கு ஆட்சியை வழங்குகின்றனர். குடும்பத்தை வைத்து அவரை சிறந்த அரசியல்வாதியென சொல்ல முடியுமா?  இவற்றை மாத்திரமே கவனித்து நாம் எமது பெறுமதிமிக்க வாக்குகளை வழங்குவது சரியா என சிந்தியுங்கள்.

 

4. வணக்கஸ்தலங்களுக்கு செல்வது

அரசியல்வாதிகள் ஆன்மீகத்தில் பக்தியுடையவராக இருப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அரசியல்வாதிகள் வணக்கஸ்தலங்களுக்கு செல்வதிலும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அது அவரின் அரசியல் பயணத்தில் எந்தவொரு பங்களிப்பையும் பெறவும் இல்லை. ஆனால் வணக்கஸ்தலங்களுக்கு சென்று மதத் தலைவர்களின் காலில் விழுவது, அவர்களுக்கு பூ கொடுப்பது போன்ற செயல்களால் அவர்களது அரசியலை வளர்த்துக்கொள்ளவும் முடியாது. ஆகவே தினமும் வணக்கஸ்தலங்களுக்கு செல்லும் அரசியல்வாதிக்கு உங்களது வாக்குகளை பூஜை செய்ய நினைக்கவேண்டாம்.

 

5. கவர்ச்சிகரமான பேச்சு

இலங்கை அரசியல்வாதிகளுக்கு  கவர்ச்சியாக பேச சொல்லிக்கொடுக்க  தேவை இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக பேசுவதை தவிர அவர்களிடம் வேறு எந்த திறனும் இல்லாவிட்டால் நாட்டின் உயரிய கதிரைக்கு அவர் செல்வது அர்த்தமற்றது. இதன்மூலம், வாக்காளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, வேட்பாளர்களின் பேச்சு உண்மையில் அர்த்தமுள்ளதா அல்லது நம்பகமானதா என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

 

6. பௌத்தர்/ தமிழர்/ இஸ்லாமியர்/ கிறிஸ்தவர்

இன ரீதியான வேறுபாடு பற்றி அதிகமானோர் சிந்திக்கின்றனர். இதற்கு ஏதுவான காரணியும் உள்ளது. தமிழர் என்றால் அவர் தமிழ் மக்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார். சிங்களவர் மற்றும் இஸ்லாமியர்களும் அவ்வாறே. நாடு செயற்படும் விதத்தை பார்க்கும்போது அவர்களை குறை கூறுவதில் அர்த்தமும் இல்லை. ஆனால் நாட்டின் ஜனாதிபதி ஒரு இனத்திற்கானவர் அல்லர். அவர் முழுநாட்டினதும் ஜனாதிபதி ஆவார். ஆகவே இன வேறுபாட்டினை இதனுள் புகுத்தாமல் இருக்கும்வரை நன்று.

 

7. நீதிக்கும் தலைவணங்காத தன்மை

தைரியமான பல் ஜனாதிபதிகள் உள்ளனர். தைரியம் என்பது ஜனாதிபதியாக உள்ள ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்பாகும். ஆயினும் சிலரின் தைரியம் நாட்டின் விதிமுறைகளுக்குக்கூட கட்டுப்படாமல் உள்ளது. அது நல்ல பண்பல்ல. நாட்டின் ஜனாதிபதி அல்லது பிற நபர்களுக்குக்கூட மாற்ற முடியாத அளவிற்கு நாட்டின் நீதித்துறை அமைய வேண்டும். ஏனெனில், நாட்டின் தலைவர்களுக்கு பைத்தியம் பிடித்து சட்டங்களை மாற்றிவிட்டால் அதை சீர்திருத்துவது கஷ்டம். சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

 

8. திருடர் பட்டம்

ஆம், இதுகூட ஜனாதிபதி நாற்காலியில் அமர காத்திருக்கும் சிலர் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதாவது தமது எதிர்த்தரப்பில் போட்டியிடுவோர் மீது திருடர் பட்டத்தை சூட்டிவிடுவர். பிழையை சுட்டிக்காட்டுவது வேறு பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது வேறு. பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறும் போது அவற்றிற்கு பகுத்தறிவும் இருக்காது. சாட்சிகளும் காணப்படாது. ஆனால் பிழையை சுட்டிக்காட்டுபவரிடம் போதிய சாட்சிகளும் பகுத்தறிவும் உள்ளபோது அவற்றை மறுத்து தன் தரப்பில் சாட்சிகள் அற்ற ஜனாதிபதி வேட்பாளர் பிழையை சுட்டிக்காட்டுபவரை பொய்யர் என கூறுவார். அவ்வாறானவர்கள் ஆட்சிபீடம் அமைக்க வழிவிடாதீர்கள்.