உங்கள் குழந்தைகளை புத்திசாலிகளாக்குவது எவ்வாறு?

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பதை போல ஒவ்வொரு குழந்தையும் தமது பெற்றோருக்கு பெறுமதி வாய்ந்தவை. இதனாலே சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அறிவு மற்றும் திறன் சம்பந்தமாக அதிகளவு கரிசனை காட்டுகின்றனர். தமது பிள்ளையே அதிக அறிவாற்றல் கொண்ட பிள்ளை என சில பெற்றோர் எண்ணுகின்றனர். அப்படி எண்ணுவதற்கு பதிலாக தமது பிள்ளைகளின் அறிவாற்றலை வளர்ப்பதற்கும் ஜீனியஸ் போல் உருவாக்குவதற்கும் எம்மால் செய்யக்கூடிய விடயங்களை பற்றி இன்று பேசவுள்ளோம்.

 

1. குழந்தைகளுடன் எப்பொழுதும் பேசுதல்

இது எளிமையான விடயமென நினைத்தாலும் அதிகமான பெற்றோர் இதனை செய்வது குறைவு. குறிப்பாக இந்த வேகமான உலகில் பெற்றோருக்கு தத்தமது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நேரத்தில்தான் பேசவேண்டும் என்று இல்லை. அத்தோடு, குழந்தையின் சிறு வயது முதல் பிள்ளை பருவம் அவர்களுடன் பெற்றோருக்கு பேச முடியும். தகவல்தொடர்பு பராமரிக்கப்பட வேண்டும். குழந்தைக்கு சிறுவயதிலேயே உங்கள் குரலை அடையாளம் காணமுடியும். ஆகவே பெற்றோர் தமது குழந்தைகளுக்காக நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

 

2. பிறந்தது முதல் புத்தகங்களை படித்துக் காட்டுங்கள்

அறிவை வளர்க்கக்கூடிய முறைதான் இந்த புத்தக வாசிப்பு. ஆனால் குழந்தை வளரும்வரை காத்திருக்க அவசியமில்லை. பிறந்தது முதல் நீங்கள் உங்கள் குழந்தைக்காக வாசிக்க முடியும். உங்கள் குழந்தைக்காக ஒரு கதையை வாசிக்க நேரம் கிடைக்கும்தானே? குழந்தைக்கு விசித்திர கதைகளை வாசித்துக்காட்டுவது பயனுள்ளதா என்று பலரும் யோசிப்பீர்கள். ஆம், இதனால் பல நன்மைகளுண்டு. குழந்தைகள் வளரும் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய தகவல் அறியும் திறன் நன்கு வளரும்.

 

3. சங்கீத பாடங்களின் மூலம் பெறக்கூடியவை

பாடல்களின் மூலம் நல்ல பல விடயங்களை குழந்தைகளின் வளர்ச்சிப்பருவத்தில் காணலாம். இசையை ரசிக்க அனுமதிப்பதும் குழந்தையை மேதையாக்கும் திட்டத்தின் நல்லதொரு பங்களிப்பாகும். குழந்தை ஆசைப்படும் இசைக்கருவியை வாங்கிக் கொடுப்பதும் நல்ல யோசனையாகும். இதன் மூலம் குழந்தைக்கு கேள்திறன் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு.

 

4. புத்தகத்திற்கும் மைதானத்திற்கும் பழக்கப்படுத்தல்

புத்தகங்கள் மீது ஈர்ப்பு கொண்ட பிள்ளை விளையாட்டில் ஈர்ப்பற்று காணப்படும் என்றும் விளையாட்டில் ஈர்ப்புகொண்ட பிள்ளை புத்தகத்தில் நாட்டம் கொள்ளாது என்றும் கூறுவார்கள்.  நீங்கள் உண்மையில் செய்ய வேண்டிய விடயம் உங்கள் குழந்தைகளை இரண்டிலும்  சமநிலையுடன் ஈடுபட செய்தலே ஆகும். அதாவது விளையாட்டிலும் படிப்பிலும் சிறுவயது முதலே அவர்களை ஈடுபட செய்ய வேண்டும். விளையாட்டானது சோர்வை இல்லாது செய்கின்றது. இதன்மூலம் சோர்வடையும் தன்மை குறையும். இதன் தொடர்ச்சியாக படிக்கும் போதும் அந்த தன்மை குறைகின்றது.

 

5. சிறு வயதிலேயே பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபட செய்தல்

பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு விடயங்களை தெரிவுசெய்ய பெற்றோர் உதவுகின்றனர். ஆயினும் அதிகமான பிள்ளைகள் சேகரிப்பு தொடர்பான பொழுதுபோக்கில் ஈடுபடும்போது தாம் எதனை சேர்க்கின்றோம் என்ற அறிவு இல்லாமல் சேர்க்கின்றனர். சேர்க்கும் விடயத்தை பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பிள்ளை தபால் முத்திரைகளை சேகரிப்பதில் ஈடுபடும்போது சேகரிக்கப்படும் முத்திரைகள் எந்தெந்த நாட்டிற்குரியது என்ற அறிவை வளர்ப்பது மிகவும் பயனுள்ள விடயமாகும். மக்யார் தபால் எனும்போது அந்த தபால் எந்த நாட்டுக்கு உரியது என்பது அதிகமான குழதைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அது எந்த நாட்டிற்கு உரியதென்பதை நாமே எமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அது உண்மையில் ஹங்கேரி நாட்டிற்கு உரிய முத்திரை. ஏன் ஹங்கேரி நாட்டு முத்திரைகள் மக்யார் எனும் பெயரில் வெளியாகின்றதென்பதை பற்றி ஆராய்ச்சி செய்வதில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது போன்ற பல நாடுகளை பற்றிய அறிவுகளை வளர்த்துக்கொள்வதில் முத்திரை சேகரிப்பு போன்ற பொழுதுபோக்குகள் உதவி புரிகின்றன. இது போன்ற பொழுதுபோக்குகளால் உமது குழந்தைகள் சிறுவயதிலேயே புத்திசாலிகளாக மாற வாய்ப்புண்டு.

 

6. குழந்தைகளின் எதிர்கால இலட்சியத்திற்கு உதவுதல்

அதிகமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் தமது இலட்சியத்தை அடைவதற்கான பாதையில் செல்வதைவிட தமது பெற்றோர் விரும்பக்கூடிய பாதையில் செல்வதே அதிகமாக உள்ளன. தாம் அடையமுடியாத கனவுகளை பிள்ளைகளை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கும் பெற்றோர்களே அதிகம். தமது குழந்தைகள் வைத்தியராகவோ அல்லது பொறியியலாளர் ஆகவோ வரவேண்டும் என்பதே பலரது ஆசை. குழந்தைக்கும் அதே இலட்சியம் இருப்பின் அது தவறில்லை. ஆனால் குழந்தை வேறு இலட்சியத்தை கொண்டிருக்கும்போது  பெற்றோர் தமது ஆசைகளை கூறுவதும் வற்புறுத்துவதும் தவறாகும். உண்மையில் தமது பிள்ளைகள் விரும்பும் இலட்சியத்திற்கான அடிக்கல்லை நாட்டுவதே பெற்றோரின் பொறுப்பாகும்.

 

7. தோல்வி குறித்த பயத்தை நீக்குதல்

தோல்விக்கு பயந்த மனிதன் ஒருநாளும் வெற்றி நோக்கி பயணிக்க முடியாது என்ற கருத்து உண்மை. அதனால் தோல்வி பயத்தை அகற்றுவது அவசியமாகவுள்ளது. குழந்தையின் மீதுள்ள அன்பின் காரணமாக குழந்தையிடம் இருந்து தோல்வியை மறைப்பது உண்மையில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய ஒரு செயற்படாகும். குழந்தை வகுப்பிலோ அல்லது மைதானத்திலோ தோல்வியை சந்திக்கலாம். அதற்காக குழந்தையை தண்டிப்பதோ அல்லது குழந்தையை தோல்வியிடமிருந்து பாதுகாப்பதோ நல்ல செயற்பாடாக இருப்பதில்லை. மாறாக தோல்வியானது வாழ்வின் ஒரு அங்கம். தோல்வியே வெற்றியின் படிக்கல் என்பதை பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் வாழ்வில் அதிகமான விடயங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதையும் விளக்குங்கள். குழந்தையை ஒரு தைரியமான மனிதனாக இதன்மூலம் உலகிற்கு வழியனுப்ப முடியும்.

 மேலே குறிப்பிட்ட விடயங்களே உமது குழந்தைகளை மேதையாக்கக்கூடிய வழிமுறைகளாகும்.