பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கலாமா?

செல்லப்பிராணிகளை அதன் குணாதிசயங்களை கண்டு அதிகமானோர் வளர்க்கின்றனர். செல்லப்பிராணி வளர்ப்பது மன அமைதியையும் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாய், பூனை, மீன், கோழிகளைத்தான் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். ஆனால் சில நாடுகளில் பாம்புகளையும் வளர்க்கின்றனர். அவ்வாறு பாம்புகளை வளர்ப்பதை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

 

1. பாம்பை வளர்ப்பதில் உள்ள இலாபம்

நாய் பூனையை வளர்ப்பது பிரபலமான ஒன்று. ஆனால் சில நாய் பூனைகளை வளர்ப்பதற்கு பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். பெரிய பிராணிகளை விட இந்த பாம்புகளுக்கு செலவு மிகவும் குறைவு. இதற்கும் சூடான சூழல் தேவை. அதைப்போல உண்ண உணவும் தேவைதான். ஆனால் நாய் பூனைகளை போல அதிக உணவு, நோய் நொடிகளின்போது வைத்திய உதவி போன்றவை  தேவைப்படாது. அதுமட்டுமின்றி பாம்பு வளர்க்கும் நாடுகளில் எமக்கு விருப்பமான பாம்புகளை தேர்ந்தெடுக்க முடியும். பாம்பு வளர்ப்பவர்களின் கூற்றுப்படி, பாம்புகளும் சில காலங்களின் பின்னர் எம்முடன் ஒன்றிணைந்து நட்பாக பழகிவிடுமாம்.

 

2. எல்லா பாம்புகளும் விஷமா?

பாம்பு என்றாலே அனைவரும் கூறும் விடயம் அதன் விஷம். ஆனால் எல்லா பாம்புகளும் விஷமல்ல. இலங்கையில் பார்த்தால் 94 வகையான பாம்பினங்கள் உள்ளன. அவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே விஷமுள்ள பாம்புகள் உள்ளன. அதி விஷமுள்ள பாம்புகளாக கட்டு விரியன், நாகம், மணல் விரியன், கண்ணாடி விரியன், இலங்கை விரியன் போன்றவை கணிக்கப்படுகின்றன. அதேபோல மாபிலா, எஹட்டுல்லா, ஹெநகந்தயா, மலசரா போன்றவை நடுநிலை விஷம் கொண்டவையாகவும். இது தவிர பொதுவாக மற்றவை விஷமற்றவையாக கணிக்கப்படுகின்றன.

 

3. பாம்பு வளர்த்தல்/ வைத்திருத்தல்

இலங்கையில் ஒரு பாம்பு அகப்பட்டு விட்டால் அதனை அடித்து உயிரை எடுத்துவிட்டு, தனது சாகச கதையை சொல்லிவிட்டுத்தான் வீசுவார்கள். ஆனால் பிற நாடுகளில் பாம்புகளை வியாபார நோக்கில் பிடிக்கின்றனர். இலங்கையில் ஒரு குழந்தையிடம் பாம்பை கொடுத்தால் என்ன செய்யும் என்பதை நாம் கூறத் தேவையில்லை. ஆனால் சில நாடுகளில் குழந்தைகள் பாம்புகளுக்கு முத்தம் கொடுத்து விளையாடுவார்கள்.

 

4. இவற்றை வளர்ப்பது உகந்ததா?

பாம்புகளை  வளர்க்கும் முறை எப்படி வந்தது தெரியுமா? காலங்காலமாக நாய், பூனை என்பவற்றைத்தான் மனிதர்கள் ஆசையாக வளர்த்து வந்தனர். ஏனென்றால் அவை ஆதிகாலம் தொட்டு எம்முடன் நன்றியுள்ள பிராணிகளாக இருக்கின்றன. அதேபோல நாம் வளர்க்கும் பிராணியும் சந்தோசமாக இருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால் பாம்புகளும் அப்படி இருப்பதாக கூறுகின்றனர். அதனால் அதிகமானோர் அதனையும் வளர்க்கின்றனர்.

 

5. பாம்புகளுக்கு தொட்டி அமைத்தல்

பாம்புகளை வளர்க்கும் போது அதற்கு தேவையான வெப்பநிலையை கொடுக்க வேண்டும். ஏனெனில் சூழலுக்கு ஏற்ப தனது உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ள முடியாத ஒரு உயிரினம் பாம்பாகும். அதேபோல இவற்றிக்கு உணவு வழங்க வேண்டும். இது தன்னிச்சையாக வாழும் சந்தர்ப்பங்களில் தனக்கு வேண்டிய உணவை உயிருடன் பிடித்து உண்ணக்கூடியதாகும். ஆனால் இவற்றை நாம் வளர்க்கும் போது இவற்றிக்கு உயிருடனான உணவை கொடுத்து வளர்க்கக் கூடாது. அப்படி பழக்கினால் எம்மையும் ஒரு நாள் பிடித்து விழுங்கி தனது இரையாக்கிக்கொள்ளும்.

 

6. வளர்க்கக்கூடிய பாம்பினங்கள்

இது நாடுகளுக்கேற்ப வேறுபடும். பிரபலமான வளர்க்கக்கூடிய பாம்புகளாக KING SNAKE, BALL SAITEN இருக்கின்றன. அதுபோலவே RATTLE SNAKE போன்றவையும் சில நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவற்றை வளர்க்க வேண்டுமானால் தொட்டி அமைத்து மட்டுமே வளர்க்க வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் வீட்டில் சாதாரணமாக மலைப்பாம்பு, அனகொண்டா போன்ற பெரிய பாம்புகளை வளர்க்கின்றனர். இவற்றை வளர்க்க பெரியளவு உணவு கொடுக்க வேண்டும் என்பதால் அதனை பலர் வளர்க்க விரும்புவதில்லை. அதனால் சிறிய அளவு பாம்புகளையே பலரும் வளர்க்கின்றனர்.

 

7. இலங்கையில் வளர்க்கலாமா?

இதற்கு பொதுவான பதில் “முடியாது” என்பதாகவே இருக்கும். இலங்கை சட்டப்படி வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க முடியாது. மனிதனுக்கு மீன், பூனை, நாய்களை வளர்ப்பது போல் பாம்புகளை வளர்க்க முடியாது.

இவ்வாறு நாம் ஒருபுறம் பாம்பென்றாலே பயப்படும் சந்தர்ப்பத்தில் உலகின் இன்னொரு புறத்தில் பாம்புகளை கொன்று அதனை உணவாக்கிவிடுகின்றனர். இதனை தடுப்பதற்காக உருவான விடயமாகவும் பாம்புகளை வளர்க்கும் விடயத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.