பாடசாலை காலத்தில் “எனது செல்லப்பிராணி“ எனும் தலைப்பின் கீழ் அதிகமான வசனங்களை எழுதி இருப்போம் அல்லவா? அவற்றில் நாய், பூனை, கிளி, மீன் போன்றவற்றை கூறி இருப்போம். ஆனால் நமது சிந்தனைக்கும் எட்டாத அளவிற்கு செல்லப்பிராணிகளாக வளர்க்கக்கூடியவற்றை நாம் இன்று பார்ப்போம்.
சுறா
இன்று சுறாக்களையும் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். ஆனால் உண்மையில் சுறாவை வளர்ப்பது இலகுவான விடயம் அல்ல. அதற்கு அதிகமான செலவு ஏற்படும். அதற்கு உணவு, பானங்கள் எவ்வாறு நாம் வழங்க வேண்டுமோ அதே போல அதற்கு வாழ்வதற்கு ஏற்ற ஏதுவான சூழலையும் உருவாக்க வேண்டும். அது உண்மையில் சாதாரண மனிதனுக்கு மிகவும் சிரமமான விடயமாகும். ஆனால் இன்னும் சில மீனினங்கள் உள்ளன. அவற்றில் சுறாக்களின் குணாதிசயங்களையும் காணலாம். ஆனால் எடையிலும் அளவிலும் சிறியவையாக இருக்கும். இவற்றை வீட்டிலும் வளர்க்கலாம்.
டரன்டியுலா சிலந்தி
பொதுவாக சிலந்திகளை விரும்பும் மக்களிடத்தில் விஷமுள்ள சிலந்திகளை வளர்ப்பது பற்றி சற்று பயந்த கண்ணோட்டமே உள்ளது. ஆனாலும் அதிகமானோரின் கூற்றுப்படி இந்த டரன்டியுலா சிலந்தி அவ்வளவு பாதகமான ஒன்றல்ல. இதனை ஒரு செல்லப்பிராணியாக வளர்த்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்ல. இது நமது கையில் இருந்து தவறி கீழே விழுந்தாலும் உயிரிழந்து போகக்கூடிய ஒரு ஜந்தாகும். ஆனாலும் இதனை வளர்க்கும் மக்கள் உலகில் இன்னும் உள்ளனர்.
அனகொண்டா
ஆள்கொல்லி அனகொண்டாவை பற்றிய ஒரு திரைப்படத்தை எம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதனையும் ஒரு செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடிய மக்கள் உள்ளனர். அவற்றை விற்கக்கூடிய சந்தைகளும் இருக்கின்றன. ஆனால் நினைத்தளவிற்கு இந்த பிராணியை அனைவருக்கும் வளர்க்க முடியாது. வாங்கும்போது இரண்டு அடியில் இருந்த இவை விரைவிலேயே பத்து அடியளவு வளரக்கூடியது. அது மட்டுமின்றி இவற்றிக்கென தனியாக உணவு வாங்க வேண்டும். அது உயிருடன் அல்லது உயிரற்ற பிராணியாகவும் இருக்கலாம். சில அனகோண்டாக்கள் வீட்டிலுள்ள உணவுகளை சாப்பிட்டு மரணித்துள்ள சம்பவங்களும் உள்ளன.
முதலை
ஆறு, கடல் போன்ற நீர்நிலைகள் இரண்டிலும் இருக்கும் முதலைகளை வளர்க்கக்கூடிய ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல இவற்றை வளர்ப்பதற்கு சில நாடுகளில் சில சட்ட நடைமுறைகளும் உள்ளன. அவற்றில் முதலைகளின் நீளத்தை பொறுத்தே அவற்றை வீட்டில் வளர்ப்பதை பற்றி அவதானம் செலுத்த முடியும். எவ்வளவுதான் செல்லப்பிராணியாக இருப்பினும், முதலையின் வாயால் கடி வாங்கி உயிர் நீத்த சிலரை பற்றி பத்திரிகைகள் சிலவற்றில் காணக்கூடியதாக இருந்தன. ஆயினும் முதலை வளர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சிம்பன்ஸீஸ்
இந்த பட்டியலில் அடுத்ததாக தரப்பட்டுள்ளது சிம்பன்ஸீஸ்களை பற்றியே. இவை மனித சுபாவம் கொண்ட, தர்க்கப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு பாலூட்டி இனம் என்பது அனைவரும் அறிந்ததே. முன்னர் திரைப்படங்களில்கூட மனிதர்களுக்கு உதவியாக சிம்பன்சேஸ்களை வைத்து திரைப்படங்கள் எடுத்திருக்கின்றனர். இதனை வைத்து இவை சிறந்த செல்லப்பிராணி என கருத்திற்கொண்டால் அது தவறான எண்ணம் என்பதாகவே எம்மால் கூற முடியும். மிருகக்காட்சிச் சாலைகளில்கூட இவற்றை கூண்டில் அடைத்துவைத்துள்ளனர். காரணம், இவற்றின் மூலம் மக்களுக்கு தீங்கு நேரிடலாம். உலகில் அதிகமான இடங்களில் இவற்றை வளர்க்க தடை விதிக்கப்பட்டாலும் இன்னும் பலர் இவற்றை வளர்க்கின்றனர்.
தேள்
தேள் என்பது உலகில் பல நாடுகளில் செல்லப்பிராணியாகவும் வியாபாரத்திற்காகவும் வளர்க்கின்றனர். இது சிறிய அளவில் விஷம் கொண்ட ஒரு ஜந்தாகும். இவை சிறிய விலைக்கு வாங்க முடியுமாய் இருப்பதனாலும், செல்லப்பிராணியாக வளர்க்க ஏதுவான அளவிலும் இருப்பதனால் அதிகமானோர் இதனை வாங்கி வளர்க்கின்றனர். ஆனால் இதனை கையில் எடுத்து கொஞ்சி விளையாட முடியாததே ஒரு பெரிய துயரம் ஆகும். இதனை சற்று தள்ளி வைத்தே வளர்க்க வேண்டும்.
ஜெல்லி மீன்
வில் ஸ்மித் நடித்த 7 POUNDS திரைப்படத்தை பார்த்திருந்தால் உங்களுக்கு ஜெல்லி மீனை பற்றி சொல்ல தேவையில்லை. இந்த ஜெல்லி மீன் வளர்ப்பு உலகில் இன்றளவில் விரைவாக பரவி வரும் ஒன்றாகும். இவற்றை வளர்ப்பதும் அவ்வளவாக இலகுவான விடயம் அல்ல. இவற்றை வளர்க்க மிகவும் அதிகமான செலவீனங்கள் ஏற்படும். ஆனாலும் இவற்றை வளர்க்கும் சிலரின் கூற்றுப்படி இவைகளை வளர்ப்பதும் அவை அசைவதனை பார்ப்பதும் மனதிற்கு ஒருவிதமான அமைதியினை தருவதாக கூறுகின்றனர்.