இலங்கை அரசியல்வாதிகள் பற்றிய சுவாரஷ்யமான கதைகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து தற்போது பாராளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகளின் பெயர்கள் தொடர்பில் நாளாந்தம் ஒவ்வொரு செய்திகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அவற்றில் சில உண்மையாகவும் சில போலியாகவும் இருக்கின்றன. அப்படி இருக்கையில் அவற்றில் சில பழைய அரசியல்வாதிகள் பற்றிய சுவாரஷ்யமான கதைகளை இன்று நாம் கூறவுள்ளோம்.

மரிக்காரை கேலி செய்த பிரதமர் பண்டாரநாயக்க

 C.A.S. மரிக்கார் என்பவர் 1956 களில் S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியில் தபால் அமைச்சராக பணியாற்றியவர். இவர் சிங்களவர்களாலும் நேசிக்கப்பட்டார். எனவே, பலரும் அவரை சிங்கள மரிக்கார் என்பதாகவே அழைத்தனர். இவர் ஒரு வேடிக்கையான மனிதரும்கூட. ஒருமுறை, ஒரு நன்கொடை திட்டம் தொடர்பாக பெண்ணொருவர் நாடுமுழுவதும் பயணம் செய்ததாகவும் அதில் திரு.மரிக்கார் பங்கேற்றதாகவும் திரு.பண்டாரநாயக்க அவர்கள் கேள்விப்பட்டார்.

ஒரு நாள் பண்டாரநாயக்க அவர்கள் மரிக்காரை சந்தித்த போது   “உண்மையா மரிக்ஸ்…  பெண்ணொருவருடன் நாடு பூராவும் நீங்கள் சுற்றுவது” என கேட்டார். அதற்கு மரிக்கார் “ஆம் சார், அவரிடம் இருந்து நிறைய விடயங்கள் எடுக்கலாம்” என பதில் அளித்தார்.  மரிக்காரின் இந்த பதிலுக்கு பண்டாரநாயக்க அவர்கள் இவ்வாறு கூறினாராம்.  “ஆனால் மரிக்ஸ் சில விடயங்களை அவருக்கு கொடுப்பதாகத்தானே நான் கேள்விப்பட்டேன்..!! ”

 

தர்மதாஸ பண்டாவின் பிரசாரத்திற்கு வந்த விஜயானந்த தஹநாயக

விஜயானந்த தஹநாயக என்பவர் இலங்கை அரசியலில் காணப்பட்ட வேடிக்கையான மனிதர். குறுகிய காலத்திற்கு மாத்திரமே பிரதமராக இருந்த இவர் அரசியல் பிரிவுகளை மாற்றுவதிலும் செயற்பட்டார். இவர் முதலில் பிபிலை பிரதேசத்தில் வெற்றிபெற்று பின்னர் காலி ஆசனத்தில் போட்டியிட்டார். இந்த காலத்தில் இவர் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவளித்தார்.  ஐக்கிய தேசிய கட்சியில் பிபிலை பிரதேசத்தில் போட்டியிட்டவர் பிபிலையை சேர்ந்த தர்மதாஸ பண்டா அவர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டவர் ரோனி த மெல் அவர்கள். தர்மதாஸவின் தேர்தல் கூட்டத்தின் போது தஹநாயக அவர்கள் மக்களை பார்த்து இவ்வாறு கேட்டார்.

நீங்கள் அனைவரும் ஒரு தடவை பிபிலைக்கு என்னை தேந்தெடுத்தீர்கள்! கவுன்சிலுக்கு சென்ற பின் பிபிலையில் என்னை சந்தித்தீர்களா?” அதற்கு மக்கள் “இல்லை” என்று கூற, தஹநாயக அவர்கள் இவாறு கூறினார்.  “ஆம், அது போல முட்டாள்தனமான செயல்களை செய்ய வேண்டாம். பிற ஊர்க்காரனுக்கு வாக்களிக்க வேண்டாம். எமக்கு தெரிந்த பிபிலையில் வசிக்கும் தர்மதாசவுக்கு வாக்களியுங்கள்” என கூறினாராம்.

 

பப்படத்தால் ஆறுதல் பெற்ற டட்லி சேனநாயக்க    


இலங்கையின் அப்பாவி பிரதமர் என டட்லி சேனநாயக்கவை கூறினால் அது பொருந்தும். அந்நாட்களில் அவருக்கு இருந்த வயிற்றுவலி சம்பந்தமாக அரசியலில்கூட பேசப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோருக்கு தெரியாத விடயம் என்னவென்றால் அவர் சராசரி மனிதரை விட அதிகம் சாப்பிடக்கூடியவர் என்பதே. ஆனாலும் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கக்கூடியவர். ஒரு தடவை வந்தவர்களுக்கு கொடுக்கக்கூடிய அளவு உணவு இல்லாததை உணர்ந்த டட்லி சேனநாயக்க அவர்கள் உணவு சமைப்பவரை அழைத்து “இன்று எனக்கு சாப்பிட விருப்பம் இல்லை. னக்கு பப்படம் மட்டும் செய்து தாருங்கள்” என கூறினாராம். வந்தவர்கள் விருந்து சாப்பிட டட்லி அவர்கள் வெறும் பப்படத்தை மாத்திரம் உண்டமை குறிப்பிடத்தக்கது.

 

கொத்தலாவலவை மாங்கொட்டையால் அடித்த பையன்

ஒரு நாள் அமைச்சர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவை சந்திக்க வந்தார். அப்போது சேர் ஜோன் கொத்தலாவல இரு குழந்தைகளுக்கும் கந்தவளே தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட இரு மாம்பழங்களை கொடுத்தார். அவ்விருவரும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகின்றனர் என கொத்தலாவல பார்த்தார். அப்போது இருவரும் கொறித்து சாப்பிடுவதைக் கண்ட கொத்தலாவல “அப்படியா சாப்பிடுவது?” என்று கேட்டார். அதற்கு அச்சிறுவர்களில் இளைய சிறுவன், சாப்பிட்டுக்கொண்டிருந்த மாங்கொட்டையாலேயே அடித்துவிட்டு, “என்னை திட்டுவதற்கு நீ யார் ?” என்று கேட்டானாம். இச்சம்பவத்தால் ஆச்சரியப்பட்ட கொத்தலாவல பின்பு அத்தந்தையை அழைத்து “இவன் எளிதான பையன் அல்ல” என்று கூறினாராம். அந்த தந்தை திரு.D.A.ராஜபக்ஷ  மற்றும் மூத்த மகன் சமல் ராஜபக்ஷ இளைய மகன் மஹிந்த ராஜபக்ஷ.

 

என்.எம். இற்காக பிரசாரம் செய்த ஜே.ஆர்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் தி சில்வா, லெஸ்லி குணவர்தன, பெர்னாட் சொய்சா போன்ற இடதுசாரி கட்சிக்காரர்களுடன் நல்ல நட்புறவை பேணி வந்தார். ஒரு தடவை என்.எம் பெரேரா, கொல்வின் இல்லாத பாராளுமன்றம் உயிரோட்டம் அற்றது என்று கூட கூறியிருந்தார். 1977 களில் தன் கட்சி தனது இடதுசாரி நண்பர்களிடம் தோற்றுவிடுமோ என்ற கவலை ஜே.ஆர் க்கு எழுந்தது.

ஒருமுறை அவருக்கு யட்டியாந்தோட பிரதேசத்தில் பிரசாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. என்.எம். பெரேரா போட்டியிட்ட  யட்டியாந்தோட பிரதேசத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வின்சன் பெரேரா அவர்கள் போட்டியிட்டிருந்தார். ஜே.ஆர் தனது பிரசாரத்தில், “யட்டியாந்தோட்டைக்கு எதிர்க்கட்சி சார்பாக போட்டியிட்டிருப்பது என்.எம்.பெரேரா. அவர் படித்தவர், உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். எமது சார்பில் நாம் வின்சன் பெரேராவை அனுப்பியுள்ளோம். நீங்கள் சரியான பெரேராவை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

பிரசார கூட்டத்திற்கு பிறகு வில்சன் அவர்கள், “ஐயா என்னை இல்லாமல் ஆக்கிவிட்டார்” என்று கூறினாலும் வெற்றி என்னவோ வில்சனுக்கே கிட்டியது. தன் நண்பரை தோற்கடித்ததாலோ என்னவோ தெரியவில்லை ஜே.ஆர் இடமிருந்து வில்சன் பெரேராவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

 

யாழ்ப்பாண கோட்டை நடுவே சிறுநீர் கழித்த அநுருத்த ரத்வத்தே

அப்போது பாதுகாப்பு துணை அமைச்சராக அநுருத்த ரத்வத்தே சந்திரிக்க பண்டாரநாயக தலைமையில் செயற்பட்டு வந்தார். ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தை சிக்க வைத்தனர். இச்சந்தர்ப்பதில் சந்திரிகா பண்டாரநாயக்க இந்தியாவுடன் பேசி புலிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இராணுவ உதவியை கோரினார். இதற்கிடையில் அநுருத்த ரத்வத்தே யாழ்பாணத்திற்கு வான் வழியாக சென்றிருந்தார். அவரது வருகையினால் இலங்கை இராணுவத்தின் நம்பிக்கை சற்று அதிகரித்தது. அவர் பின் யாழ்ப்பாணம் கோட்டை நடுவே சிறுநீர் கழிக்க சென்றாராம். அந்த நடவடிக்கையின் மூலம் தான் வந்திருப்பது ஒரு பாதுகாப்பு அமைச்சராக அல்ல, அவர்களில் ஒருவராக வந்திருப்பதாக சிப்பாய்களுக்கு சமிக்ஞை அளித்ததாக அநுருத்த ரத்வத்தே அவர்கள் அந்த சம்பவம் பற்றி பின்னர் கூறினார்.

இது போன்ற சுவாரஷ்யமான விடயங்களை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இதை பற்றி மேலும் பலர் அறிந்துகொள்ள இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.