நண்பர்கள் பிரிந்து செல்வதற்கான காரணங்கள்

சிறந்த நண்பர்களைக் கண்டுபிடிப்பது இன்று எளிதானதல்ல. இந்த சமூகத்தில் ஒரு மனிதன் தனியாக வாழ முடியாது. எப்போதாவது ஏதாவது ஒரு தேவைக்கு உங்களுக்கு ஒரு நண்பர் தேவை. ஆகவே இதையெல்லாம் வாழ்க்கையில் இழக்காதீர்கள். குறைந்தது ஒரு நண்பரையாவது வைத்துக்கொள்ளுங்கள். சிலவேளைகளில் நீங்கள் செய்யாத தவறுக்காக நட்பை முறித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். அவற்றிற்கு பல காரணங்கள் உள்ளன.

 

புறம்பேசுதல்

எம்மை நம்பி ஒருவர் கூறிய விடயத்தை நாம் இன்னொருவரிடத்தில் சொல்வது நல்லதல்ல. ஏனென்றால் நாம் புறம்பேசாவிட்டாலும்கூட பிறரின் மூலம் நிகழக்கூடும். நமது நண்பரை பற்றி நாம் கூறிய அல்லது கூறாத விடயங்கள் அவரின் காதில் தவறாக சென்றால் அது எமது நட்புக்கு இடையூறாக அமையும். அதனால் வாயை மூடிக்கொள்வது நட்புக்கு நல்லது.

 

காதல்

இதுதான் அடுத்த தலைவலி. நாம் காதலிக்கும் பெண்ணை தன் நண்பனும் காதலிக்கிறான் என்றால் அங்கிருந்து போட்டி ஆரம்பிக்கின்றது. இது அதிகமாக சிறுவயதிலிருந்து நெருங்கிப் பழகும் நண்பர்களிடமே இடம்பெறுகிறது. ஏன் இப்படி இடம்பெறுகின்றது? ஒருவேளை சிறுவயது முதல் ஒன்றாக இருப்பதால் இருவரது எண்ணங்களும் ஒன்றாக இருக்கின்றதோ தெரியாது. அனால் உண்மையான நண்பர்கள் என்றால் விட்டுக்கொடுத்து போவதே சிறந்தது.

 

தவறாக புரிந்துகொள்ளும் தன்மை

தவறான புரிதல்களும் சிறந்த நண்பர்களுக்கு ஆபத்தானவை. நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். அந்த அன்பின் காரணமாக, நாம் செய்யும் சில விஷயங்களை நாம் கவனிக்காமல், இறுதியில் தவறாக புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, ஒரு பெண்ணும் பையனும் சிறந்த நண்பர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே, இந்த உறவில், அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அன்பை தவறாகப் புரிந்து கொள்ளலாம்.

 

கேலி செய்தல்

நண்பர்களிடம் இல்லாமல் யாரை கேலி செய்வது? நெருங்கிய நண்பன் என்றால் எப்படிப்பட்ட கேலியான வார்த்தையென்றாலும்  தாங்கிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் சிக்கல்தான். ஏனென்றால் அப்படி இருந்தால்தான் காலந்தோறும் நல்ல நட்பை வளர்க்க முடியும். கேலியாகவே இருந்தாலும் அளவாக இருப்பது சிறந்தது. மேலும் மேலும் கேலி செய்து அவரது வெறுப்பிற்கு ஆளாகக் கூடாது. அது முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று.

 

பணம்

யாராக இருந்தாலும் பணத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். அதேபோல் நண்பர்களுக்கிடையில் சில சந்தர்ப்பங்களில் பணத்தினாலும் சண்டைகள் மனக்கசப்புகள் வரக்கூடும். அதுமட்டுமின்றி நண்பர்களிடத்தில் கடன் கேட்க வேண்டாம் என்பதற்கும் காரணம் இதுதான். ஆகவே பணப்பரிமாற்றத்தை தவிர்ப்பது சிறந்தது.

 

பொறாமை மற்றும் பாசாங்குத்தனம்

சிறுவயதில் பரீட்சையில் தோல்வியடைந்த சோகத்தை விட, தனது நண்பன் சித்தியடைந்து விட்டால் அதிக சோகம் வரும். அதன் பின் நாம் எதிர்பார்த்த விதத்தில் இந்த விடயம் வெளிவரும்போது அந்த இடத்தில் நாம் வெறுக்கப்படலாம். வாழ்க்கையின் கெட்ட நாளாக அதனை உணரலாம். நாம் ஒன்றாய் பழகிய காலம் போய் எதிரியாக மாற வாய்ப்புள்ளது. அதனால் வாழ்க்கையிலும் சரி நட்பிலும் சரி பொறாமை கொள்ளாதீர்கள்.

 

அரசியல்

நாட்டில் அரசியல் இல்லாத விடயமே இல்லை. எல்லா விடயங்களிலும் அரசியல் கலந்துவிட்டது. ஆனால் இது எமது நல்ல நட்பின் நடுவில் நுழைய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி அதைப் பற்றி பேசுவதையும் குறைக்க வேண்டும். இருவரும் வெவ்வேறு கட்சியை சார்ந்தவர்களாக இருந்தால், உங்களது கட்சியை நியாயப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதுவே நாட்டுக்கும் நல்லது நல்ல நட்புக்கும் நல்லது.