20 வயதான இளைஞர்களை தொந்தரவு செய்யும் 7 கேள்விகள்

20 வயதென்பது ஒருவன் வாலிபனாகும் வயதின் முதற்கட்டம். இதனை நாம் எமது பாஷையில் இளந்தாரிகள் என்போம். இந்த வயதில்தான் ஆண்மகனிடத்தில் அதிகமான கேள்விகள் எழும். இன்று நாம் அந்த கேள்விகள் என்ன என்பதனை சற்று பார்ப்போம். இவை எமக்கும் வந்ததா அல்லது வந்துள்ளதா அல்லது வரவிருக்கிறதா என்பதை சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள்.

 

உயர் கல்வியில் படிப்பது எப்படி?

20 வயது என்பது உயர்தர படிப்பில் இருக்கும் அல்லது உயர்தர படிப்பை முடித்த ஒரு வயதாகும். இந்த வயதில் நாம் சந்திக்கக்கூடிய முதல் பிரச்சினை “எனது உயர்தர படிப்பு முடிந்தவுடன் நான் என்ன செய்ய போகின்றேன்” என்பதாகும். இந்த சந்தர்ப்பத்தில் உயர்கல்வியை தொடர்வது பற்றிய ஆலோசனைகளும் அதிகமாக கேள்விப்படக்கூடும். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சரியான ஒரு முடிவையும் சரியான தொழில்முறை உயர்கல்வியையும் தொடராவிட்டால், மேலும் தவறான விரும்பாத உயர்கல்விக்கு இலக்காகினால் உமது வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கொள்ள வழிவகுக்கும்.

 

இப்பொழுதே வேலைக்கு செல்வோமா?

20 வயதிலேயே இன்று அதிகமானோர் வேலைக்குச் செல்கின்றனர். இன்றளவில் இது ஒரு பிரபலமான ஒன்றாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இதற்கான காரணம் தன்னுடன் இருந்த ஒருவன் வேலை செய்யும்போது எனக்கு ஏன் வேலை செய்ய முடியாது எனும் கேள்வி எழுந்ததோ என்னவோ. இதன் பிறகே பலரும் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகினர். சிலர் வீட்டில் திட்டு வாங்கி படிக்க செல்வதைவிட இது மேலானது என்று எண்ணி தனது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொள்கின்றனர்.

 

காதலில் விழுந்தால்?

அதிகமானோர் காதலில் விழுவதும் மற்றும் காதலில் தோல்வியடைவதும் இந்த வயதில்தான். எடுக்கும் தீர்மானத்தை மிகவும் தொலைநோக்கு பார்வையில் யோசித்து எடுக்காத வயதும்கூட. ஆகவே காதலினால் ஏற்படக்கூடிய பிரச்சினையும் அதிகம். ஆனால் சரியாக இதனை கட்டுப்பாட்டிலும் திட்டமாகவும் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள் தமது வாழ்க்கையில் அழகான சரித்திரத்தையே உருவாக்குகின்றனர்.

 

வருமானம்?

அடுத்த பிரச்சினையான கேள்வி பணம் அல்லது வருமானம். ஆனால் பணம் பெறுவது பெரிய பிரச்சினை இல்லையென்றாலும் அதனை நாம் பெற்றுக்கொள்பவர்களிடம் நாமே ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று எண்ணத்தோன்றும். அதனால் வீட்டை எதிர்பார்த்திருந்தது  போதும்! வீட்டிற்கு சுமையாக இருந்தது போதும்!  அவர்களுக்கு கொடுத்த சங்கடம் போதும்! என்று எண்ணக்கூடும். இதன் விளைவாக இந்த வயதில் பகுதி நேர வேலைக்கு செல்லவும் கூடும்.

 

சேமிப்பது எப்படி?

பணம் சற்று கிடைத்துவிட்டால் அவற்றை எவ்வாறு சேமிப்பது என்பது பற்றி ஆண்களை விட பெண்களுக்கே தெரியும். ஆண்களுக்கு தெரிந்ததெல்லாம் செலவு மட்டுமே! அதனால் ஆண்களுக்கு சேமிப்பது பற்றி அறிவில்லாதது என்பது ஒரு தேசிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

 

பிரச்சினையை பற்றி யாரிடம் சொல்வது?

20 வயதை தாண்டிச் செல்லும்போது ஆண்களுக்கு வரக்கூடிய இன்னொரு பிரச்சினைதான் எனது பிரச்சினையை நான் யாரிடம் சொல்வது என்பது. வீட்டிலும் சொல்ல முடியாது. ஏனென்றால், பெரியவனாயிற்றே. அதனாலே அதிகமானோர் இந்த பிரச்சினையை பகிர்ந்துகொள்ள ஒரு காதலை தேடுகின்றனர். அவ்வாறு கிடைக்கும் காதலுடனும் தனது பிரச்சினையை பகிர்ந்து கொள்கின்றனர்.

 

வீட்டுப் பிரச்சினை

20 வயது என்பது வீட்டுப் பொறுப்பு கைக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் நிறைந்த வயதாகும். யாரும் பலவந்தமாக உங்கள் மீது பொறுப்பை தராவிட்டாலும், நீங்களாகவே பொறுப்பை எடுக்க முயல எண்ணும் ஒரு வயதாகும். பெற்றோரின் நோய் நொடிகளை கவனித்தல், வீட்டிற்கு ஒரு சேமிப்பை மேற்கொள்ள, தம்பி தங்கையர் இருப்பின் அவர்களின் படிப்பு பற்றிய கரிசனை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய எண்ணப்பாடுகள் இருக்கும். இவ்வகையான பிரச்சினைகள் இந்த வயது ஆண்மகன்களுக்கு வரக்கூடும்.

 

இவைதான் இருபது வயதை அடைந்த ஒரு சாதாரண ஆண்மகனுக்கு இருக்கக்கூடிய பிரச்சினையான கேள்விகள். இம்மாதிரியான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டுபிடித்தால் வாழ்வில் சரியான இலக்கை அடைய முடியும்.