சருமப் பிரச்சினைகளுக்கான காரணம் இதுதான்!

சருமப்பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து களைத்து விட்டீர்களா? அழகாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சரும பிரச்சினைகளை உருவாக்கும் காரணங்களை அறிந்திருக்க வேண்டும். ஒருவர் உட்கொள்ளும் உணவே பல சருமப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது. ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால்தான் கருவளையங்கள், வறண்ட சருமம், கருமை மிக்க உதடுகள், முகப்பருக்கள், வெளிறிய நிற திட்டுக்கள் போன்ற சரும பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். இப்போது சரும பிரச்சினைகளையும், அந்த சரும பிரச்சினைகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்தும் பார்ப்போம்.

 

கருவளையங்கள்

சிறுவயதிலேயே அதிகமானோருக்கு முகத்தில் சுருக்கங்களும் கண்களைச்சுற்றி கருவளையங்கள் மேலும் வறண்ட சருமங்களும் வரக்காரணம், அவர் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு மற்றும் கார்போஹைதரேட்டின் அளவுதான் என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், நாம் உணவுக்காக கோதுமை மா, அரிசி, சர்க்கரை, பாண் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக்கொண்டால் எமது சருமத்தின் ஆயுட்காலம் குறையும். அதில் சர்க்கரை சரும கொலஜனை அழிக்கும் மற்றும் சுருக்கத்தையும் உண்டாக்கும். ஆகவே கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் இருக்க செய்ய வேண்டியது சர்க்கரையை தவிருங்கள். மற்றும் கார்போஹைதரேட் உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

 

முகப்பருக்கள்

பல இளைஞர்களுக்கு உள்ள பெரிய தலைவலிதான் முகப்பரு. இந்த பிரச்சனையினால் இருபாலரும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர். முகப்பருக்கள் 16-22 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிகம் வரக்காரணம் உடலில் உள்ள ஹோர்மோன் மாற்றங்கள் என நம்பப்படுகின்றது. இருப்பினும், அதிகமான எண்ணெய் உணவுகள் மற்றும் காரமான உணவுகளும் இதற்கு காரணமாகும். எனவே முகப்பருக்களை இல்லாமல் செய்ய உண்ணும் உணவில் இஞ்சி, மஞ்சள், ஒலிவ் எண்ணையை சேர்த்துக்கொள்வது சிறந்தது.

 

வெள்ளைத்திட்டுக்கள் போன்ற தேமல்

முகத்தில் தேமல் வடிவத்தை போல பல வெள்ளைத்திட்டுக்கள் வர கல்லீரல் பிரச்சினைதான் காரணமாகும். கல்லீரல் உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுப்பதார்த்தங்களை வெளியேற்றுகிறது. ஆனால் அதற்கு போதியளவு நீர் இல்லாவிட்டால் சரியாக செயற்படாது. இதன் மூலம் சுத்திகரிப்பு செயற்பாடு பாதிக்கப்பட்டு, முகத்தில் மற்றும் சருமத்தில் வெள்ளை நிற திட்டுக்களை உருவாக்கும். ஆகவே சரும பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தக்கூடியவர்கள் தினமும் 3 லீட்டர் நீரை குடியுங்கள்.

 

கருமையான உதடுகள்

பொதுவாக புகைப்பவர்களுக்கே உதடுகள் வெடித்தும் கறுப்பாகவும் காணப்படும். இந்த பழக்கத்தினால் புற்று நோய் வருவதும் நாம் அறிந்ததே. இதனால் உறுப்புகள் காலப்போக்கில் செயலிழந்து நாம் உயிரிழக்கவும் வாய்ப்புண்டு. சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு உதடுகள் மட்டுமின்றி ஈறுகளும் கறுப்பு நிறமாகும். மேலும் உதடுகளில் போதியளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் உதடுகள் கறுப்பாகும். இதை தவிர்க்க புகை பழக்கத்தை விடுங்கள். இல்லாவிட்டால் யமனுக்கு ஹாய் சொல்ல தயாராகுங்கள்.

 

  • சராசரி மனிதன் ஒருநாளைக்கு 3 தொடக்கம் 4 லீட்டர் நீர் வரை பருக வேண்டும். இதன் மூலம் சருமத்தை வறட்சியின்றி பொலிவாக வைத்துக்கொள்ள முடியும்.
  • சருமம் மென்மையாக இருக்கவும் அழகாக தோற்றமளிக்கவும் விட்டமின் C உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. (தக்காளி, எலுமிச்சை, ஸ்ட்ரோபெரி, நெல்லி, ஆரஞ்சு)
  • எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு சருமத்தையும் சேதப்படுத்தும்.
  • பலவண்ண காய்கறிகளை உணவிற்கு எடுத்துக்கொள்ளும் போது உடலில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடென்ட்களும் உற்பத்தியாகின்றன. (கத்தரிக்காய், கோவா, பசளிக்கீரை, போஞ்சி, பூசணிக்காய்)