இலங்கையில் சுற்றுலாவுக்கு ஏற்ற குளிரான இடங்கள்

குளிரான பகுதிகளைப் பற்றி பேசுகையில், இலங்கை பயண இரசிகர்கள் நினைவில் வைத்திருக்கும் பகுதிகள் யாவை? பெரும்பாலான மக்கள் ஒரே பதில்களைத்தான் கூறுவார்கள். அதைத் தவிர, இலங்கையின் குளிர்ந்த பகுதிகளில் வேறு என்ன இருக்கிறது? அவ்வாறான 8 பகுதிகள் பற்றிய தகவல்களை இன்று தரவுள்ளோம்.

 

1. நுவரெலியா

இலங்கையின் மிகவும் பிரபலமான குளிரான பகுதி நுவரெலியா. தேனிலவு, குடும்ப பயணங்கள், கல்வி சுற்றுலாக்கள் போன்றவற்றிற்கு அதிகமானோர் தேர்ந்தெடுப்பது இதையே. கிரிகோரி ஏரி, விக்டோரியா பார்க், பழைய தபால் அலுவலகம், மூன் பிளாசா, செயின்ட் கிளெய்ர் நீர்வீழ்ச்சி, ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அம்பேவெல பண்ணை ஆகியவற்றை இங்கே பார்வையிடலாம்.    

 

2. எல்ல

நுவரெலியாவைப் போல எல்ல மிகவும் குளிராக இல்லை என்றாலும் இங்கு பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. எல்ல பாறை, பல்லென்கெட்டு நீர்வீழ்ச்சி, நைன் ஆர்ச் என்ற வளைந்த பாலம், ஜெட் வடிவ ரயில் பாதை என எல்லா பகுதிகளையும் எல்ல சென்றால் பார்க்கலாம். ஆனால் நுவரெலியாவைப் போல பெரிய ஹோட்டல்கள் எதுவும் இல்லை. இருக்கின்ற அறைகளும் மிகவும் விலை உயர்ந்தவை.

 

3. தெணியாய

தெணியாய மிகவும் குளிர்ந்த காலநிலையுடன் லிட்டில் நுவரெலியா என்றும் அழைக்கப்படுகிறது. இது மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாத்தறையிலிருந்து தெணியாயவுக்கு இரண்டு மணி நேர பயணம் மட்டுமே. இங்கும் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. 

 

4. பதுளை

ஊவா மாகாணத்திலுள்ள பதுளை மாவட்டம் குளிரான பகுதி. மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகான மாவட்டம். பெரிய ஹோட்டல்கள் இல்லையாயினும் வாடகைக்கு பல இடங்கள் உள்ளன. பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. துன்கிந்தை நீர்வீழ்ச்சி, போகொட பாலம், தோவ கோயில்,  தியதலாவவின் ஃபாக்ஸ் ஹில் தளம் மற்றும் முதியங்கன பன்சல என்பன முக்கியமானவை.

 

5. மாத்தளை

மாத்தளை மத்திய மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இயற்கையாகவே, இந்த மாவட்டமும் குளிராக இருக்கிறது. மாத்தளை பிரபலமான ரிவர்ஸ்டன் மலைக்கு உரிமையான மாவட்டமாகும். அது மட்டுமல்லாமல், மாத்தளை பயணத்தில் நீங்கள் அலுவிகாரை, நாலந்தா கெடிஜ், முத்துமாரி அம்மன் கோயில்,  பிடவல பதன மற்றும் செம்புவத்தை போன்ற இடங்களை எளிதாகக் காணலாம். இவற்றில் சில கல்வி ரீதியாக முக்கியமானவை என்றாலும், சில இடங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைச் சேர்க்கும்.   

 

6. கண்டி

இந்த பிராந்தியமும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தது. இதுவும் குளிர்ச்சியான பிரதேசம்தான். சாலையில்கூட, ஏ.சி.க்குள் செல்வது போல குளிராக உணரலாம். தலதா மாளிகை, பேராதனை பூங்கா, உடவத்த கேளே, கண்டி தேசிய அருங்காட்சியகம் மற்றும் பல விஷயங்களை நீங்கள் இந்த நகரத்தில் பார்க்க முடியும். அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை. தங்குமிடங்களும் ஹோட்டல்களும் ஏராளமாக உள்ளன.

 

7. சிவனொளிபாத மலை

ஸ்ரீபாத என்று பௌத்தர்களும் சிவனொளிபாதமலை என இந்துக்களும் ஆடம்ஸ் பீக் என முஸ்லிம்களும் பறங்கியரும் அழைக்கும் இந்த இடத்தை தரிசிக்க சென்ற அனைவரும் குளிர்ந்த உணர்வை பெறாமல் வந்ததே இல்லை. மலை உச்சியை அடைந்தவுடன் கை கால்கள் விறைத்துப் போகும் அளவுக்கு குளிராக இருக்கும். தர்மசிந்தனை பிரசங்கங்களை மலை உச்சியில் செய்து வந்தாலும் அங்குள்ள துறவிகள்கூட உடலுக்கு குளிரை தாக்குபிடிக்கக்கூடிய ஆடைகளை அணிந்துள்ளனர். அந்த மலை உச்சியில் அவ்வளவு குளிராக இருக்கும். அங்கு செல்வோர் நல்ல தடிப்பான ஆடை அணிந்து செல்வது வரவேற்கத்தக்கது.

 

8. ஒஹிய

ஒஹிய என்பது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு எந்த காலநிலையில் சென்றாலும் மூடுபனி சிறிதாவது இருக்கத்தான் செய்கின்றது. இது ஒஹிய புகையிரத நிலையத்தின் ஒருவகை மர்மமாகும் என பலர் கூறுகின்றனர். இங்கிருந்து ஹோர்டன் சமவெளிக்கு சிறிது தூரம் மட்டுமே செல்ல வேண்டும். இலங்கையின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியான பம்பரகந்த நீர்வீழ்ச்சியையும் ஒஹியவுக்கான பயணத்தில் பார்வையிடலாம். கிரிகல்பொத்த மலையும் அதற்கு அருகிலேதான் உள்ளது. எனவே குளிர்ந்த பக்கத்தைப் பற்றி நீங்கள் பேசும் போது ஒஹியவை மறந்துவிடாதீர்கள்.