பஸ்ஸில் பயணம் செய்வோரின் உரிமைகள் பற்றி தெரியுமா?

இலங்கையின் போக்குவரத்து சேவையைப் பற்றி பேசும்போது பஸ்வண்டிதான் நினைவிற்கு வரும். ஏனென்றால் அலுவலகம் செல்வோர், பாடசாலை செல்வோர், ஏனைய அலுவல்களுக்குச் செல்வோர் என அதிகமானோர் பயன்படுத்தும் மற்றும் எந்த நேரத்திலும் கிடைக்கும் சேவையாக பஸ் சேவை காணப்படுகின்றது. ரயில் சேவை இல்லாத நாட்களில் பஸ் சேவைதான் அனைவருக்கும் உதவும். பஸ்ஸில் பயணித்தால் போதுமா? பஸ்ஸில் பயணிப்போரின் உரிமை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா? இதோ அறிந்துகொள்ளுங்கள்.

 

டிக்கெட் டிக்கெட்!

பஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா! ஆனால் அப்படி டிக்கெட் எடுக்காமல் போவோரையும் கண்டிருப்போம். அது தண்டனைக்குரிய குற்றம். அதேபோல காசு கொடுத்த பின்னர் டிக்கெட் தராமல் இருப்பதும் குற்றம்தான். குறுகிய தூர பயணத்தைவிட நீண்ட தூர பயணத்தின்போது டிக்கெட் பெறுவது மிகவும் அவசியம். உதாரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களை பொறுத்தவரை ஒரு பஸ்ஸிற்கு இரண்டு நடத்துனர்கள் இருப்பார்கள். அவர்களில் சில வேளை ஒருவர் முன்பே இறங்கி விடுவார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் அவரிடம் ஏற்கனவே காசை கொடுத்து டிக்கெட் வாங்காமல் விட்டால், நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லை என்று கருதுவார்கள். அதற்காக பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகவே மறக்காமல் டிக்கெட்டை கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

 

பாண் பெட்டி

சில பஸ்களில் ஈ கூட நுளைய முடியாத அளவிற்கு பயணிகளை அடைத்து ஏற்றிச் செல்வார்கள். குறிப்பாக மிதிபலகையில் பயணிப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஆனால் முன்பை போல் இப்போது அப்படி தொங்கிக் கொண்டு சென்று சாகசம் காட்ட முடியாது. ஏனென்றால் பொலிஸார் கண்டால் பஸ் உரிமையாளர்களுக்கே பிரச்சினை. அதனால் அளவுக்கதிகமாக பான் பெட்டியை போல பயணிகளை அடைத்துக்கொண்டு செல்லமுடியாது. மேலும் ஏசி பஸ்களில் இருக்கையின் எண்ணிக்கைக்கு அளவான பிரயாணிகளையே ஏற்ற முடியும். இவற்றை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

 

காது கிழியும் சத்தம்

தூர பிரயாணம் செல்லும் பஸ்களில் காது கிழியும் அளவிற்கு பாடல்களை ஒலிபரப்புவார்கள். இப்போது அப்படி ஒலிபரப்பினால் தண்டப்பணம் அறவிடப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், பஸ்களில் இப்போது பெரும்பாலும் சத்தத்தை குறைத்தே ஒலிபரப்புகின்றனர்.  அவ்வாறு இல்லையாயின் சாரதி அல்லது நடத்துனரிடம் கூறி குறைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை

 

குடிகார டிரைவர்

நாம் பஸ்ஸில் இருக்கும் பஸ் சாரதியைத்தான் நம்பியிருக்கின்றோம். ஏனென்றால் பிரயாணத்தின்போது அனைவரதும் உயிர் அவரிடமே உள்ளது. பஸ் விபத்துக்குள்ளாகும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதனால் நாம் செல்லும் பஸ்ஸை ஓட்டிச்செல்லும் சாரதி சுய நினைவோடு, புத்தி சுயாதீனத்தோடு இருக்கவேண்டும். குறிப்பாக குடித்து விட்டு ஓட்டாமல் இருந்தால் மிகச்சிறப்பு. அப்படி குடித்து விட்டு ஓட்டுபவராக இருந்தால் வேறு டிரைவரை வைத்து ஓட்டச் சொல்வது எமது உரிமை மட்டுமல்ல கடமையும்கூட.