2020 ஜனவரி மாதத்தில் நடந்த துயர சம்பவங்கள்

வருடத்தின் ஆரம்பத்திலேயே பல தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் இடம்பெறுவதானது, பொதுவாக மக்களை அதிகமாக சிந்திக்க வைக்கும். குறிப்பாக இவ்வருடத்தின் (2020) ஆரம்பம் பல அதிர்ச்சிகளோடு காலடி எடுத்து வைத்துள்ளதென்பது யாவரும் அறிந்த உண்மை. ஜனவரி மாதம் முடிவடைவதற்கு முன்னரே பல அசம்பாவிதங்களும் பிரச்சினைகளும் நடந்தேறின. உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட அவ்வாறான சம்பவங்களின் தொகுப்பை இன்று தருகின்றோம்.

 

அவுஸ்திரேலியா காட்டுத்தீ

காலநிலை பிரச்சினையால் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயானது உயிர் சேதம், உடைமை சேதம்  மற்றும் சொத்து சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதனால் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டது. 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் பரவிய காட்டுத்தீயினால் சுமார் 5900 வீடுகள் சேதமடைந்தன. கங்காரு, கோலா உள்ளிட்ட 1 பில்லியனுக்கும் அதிகமான அரிய உயிரினங்கள் தீயில் கருகின. 34 பேர் வரை இந்த காட்டுத்தீயினால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காட்டுத்தீயினால் அளவுக்கதிகமான வெப்பம் உணரப்பட்டதாக அந்நாட்டு மக்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், பாரிய காட்டுத்தீயின் பின்னால் ஏற்பட்ட மழைவீழ்ச்சி அதனை தணித்தது.

 

ஈரானிய தளபதி காசிம் சுலைமானி மரணம்

ஈரானின் மிகவும் பலம்பொருந்திய தளபதியாக காணப்பட்டவர் காசிம் சுலைமான். அமெரிக்க இராணுவம் பயங்கரவாதியாக கருதிய இவரை, கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்கப் படை கொன்றது. இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் முறுகலை மேலும் அதிகரிக்கும் வகையில் இச்செயற்பாடு அமைந்துவிட்டது. எனினும், போரை நிறுத்தவே தான் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா மீதான தாக்குதல்

ஈரானிய படைத்தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க இராணுவம் தாக்கிக் கொன்றதால் ஆத்திரமடைந்த ஈரான், காசிம் சுலைமானியின் இறுதிச்சடங்கின் பின்னர் சுமார் 2 ஏவுகணைகளை ஈரான் மற்றும் ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகங்களின் மேல் ஏவியது. இதில் சுமார் 80 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. எனினும் இக்கூற்றை அமெரிக்கா மறுத்தது. இதற்கு அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தாமை குறித்து உலக நாடுகள் ஆச்சரியமாகவே பார்த்தன.

 

உக்ரைன் விமான விபத்து

ஈரான் அமெரிக்க முறுகல் நிலை தொடர்ந்த சந்தர்ப்பத்தில், ஈரானிலிருந்து உக்ரைன் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இது ஈரானிலிருந்து எறியப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றின் தாக்குதலால் ஏற்பட்ட விபத்தென பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தே இதுவென்றும் என்றும் இந்த விபத்துக்கும் ஏவுகணை தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. இதில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோப் பிரையன்ட் மரணம்

ஜனவரி மாதத்தின் மற்றுமொரு துயர சம்பவமாக கோப் பிரயன்டின் மரணம் பதிவாகியுள்ளது. ஜனவரி 26ஆம் திகதி கலிபோர்னியாவின் கலாபாசஸில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் கோப் பிரையன்ட் உயிரிழந்தார். அவரது 13 வயது மகள் கியானா பிரையன்ட் மற்றும் கல்லூரி பேஸ் போல் பயிற்சியாளர் ஜோன் அல்தோபெல்லி உட்பட எட்டு பேரும் இந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஹெலிகொப்டர் பறக்கத் தொடங்கி 35 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது.

 

கொரோனா வைரஸ்

இன்றளவில் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோவெல் வைரஸ் கொரோனா. இது சுமார் 10000 வருடங்கள் பழைமையான ஒரு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த 7 வது வைரஸ் ஆகும். பாகுபாடின்றி எந்த காலநிலையிலும் வாழக்கூடிய திறன் கொண்டது. இந்த வைரஸ்  தாக்கும் ஒரு உயிரினத்தின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றாற்போல மாறி அந்த உயிரினத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அழித்து விடும்.

இந்த நோவெல் கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்திலுள்ள விலங்குகளின் சந்தையில் இருந்து வாங்கிய மாமிசத்தை சாப்பிட்டே பரவியுள்ளதென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியே இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டாரென கூறப்பட்டாலும், அதற்கு முன்னரே பல நோயாளிகள் இதன் தாக்கத்திற்கு உள்ளாகியதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் தற்போது உயிரிழப்புகள் 1000ஐ தாண்டியுள்ளது. மேலும் 45,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. அத்தோடு, உலக சுகாதார ஸ்தாபனமானது, கொரோனா வைரஸிற்கு தற்போது கொவிட் என பெயரிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு சிங்கப்பூர் என அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.