பரிசுப்பொருட்களை வழங்கமுன் கவனிக்க வேண்டியவை

 

நாம் யாருக்காவது பரிசு வழங்க விரும்பினால், எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென நினைப்போம். அப்படி நாம் கொடுக்கவிருக்கும் பரிசு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அப்படி எதை வாங்குவது என்று பல சந்தர்ப்பங்களில் தலையை போட்டு பிய்த்துக்கொள்வோம். கடையை சுற்றிச் சுற்றி வருவோம். எதை வாங்குவதென தெரியாமல் தடுமாறுவோம். அப்படித்தானே? இதனை வாசித்துவிட்டுச் செல்லுங்கள்.

 

அவர்களுக்கு பிடித்ததா??

நன்கு பழக்கப்பட்ட ஒருவராயின் அவர் விரும்பும் பொருளை கொடுப்பதே சிறந்தது. பொதுவாக கைக்கடிகாரம் அல்லது மொபைல் ஆகியவற்றை அதிகமானோர் விரும்புவார்கள். இவை சற்று விலை அதிகம்தான். இதனை விட அவர்கள் விரும்பும் சிறிய பொருட்கள் எவையென தேடுங்கள். அவர்கள் எதை விரும்பினாலும் உங்கள் பணத்தை வீண் செலவு செய்யாமல் அவர்கள் எதை விரும்புவார்களோ அதை மாத்திரம் வாங்கிக் கொடுப்பதன் மூலம் செலவு குறையும். அதனால் அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒரு பொருளை பரிசாக வாங்கி கொடுப்பது சிறந்தது.

 

அவர்களுக்கு ஏற்றதா?

பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுக்கும் நாம், அது அவர்களுக்கு ஏற்ற பொருளா என்பதையும் பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு 10 வயது சிறுவன் மொபைல் மேல் ஆசைப்பட்டால் அதனை வாங்கிக் கொடுக்கக் கூடாது. பின்னர் வீடியோ கேம், கார்டூன் என்று அதிலேயே மூழ்கிவிடுவார்கள். ஆகையால், மொபைலுக்கு அடுத்தபடியாக என்ன ஆசைப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதனை வாங்கிக் கொடுங்கள். பரிசுப் பொருட்கள் எப்போதும் அவரவர் வயதிற்கும் அறிவிற்கும் ஏற்றதாக அமையவேண்டும்.

 

ஏற்கனவே உள்ளதை கொடுக்காதீர்கள்

இப்பொழுது நீங்கள் ஒரு பரிசை கொடுப்பதாக நினைத்துக் கொள்வோம். அந்த பரிசுப்பொருள் இதற்கு முன்னர் அவருக்கு கிடைத்துள்ளதா அல்லது அந்த பொருள் அவரிடம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக அவரிடம் ஒரு மொபைல் இருப்பின் அவருக்கு இன்னுமொரு மொபைல் வாங்கிக் கொடுப்பதில் அர்த்தமில்லை. ஒரு கால்பந்து அவரிடம் இருக்கும்போது இன்னொன்றை வாங்கிக் கொடுப்பது நன்றாக இருக்காது. ஆகையால் அவர்களிடம் இல்லாத பொருளை அல்லது வித்தியாசமானவற்றை வாங்கிக் கொடுங்கள்.

 

பெறுமதியானதா?

திருமண வைபவங்களுக்குச் சென்றால் முன்பெல்லாம் 1000 ரூபாய் மொய்யாக வைத்து விட்டுத்தான் வருவார்கள். ஆனால் இன்று அது சிறு திருமண வைபவத்திற்கு போதுமானது. உதாரணமாக நாம் ஒரு பெரிய திருமண வைபவத்திற்கு போகிறோம் என்றால் அதுவும் மதிப்பிற்குரிய ஒருவரின் திருமணத்திற்கு செல்லும்போது 1000 ரூபாய் மொய்வைக்க முடியாது தானே? அதற்கு அதிகமாக மொய் வைக்க பணம் இல்லாவிட்டால் என்ன? அழகான பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள்.

 

சரியானது!

இதற்கு நல்ல உதாரணமாக காதலர்களை கூறலாம். தாம் வாங்கும் பரிசு சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கவேண்டுமென காதலர்கள் எண்ணுவார்கள். 100 வீதம் பொருத்தமானதா என்பதை சரிபார்த்துக்கொள்வார்கள். இவ்வாறான பரிசுப்பொருள் மனதில் இடம்பிடிக்க சிறந்த வழியாகும்.

 

விசேடமான ஒன்று!

பரிசு கொடுக்கும் நீங்கள் பரிசு வழங்கப்படுபவரின் காதலராக இருப்பின், நீங்கள் அவரது மனதில் நீங்கா இடத்தை பெறவேண்டுமென்றால் அவர்களுக்கு சிறந்த ஒரு பரிசை வழங்குவது நல்லது. அவர் கைக்கடிகாரம் மீது அதீத ஆசை வைத்திருந்தால் ROLEX WATCH ஒன்றை கொடுப்பதன் மூலம் அவரது உள்ளத்தில் இடம்பிடிக்கலாம்.

 

மிகவும் பழக்கமற்ற ஒருவராயின் என்ன செய்வது?

மிகவும் அறிந்த ஒருவராயின் எப்படியாவது தேடி பரிசை வாங்கிவிடுவோம். நெருக்கமில்லாத ஒருவராக இருந்தால் என்ன செய்வது? நாம் கொடுப்பது பயனுள்ளதாக இருக்க வேண்டுமல்லவா? சூப்பர் மார்கெட் அல்லது புடவைக் கடையில் Gift voucher ஒன்றை வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.