கொழும்பில் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

 

இலங்கையின் தலைநகரான கொழும்பை இன்று வானுயர்ந்த கட்டிடங்களும் தொடர்மாடிகளும் அலங்கரிக்கின்றன. எனினும், சுற்றுலாச் செல்வதாயின் வெறுமனே கட்டிடங்களை மாத்திரம் பார்க்க முடியாதுதானே? கட்டிடங்களை தாண்டி கொழும்பில் பல இடங்கள் காணப்படுகின்றன. வெளியிடங்களில் இருந்து வருவோர் அவற்றை தெரிந்துகொண்டு சென்றால் உங்கள் பயணம் இலகுவாக அமையும். இதோ, அவ்வாறான இடங்களைப் பற்றிய தகவல்களை தொகுத்துத் தருகின்றோம்.

 

தேசிய அருங்காட்சியகம்

தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 1876 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இலங்கையை பிரித்தானியர் ஆண்டபோது பிரித்தானிய ஆளுநரால் தேசிய அருங்காட்சியம் நிறுவப்பட்டது. இது இலங்கையின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும். இந்த அற்புதமான கட்டிடத்தைச் சுற்றி அழகான மற்றும் அமைதியான பசுமை பூங்காவொன்று உள்ளது. இலங்கையின் பண்டைய காலனித்துவ காலத்தில் காணப்பட்ட கலை, கல்வெட்டுகள், வாள், துப்பாக்கிகள், முகமூடிகள் மற்றும் சிலைகள் போன்றவற்றை இங்கு காணலாம்.

இந்த அருங்காட்சியகம் சர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, கொழும்பு 7 இல் அமைந்துள்ளது. இது 09:00 – 18:00 மணிவரை திறந்திருக்கும். டிக்கெட் விலை வயது வந்தோருக்கு ரூ.250, குழந்தைகளுக்கு ரூ.150.

 

கங்காராம விஹாரை

பௌத்த ஆலயமான கங்காராம விஹாரை பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு சலசலப்பான கோயில் வளாகமாகும். அவற்றில் சில வெளிப்படையாக மிகவும் விசித்திரமானவை. உதாரணமாக நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பல ஆண்டுகளாக பக்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து பெறப்பட்ட பரிசுகளின் காட்சி மண்டபம் ஆகியவை இதில் அடங்கும். இங்கு புத்தரின் தலைமுடி நினைவுச்சின்னமாக உள்ளது. கல்லால் ஆன, வெள்ளை பிளாஸ்டிக் மற்றும் தங்க நிறத்தினாலான பல புத்தர் சிலைகளை இங்கு ஒரே இடத்தில் பார்க்கலாம்.

இது கொழும்பு 2 இல் ஸ்ரீ ஜினரதன மாவத்தையில் அமைந்துள்ளது. அதிகாலை 5.30 முதல் இரவு 10.00 மணிவரை இந்த விஹாரை திறந்திருக்கும். டிக்கெட் விலை 100 ரூபாய் மட்டுமே.

 

பெய்ரா ஏரி

கொழும்பின் மையத்தில் உள்ள கங்காராம விஹாரைக்கு அருகில் காணப்படும் மிகப்பெரிய ஏரி இதுவாகும். இந்த ஏரி நீர் மாசுபடுவதால் பச்சை நிறத்தில் நீர் காணப்படும். ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு உள்ளது. இது ஒரு முஸ்லிம் ஆதரவாளரின் நன்கொடையிலிருந்து கட்டப்பட்டது. இந்த ஏரி குறுகிய கால்வாய்கள் வழியாக மற்ற ஏரிகளுடன் இணைந்து இந்திய கடலில் முடிகிறது. இந்த ஏரியும் அதன் கால்வாய்களும் முற்காலத்தில் நகரத்திற்குள் பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. இன்றும் போர்த்துகீச பெயரான “பெய்ரா” என்றே அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தமானது ஆங்கிலத்தில் எல்லை என்று பொருள். இந்த ஏரியில் நாரைகள், பெலிகன்கள், பல்லி போன்ற விலங்குகளை நீங்கள் காணலாம். மேலும் ஏரியில் பல்வேறு வகையான மீன்களும் உள்ளன.

 

சுதந்திர நினைவு மண்டபம்

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அமைதியான, பசுமையான தோட்டத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான கல்லால் ஆன கட்டிடம் அதனை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு முன்னால் இலங்கையின் முதல் ஜனாதிபதியான “தேசத்தின் தந்தை”  கெளரவ. டொன் ஸ்டீபன் சேனநாயக்க அவர்களின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் கவலை என்னவென்றால் தேசத்தின் தந்தையின் தலையில் வந்து வெயில் காயும் காக்கைகளை விரட்ட யாரும் இல்லை.

இது கொழும்பு 7 இல் CINNAMON GARDEN இற்கு அருகில் உள்ளது. இதன் பெயரிற்கு ஏற்ப இங்கு செல்லவும் பார்வையிடவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சுதந்திரமாக சென்று பார்வையிடலாம். கொழும்பு என்றாலே எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படும். ஆனால் இந்த இடமோ எப்போதும் மிகவும் அமைதியாகவே காணப்படும்.

 

புறக்கோட்டையின் குறுக்கு வீதிகள்

கொழும்பு 11, புறக்கோட்டையானது கொழும்பின் பழைமையான வீதிகளில் ஒன்றாகும். இடையில், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற சில மத கட்டிடங்களையும் நீங்கள் காணலாம். புறக்கோட்டை ஆங்கிலத்தில் PETTAH என்றே அழைக்கப்படுகின்றது. இந்த பெயரையே இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து இலங்கையின் பல இடங்களுக்கு மொத்த வியாபாரிகள் வந்து பல்பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்து போகின்றனர். ஒவ்வொரு குறுக்கு வீதியிலும் ஒவ்வொரு வகையான பொருட்கள் பிரத்தியேகமாக காணப்படும். மொத்தமாகவும் சில்லறையாகவும் பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

 

காலி முகத்திடல் (GALLE FACE GREEN)

கோட்டை பகுதிக்கு தெற்கே காலி முகத்திடல் உள்ளது. கொழும்பிலுள்ள குறுகிய கடற்கரை மற்றும் கடலிற்கு அடுத்ததாக நீண்ட புல்வெளி உள்ளது. நடைபயிற்சி, ஓடுதல், கால்பந்து விளையாடுதல், பட்டம் விடுதல் மற்றும் கிரிக்கெட்டுக்கு ஏற்ற அமைதியான இடமாகும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் விடுமுறை நாட்களில் சனக்கூட்டம் இங்கு அலைமோதும். இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.