மனிதன் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் அவனுள் இருக்கும் சில குணங்களை மாற்றவே முடியாது. அவ்வாறு இருக்கும் சில குணங்களால் அவர்களின் மீதான கெட்ட எண்ணங்களும் உருவாகக்கூடும். மேலும் அவரை அக்குணங்கள் தரம் குறைந்தவராகவும் காட்டும். அவ்வாறான சில பழக்கவழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றையறிந்து உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
கெட்ட வார்த்தை வேண்டாம்
கெட்ட வார்த்தைகளின் பிரயோகம் இன்று சமூகத்தில் அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக நண்பர்களுடன் பேசும்போது கெட்ட வார்த்தைகளை சகஜமாக பேசுவது வழக்கம். சிலர் எந்த இடம், யார் இருக்கின்றார்கள் என்று பார்க்காமல் பேசுவார்கள். இது மிகவும் தவறு. நீங்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் மற்றவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம். உங்கள் மீதான மதிப்பு மற்றும் மரியாதையும் இல்லாமல் போகும். இவ்வாறு உங்களை நீங்களே தரம்குறைந்தவராக காட்டிக்கொள்ளாதீர்கள்.
ஒழுங்குவிதிகளை மீறாதீர்கள்
சில இடங்களில் சில ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பார்கள். உதாரணாமாக வீதியில் குப்பை போடக்கூடாதென படத்தின் மூலமும் விளக்கியிருப்பார்கள். ஆனால் அதை தெரிந்தும் போடுவார்கள். சுவரில் கிறுக்கக் கூடாதென அறிவுறுத்தியருப்பார்கள். ஆனால், அங்கு எதையாவது எழுதிவைப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த உலகத்திற்கே தேவையற்ற மனிதனாக நீங்கள் சித்தரிக்கப்படுவீர்கள். அவ்வாறு செய்து உங்களை நீங்களே தரக்குறைவாக காட்டிக்கொள்ளாதீர்கள்.
அசுத்தமான பாதணியை உபயோகிக்காதீர்கள்
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவராக இருப்பின் அங்கு வேலைக்கு வருபவர்கள் அழகாக சுத்தமாக நேர்த்தியாக வந்திருக்கும் போது நீங்கள் மாத்திரம் அழுக்கான பாதணியை அணிந்து வந்தால் அது நன்றாகவா இருக்கும்? அந்த இடத்தில நீங்கள் சற்று தரம் குறைத்தே மதிப்பிடப்படுவீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய விடயமே கிடையாது. உடனே ஒரு ஷூ பொலிஷ் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
தயவுசெய்து குளியுங்கள்
சிலரை பார்த்ததுமே “நீ இன்னைக்கு குள்ளிக்கல தானே” என்று கேட்கும் அளவிற்கு தோற்றமளிப்பார்கள். எப்போதாவது ஒரு நாள் இவ்வாறு தோற்றமளித்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி மழுப்பி விடலாம். ஆனால் எந்த நாளும் இப்படி வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும். இது வேலைக்கு செல்லும் அல்லது மாணவர்களுக்கு பொருந்தும். அலுவலகங்களில் சிலர் அருகில் வரும்போதே துர்நாற்றம் வீசும். அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே போகமுடியாது. நீங்கள் என்னதான் படித்தவர், பண்பானவர் என்றாலும் சுத்தம் பேணப்படாவிட்டால் ஜந்துவைப் போலத்தான் உங்களை அனைவரும் பார்ப்பார்கள்.
நேரத்தை வீணடிக்காதீர்கள்
சிலர் நேரத்தை பற்றிய சிந்தனையே இன்றி இருப்பார்கள். பொதுவாக இவர்களை நேரத்தை நாசமாக்குவோர் பட்டியலில் சேர்க்கலாம். அதாவது எதற்கு எவ்வளவு நேரம் செலவு செய்ய வேண்டுமென்ற அறிவும் தெளிவும் இன்றி நேரத்தை செலவழிப்பார்கள். இவர்களிடம் நேரம் பற்றிய மதிப்பே இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி மற்றவர்களிடத்தில் மதிப்பிருக்கப் போகிறது. குறிப்பாக நேரத்தை பெரிதாக எண்ணுவோர் வாழ்க்கையில் பல விடயங்களை சாதிப்பர்.
பொய் பேசாதீர்கள்
பொய் சொல்வது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் அந்த பொய் எதனை மையமாகக் கொண்டது என்பதை பொறுத்துதான் அவர் தரம் குறைந்தவரா அல்லது ஜென்டில்மேனா என்பது விளங்கும். உதாரணமாக அவர் கூறும் பொய் மற்றவர்களின் வாழ்வில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமலும் சுயநலமின்றியும் இருந்தால் அவர் ஒரு ஜென்டில்மேன்தான். இதற்கு அப்படியே எதிர்மரையாக இருப்பின் அவர் யாரென்பதை நாங்கள் கூறத்தேவையில்லை.
இதைவிட உங்களுக்கு அதிக விடயங்கள் தெரிந்திருக்கலாம். அவ்வாறான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.