ஹோர்ட்டன் சமவெளியில் கண்டுகளிக்கக்கூடிய இடங்கள்

 

எம்மில் பலருக்கும் பிடித்த, அதிகம் அறிந்த மற்றும் பயணிக்க காத்திருக்கும் ஒரு இடம்தான் ஹோர்ட்டன் சமவெளி. ஆனால் அங்கு சென்று எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பது பற்றி பலருக்குத் தெரியாது. அவர்களுக்கான பதிவே இது.

 

எப்போது போக வேண்டும்?

ஹோர்ட்டன் சமவெளிக்கு பட்டப் பகலில் செல்வது சுவாரஸ்யமானதல்ல. சுற்றுலாப்பயணிகள் பொதுவாக இந்த தவறை விடமாட்டார்கள். அவர்கள் இயற்கை ரசனை மிக்கவர்கள். காலை 6 மணிக்கெல்லாம் சென்று பறவைகள் இசைபாடுவது, குரங்குகள் தாவுவது, மரங்களின் சலசலப்பு, இதமான மெல்லிசை காற்று போன்றவற்றை அனுபவிப்பார்கள். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் குளிர்காலமாக இருப்பதால், அதிகாலையில் சென்றால் இலைகளில் பனி இருப்பதை காணலாம். அதுமட்டுமல்லாமல் அதிகாலை பொழுதில் சென்றால் சூடும் இருக்காது. பகல் வெயிலின் தாக்கமும் இருக்காது.

 

கிரிகள்பொத்த

 

இதுதான் இலங்கையின் இரண்டாவது உயரமான மலை. ஆனால் முதலாவது உயரமான மலையான பேதுருதலாகலைக்கு வாகனத்திலும் செல்ல முடியும். ஆனால் இங்கு நடந்து மட்டுமே செல்ல முடியும் என்பதால் மலையேறும் அனுபவமும் கிடைக்கும். இந்த மலை ஹோட்டன் சமவெளி பகுதியின் டிக்கெட் வாங்கும் இடத்திலிருந்து சிறிது தூர இடைவெளியில் அமைந்துள்ளது. ஆனால் இந்த மலைக்கு ஏறுவது வாய்க்கு இலகுவாக இருந்தாலும், உண்மையில் சிரமமானது. இந்த மலையில் எற வேண்டுமென்றால் மாலை 3 மணிக்கு முன்னர் ஏறி இறங்கி விடவேண்டும். தனியாக ஏறவிடமாட்டார்கள். இதனை ஏறிமுடிக்க 4 மணித்தியாலங்கள் போதும்.

 

உலக முடிவு (வாழ விரும்பாதோரின் வாழ்க்கைக்கே முடிவு) !!

ஹோர்ட்டன் சமவெளியில் பார்க்கவேண்டிய மிகவும் பிரபலமான இடம்தான் WORLD’S END.  இங்கு சென்று வித்தியாசமாக செல்பீ எடுக்க முயன்ற பலர் இறந்த கதைகளும் உண்டு. அதேபோல் வாழவே விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டவர்களும் உள்ளனர். அதனால் செல்ஃபீ  எடுக்கும் போது உங்கள் உயிரை பணயம் வைத்து செல்பீ எடுக்காதீர்கள்.

 

ஸ்ரீலங்கன் குளிர்கால மான்      

குளிர் பிரதேசங்களில் காணக்கூடிய மரை மான் வகையினங்களை இங்கு அதிகமாக காணலாம். மக்களின் பார்வைக்கு இலகுவாக தெரியும் வகையில் மிகவும் அருகிலேயே மெதுவாக சோம்பேரித்தனத்தில் புற்களை சாப்பிட்டு கொண்டிருக்கும். இவற்றை வேறு இடங்களில் காண்பது மிகவும் அரிது. ஆனால் இலங்கையில்தான் இது 9 ஆவது அதிசயமாக மக்களுக்கு மிகவும் அருகில் வருகிறது.

 

சிறுத்தை மற்றும் அரியவகை உயிரினங்கள்

யால தேசிய பூங்காவைப் போல ஹோர்ட்டன் சமவெளி பொதுவானதல்ல. இங்கு சில அரியவகை உயிரினங்களையும் பார்க்கலாம். செல்லும் வழியில் சிலவேளைகளில் சிறுத்தைகள், பாதசாரிகளைப் போல வீதியை கடந்து செல்வதையும் பார்க்கலாம். ஆனால் இதுவரை மனிதர்களை தாக்கியதாக செய்திகள் பதிவாகவில்லை. இவற்றைத் தவிர இன்னும் சில பறவைகள், பூச்சி இனங்கள், அரியவகை பச்சோந்தியினங்களையும் காணலாம்.

 

சோறு  முக்கியம் அமைச்சரே!

ஹோர்ட்டன் சமவெளிக்கு குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் தானே செல்வீர்கள்? அப்படி செல்லும்போது கட்டாயம் உங்களுக்குத் தேவையான உணவையும் கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.  நீங்கள் நினைத்ததை சாப்பிடும் அளவிற்கு அங்கு சாப்பாட்டுக்கடை இல்லை. சாப்பாட்டை தவறவிட்டால் 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடைகளைத்தான் தேடிச் செல்ல வேண்டும்.

 

ஆடி பாடி மகிழும் இடமா?

 

 

ஹோர்ட்டன் சமவெளி ஒரு அமைதியான சுற்றுச்சூழலை கொண்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவைகளை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அதேபோல இங்கு தாம் தூம்-ன்னு சத்தம் போட்டுக்கொண்டு. ஆடிப் பாடி மகிழலாம் என நினைக்காதீர்கள்.