முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

 

ஏப்ரல் 21 அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கையை உலுக்கிய கோரச்சம்பவமாகும். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியது. இந்த துயர சம்பவத்தின் பின்னர் நாட்டின் சிறுபான்மை இன மக்களான ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் தீவிரவாத இனமாகவே பார்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களைப் பற்றியும் அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தை பற்றியும் பல உண்மைகள் வெளிவந்தன. மேலும் அதனோடு பல வதந்திகளும் பொய்களும்கூட சேர்ந்தே பரப்பப்பட்டன. இன்று நாம் உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி அறிய வேண்டிய சில முக்கிய விடயங்களை சுருக்கமாக தருகின்றோம்.

 

புர்கா என்பது கட்டாய கடமையா?

முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய ஒரு ஆடைதான் புர்கா. இதனை பற்றி பல கருத்துக்கள் வெளிவந்தாலும் உண்மையில் இதனை எல்லா முஸ்லிம் பெண்களும் அணியவேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் புனித நூலான குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வசனம் (33:59) த்தில் “நபியே, உங்கள் மனைவிகள், மகள்கள் மற்றும் உண்மையுள்ள பெண்களிடம், அவர்கள் மீது தங்கள் மறைப்புகளை அணியச் சொல்லுங்கள். இதனால் அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள், அவர்களுக்கு எந்தத் தீங்கும் வராது. இறைவன் மன்னிக்கக்கூடியவன் மற்றும் அன்புடையவன்

இந்த வசனத்தின்படி இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்ற பெண்கள் தமது உடலை மறைக்கவேண்டும். இது பெண்களின் பாதுகாப்பின் காரணமாகத்தான் என்பதையும் இந்த வசனம் விளக்குகின்றது. உண்மையில் நாட்டில் பல இடங்களில் பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும் முகத்தை மறைப்பதன் மூலம் பெண்களின் அழகு அவர்களின் கணவருக்கு மாத்திரமே உரித்த ஒன்றெனவும் முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

 

முஸ்லிம்களும் அரேபியர்களும்

முஸ்லிம்கள் யாவரும் அரபு நாட்டுக்காரர்கள் என்று பலர் நினைக்கின்றனர். பெரும்பாலும் முஸ்லிம் மற்றும் அரேபியர் எனும் வார்த்தைகள் இரண்டும் ஒன்றென கருத்திற்கொள்கிறோம். ஆனால் இது பாதியளவே உண்மையாகும். அரபு நாடுகளில் இருந்து வியாபாரத்திற்கு முஸ்லிம்கள் வந்திருக்கலாம். எமது அண்டைய நாடான இந்தியாவிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் வரலாற்றைப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்தே வந்திருப்பர். மேலும் உலகில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் 10 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இந்தோனேஷியாவாகும்.

 

ஏழு மனைவிகள்

முஸ்லிம் ஆண்கள் 7 பெண்களை திருமணம் செய்யலாம் என்று பரவலாக கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் அதனை சற்று திருத்திக்கொள்ள வேண்டும். ஏழு அல்ல நான்கு பேரை திருமணம் செய்யலாம். ஆம் முஸ்லிம் ஆண்களுக்கு 4 பெண்களை மணமுடிக்க முடியும். ஆனால் அவர்களின் சட்டத்தின்படி நீதி என்னவென்றால், நான்கு பேரை மணமுடித்தாலும் நான்கு பேருக்கும் பராபட்சமின்றி சம உரிமை அளிக்க வேண்டும். அதாவது உதாரணமாக ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் என்றால், ஒரு நாள் ஒருவரது வீட்டில் இருந்தால் மறுநாள் மற்றவரின் வீட்டில் இருக்க வேண்டும். மேலும் ஒரு மனைவியின் விருப்பத்தோடுதான் மற்றுமொருவரை மணமுடிக்க வேண்டும்.

 

கல்லெறிந்து கொலை செய்தல்

கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனை நம் நாட்டு முஸ்லிம்களிடம் இல்லாவிட்டாலும், சவூதி அரேபியா போன்ற சில கடும் தண்டனை கொடுக்கும் நாடுகளில் இது இன்றும் புழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, சட்டவிரோத விவகாரங்களில் குற்றவாளிகள் சவுக்கால் தண்டிக்கப்படுகிறார்கள். பெரும் தவறுகள் செய்யுமிடத்து கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார்கள்.

 

முஸ்லிம் பெண்கள் வீட்டில் துன்புறுத்தப்படுகிறார்களா?

முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென்ற கருத்து சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் குடும்ப பிரிவுக்குள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் குர்ஆனில் கூறியுள்ளபடி பெண்களுக்கு வீட்டில் எந்தவொரு வன்முறைக்கும் இடமில்லை என்பதாகவே உள்ளது. மேலும் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கு பல மார்க்க சம்பந்தமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விரும்பியபடி உடலுறவு கொள்ள முடியுமா?

குர்ஆனில் பாலியல் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே, இஸ்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் பாலியல் விருப்பத்தையும் கட்டுப்படுத்த முயல்கிறது. உதாரணமாக, இஸ்லாத்தில் குத உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், மாதவிடாய் காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.