நாம் வேலை செய்யும் இடத்தில் எமக்கான முன்னுரிமை என்னவென்பது, விடுமுறை கேட்கும் போதே தெரியவரும். எவ்வளவு நல்ல மேலதிகாரியாக இருந்தாலும், விடுமுறை கேட்கும்போது கடிந்துகொள்வார்கள். இதற்காக, விடுமுறை கேட்பதற்காக எம்மில் பலர் பயன்படுத்தும் பொய்கள் தொடர்பாகவே இன்று பார்க்கவுள்ளோம்.
விசித்திரமான நோய்
எனக்கு நடக்க முடியாது. இடுப்பு வலி. சிறுநீர் பச்சை நிறத்தில் போகுது. நான் வேலை செய்யும்போது இறந்துவிட்டால் எனக்கு இன்சூரன்ஸ் பணம் தருவார்கள். ஆனால் உங்களுக்கு பிரச்சினையாகிவிடும். அதற்காக நான் இன்று விடுமுறை எடுத்துக்கொள்கின்றேன் என்பார்கள்.
வீட்டுப் பிரச்சினை
எங்கள் வீட்டு கூரை உடைந்துவிட்டது. மழைக் காலம் வேறு வந்துவிட்டது. மழை பெய்தால் வீடுமுழுவதும் குளமாகிவிடுகின்றது. எமது வீட்டின் பக்கத்தில் திருடர்களின் நடமாட்டம் அதிகம். ஆகையால் வீட்டில் யாரும் இல்லாவிட்டால் எல்லா பொருட்களையும் கொண்டுபோய் விடுவார்கள். எனக்கும் இன்னும் விடுமுறை மிகுதி இருக்கின்றது தானே? ஆகவே நான் விடுமுறை எடுத்துக்கொள்கின்றேன் என்பார்கள்.
கண்ணீர் கதை
“இதைப் பற்றி சொல்லி வேலையில்லை. ஏன் என்று கேட்காதீர்கள். இதைப் பற்றி பேசும் போதே எனக்கு கண்ணீர் வருகிறது. என் மாமி இறந்துவிட்டார். அவர்கள்தான் என்னை படிக்கவைத்து, இங்கு வேலை செய்யும் அளவிற்கு ஆளாக்கிவிட்டார்கள். அவர்கள் இறந்து சிறிது நாட்களாவது நான் வீட்டில் இருக்காவிட்டால் அவருடைய பிள்ளைகள் தப்பாக பேசுவார்கள். அவர்களுடைய காரியத்தை முடித்துவிட்டு, எல்லா பொறுப்புகளையும் பார்த்துவிட்டு வர குறைந்தது மூன்று நாட்கள் விடுமுறை வேண்டும்” என்பார்கள்.
கோர்த்து விடும் பழக்கம்
“நான் செய்யும் விடயங்கள் உங்களுக்கு விளங்குவதில்லை. நான் நேரத்திற்கு வந்து வேலை செய்கின்றேன். அந்த குமார் தாமதமாக வந்து நன்றாக தூங்குவான். அன்று என் காலில் அடிபட்டுவிட்டது. உங்களிடம் சொல்லாமல் நான் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். ஒரு நாளைக்கு எல்லோரையும் கூப்பிட்டு விசாரியுங்கள். அப்போ நான் நாளைக்கு லீவு எடுக்கின்றேன்” என்பார்கள்.
எனக்கு லீவு வேண்டாம்!
“கொஞ்சம் யோசித்து பாருங்கள்! நான் வேலைக்கு வந்த நாள்முதல் ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றேனா? சம்பளத்தை அதிகரியுங்கள் என கேட்டேனா? லீவு கேட்டேனா? இல்லேயே! அதனால் எனக்கு இரண்டு நாள் விடுமுறை தாருங்கள். இனிமேல் எனக்கு விடுமுறையே வேண்டாம்” என்பார்கள்.
சார்ஜரை காணவில்லை
விடுமுறை எடுத்துவிட்டு வந்து சொல்லும் பொய் இது. “சார், என் மொபைல் சார்ஜர் காணாமல் போய்விட்டது. அதனால் சார்ஜ் பண்ண முடியவில்லை. அதற்கு ஏற்ற சார்ஜர் எங்கள் ஊரில் எங்கேயும் இல்லை. அதனால் உங்களுக்கு அறிவிக்க முடியாமல் போய்விட்டது. மன்னியுங்கள்” என்பார்கள்.