புதுக்கடைக்கு போகின்றீர்களா?  வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்!

 

இலங்கையில் சாலையோர உணவுகள் அவ்வளவு பிரபலமாகவில்லை. ஆனால் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சாலையோர உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தோடு, இரவு நேரங்களிலேயே அதிகம் காணப்படும். சிலருக்கு சாலையோர உணவு பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் சாலையோர உணவுகளை விரும்பும் மற்றும் இன்னும் சாப்பிடாதவர்கள் மற்றும் குறைந்த விலையில் ருசியான ஸ்ட்ரீட் பூட்ஸ் சாப்பிட விரும்புவோருக்கு ஏற்ற ஒரு இடம்தான் புதுக்கடை  இரவு நேர கடைகள். கொழும்பில் உள்ள ஸ்ட்ரீட் பூட்ஸ் பிரியர்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு இடமாக புதுக்கடை காணப்படுகின்றது.

 

எங்கே இருக்கின்றது?

கூகிள் மேப் இல் அளுத்கடை பொலிஸ் என்று தேடி லொகேஷனுக்குச் சென்றால் அங்கிருந்தே ஆரம்பிக்கும் இந்த சாலை உணவுக்கடைகள். புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்து நேராக சென்று வலதுபுறம் திரும்பும் வீதியில் சென்றாலும் இந்த புதுக்கடை கடைத்தெருவிற்குள் நுழைய முடியும். இந்த வீதி கூகிள் மேப் இல் அப்துல் ஹமீட் ஸ்ட்ரீட் என்றும் காட்டும். பெயரில் உள்ளது போலவே இங்கு இருக்கும் கடைகள் பெரும்பாலானவை முஸ்லிம் மக்களுக்கு உரித்தானவையே. இங்கு சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்றும் சொல்லலாம்.

பாண் கொத்து, பிட்டு கொத்து

இந்த வீதியில் உள்ள பழைமையான மற்றும் மிகவும் பிரபலமான கடைகளிலே இந்த பாண் கொத்து, பிட்டு கொத்து எல்லாம் இருக்கிறது. கடையில் நமக்குத் தெரிந்த கோழியைக்கூட வெவ்வேறு விதமான கறி சமைக்கின்றனர். மீன், முட்டை, கணவாய், முட்டை, பாபத் கறி மற்றும் பல கறிகள் உள்ளன. இங்கு பரோட்டா ரொட்டியிலேயே 3 வகைகளை செய்கின்றனர். இந்த கடைகளில் இருக்கும் மெனுவை வாசிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறத்தொடங்கிவிடும்.

 

கிரிஸ்பி சிக்கன் சண்ட்விச்

சண்ட்விச் என்றால் சாதாரணமாக பட்டர் ஜாம் பூசி இல்லைனா செமன் போட்டு தரும் சண்ட்விச் இல்லை. சண்ட்விச் நடுவில் முட்டை, கிறிஸ்பி சிக்கன் போன்றவையும் சேர்த்து சலாது, கோவா, வெங்காயம் போன்றவை போட்டு செய்து தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கவே மல்லுக்கட்ட வேண்டும். ருசியும் நன்றாக இருக்கும். ஆனால் இதன் விலையும் மிகவும் குறைவுதான். 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்தான் ஆகும்.

 

சப்மரீன், பர்கர்

நல்ல ஒரு சாப்பாட்டுக் கடையில் சப்மரீன், பர்கர் வாங்கணும்னா குறைஞ்சது 1000 -1500 வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த அப்துல் ஹமீட் ஸ்ட்ரீட் இல் விற்கும் பர்கர் விலை குறைவாக இருந்தாலும் சுவை பெரிதாக வித்தியாசம் இல்லை. அதற்கு மேலதிகமாக ஏதாவது போட வேண்டுமென்றாலும் போட்டு சீக்கிரமாகவே தருவார்கள்.

 

சூப் வித் சமோசா

அப்துல் ஹமீட் ஸ்ட்ரீட்டில் பெரிய சூப் பாணி ஒன்றையும் வைத்து சூப் விற்கும் கடை ஒன்றும் உள்ளது. இறைச்சி முள்ளு சூப், இறைச்சி சூப் போன்றவையும் இங்கு கிடைக்கும். இந்த சூப்பும் ஒரு பர்கரையும் சாப்பிட்டால் வேறு எதனையும் சாப்பிட முடியாதவாறு வயிறு நிரம்பி விடும். இந்த கடைக்கு அருகிலேயே ஒரு சமோசா கடையும் உள்ளது. அந்த சமோசாவும் சூப்பையும் மாறி மாறி சுவைப்பதே ஒரு தனி சுகம்.

 

டேஸ்ட்டி BBQ

BBQ விற்கும் இடங்கள் கொழும்பில் அதிகமுண்டு. அதுவும் எல்லா கடைகளிலும் சுடச்சுட அப்பொழுதே போட்டு தருவதால் சுவையும் நன்றாகத்தான் இருக்கும். BBQ வும் 2 நாண் ரொட்டியும் எடுத்து சலாதுடன் சாப்பிட்டால் அதன் சுவையே தனி. வெறும் 250 ரூபாய்க்கு வாங்கும் இந்த BBQ இல் சுவைக்கும் பஞ்சமிருக்காது.

 

கொத்து, ரைஸ், பரோட்டா, இடியப்பம்

கொத்து ரொட்டி போன்றன எல்லா இடங்களிலும் கிடைத்தாலும், புதுக்கடையில் உண்ணும் உணவின் ருசி சற்று வித்தியாசமானது. எண்ணெய் பயன்படுத்தி ரொட்டி போடும் பல இடங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளில் மட்டுமே நெய் போட்டு பரோட்டா ரொட்டி சுடுகின்றனர். அதன்படி இங்கு சுவையான ருசியுள்ள பல சாப்பாடுகளும் உள்ளன.

 

கூலிங் பாதாம் பால்

சாப்பாட்டுக்கே பஞ்சமில்லாத இந்த சாலையுணவு வீதியில், சாப்பிட்டு முடித்து விட்டு கூலாக ஒரு பாதாம் பால் குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். வெறும் 100 ரூபாய் கொடுத்தால், ஒரு கோப்பையில் பாதாம் பால் தருவார்கள். வேலை செய்து களைப்பில் வருபவர்களின் சோர்வை இந்த பாதாம் பால் குறைத்துவிடும்.