அமேசன் காட்டைப்பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள்

 

அமேசன் காட்டிலிருந்து எடுக்கப்பட்ட அரியவகை மூலிகையிலிருந்து தயார் செய்த எர்வாமேட்டின், செமன் டின் என்று கூறும் பல விளம்பரங்களை நாளாந்தம் காண்கின்றோம். அரியவகை மூலைிகைகள் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அரியவகை பொக்கிஷங்களை இந்த அமேசன் காடு தன்னகத்தே கொண்டுள்ளது. அமேசன் தன்னுள் வைத்துள்ள விடயங்களை வைத்தே உலகின் மிகப்பெரிய காடென மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு அமேசன் காட்டில் ஏற்பட்ட தீ பாரிய சேதத்தை ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது. அமேசன் காட்டைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகளை இன்று தருகின்றோம்.

 

அமேசன் எனும் பெயரும் பரப்பளவும்

இந்த அமேசன் காடு சுமார் 5.5 மில்லியன் கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இலங்கையை விட 83 மடங்கு பெரியது. கிரேக்க புராணங்களில் வரும் கணவன் இல்லாத ஒரு பெண் வீராங்கனையின் பெயரான அமேசன் என்ற பெயரையே ஸ்பானிஷ் ஆய்வாளர் பிரான்சிஸ்கோ ஒரல்லனா இந்த காட்டிற்கு வைத்துள்ளார்.

 

அமேசனை தன்னுள் அங்கமாக வைத்திருக்கும் நாடுகள்

அமேசன் காடு இலங்கையை விட 83 மடங்கு பெரிதானது எனும்போதே அது ஒரு நாட்டிற்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இது சுமார் 8 நாடுகளுக்கு உரித்தான காடாகும். இதன் 75% அளவு நிலப்பரப்பு பிரேசில் நாட்டிற்குள்ளும் 25% அளவு கொலம்பியா, வெனிசுவேலா, ஈகுவடோர், பெரு, பொலிவியா, பிரான்ஸ், குவானா, கயானா, சுரினாமி போன்ற நாடுகளுள் ஒரு பகுதியையும் பிடித்துள்ளது.

 

உலகில் உள்ள நீருக்கு அமேசன் நதியின் பங்களிப்பு

அமேசன் நதியானது அமேசனின் வடக்கே அமைந்துள்ளது. அமேசன் நதி, அதன் துணை நதிகளுடன் சுமார் 6,840 கிலோமீட்டர் நீளம் வரை செல்லும். நைல் நதிக்குப் பிறகு அமேசன் நதிதான் உலகின் மிக நீளமான நதியும்கூட. அமேசன் நதி அட்லாண்டிக்கிற்கு நொடிக்கு ஒருமுறை 55 மில்லியன் கலன் நீரை வழங்குகிறது.

 

அமெரிண்டியன் எனும் பழங்குடியினர்

அபிவிருத்தியடைந்த நாட்டிலும் பழங்குடியினர் வாழ்கின்றனர் என்றால் அமேசன் காட்டில் வாழ்பவர்களைத்தான் கூறவேண்டும். இங்கு அமெரிண்டியன் எனும் பழங்குடியினரின் ஒரு பகுதி உலக மக்களுடன் ஒருபோதும் தொடர்பு வைத்ததில்லை என்று கூறப்படுகிறது. உலகிலேயே சுமார் 400 மக்கள் தொகையை மாத்திரமே கொண்டவர்கள். அதுவும் இந்த அமேசன் காட்டில் மட்டுமே உள்ளனர்.

 

அமேசனில் வாழும் உயிரினங்கள்

அமேசன் உலகின் அதிகமான உயிரினங்கள் வாழக்கூடிய இடங்களில் ஒன்றாகும். அமேசனில் 40,000 வகையான தாவரங்கள் உள்ளன. 1,300 க்கும் மேற்பட்ட பறவைகள், 3,000 வகையான மீன்கள் மற்றும் 430 வகையான பாலூட்டிகள் உள்ளன. அமேசனில் பூச்சிகள் மட்டுமே 2.5 மில்லியன் வகைகள் வாழ்கின்றன. அமேசனில் 3,000 க்கும் மேற்பட்ட வகையான பழங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 200 பழங்களை மாத்திரமே நாம் உலக நாடுகள் சுவைத்துள்ளது. மிகுதியை சுவைக்கும் பாக்கியத்தை இங்கு வாழும் மக்களும் உயிரினங்களுமே பெற்றுள்ளன.

 

அமேசனில் உள்ள ஆபத்தான உயிரினங்கள்

அமேசன் காட்டிலும் சரி நதியிலும் சரி ஆபத்தான உயிரினங்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த ஆபத்தான விலங்குகளில் மின்சார ஈல்கள் கொண்ட மீன்வகைகள், பிராணா எனும் ஒரு வகை இராட்சத பற்களை கொண்ட மாமிசம் உண்ணும் மீன், விஷத் தவளைகள், ஜகுவார் மற்றும் விஷப் பாம்புகளும் அடங்கும்.

 

3 மீட்டர் நீளமான PIRARUCU மீன்

அமேசன் நதியில் 3 மீட்டர் நீளமான மீன்கள் உள்ளன. PIRARUCU எனும் இந்த மீன் ஒரு மாமிச உண்ணியும்கூட. இதன் பிடியில் ஏதாவது உயிருள்ள உயிரினம் அகப்பட்டால் தப்பிப்பது சுலபமானது அல்ல. இதன் பற்கள் சுறாக்களின் பற்களை போன்று கூர்மையானது.

 

ஒரு ஹெக்டேயருக்கு 750 வகையான மரங்கள்

 

அமேசன் காடானது இருண்ட, பச்சை பசேலென காட்சியளிக்கும் ஒரு வனாந்தரமாகும். இந்த வனாந்தரத்தில் பெய்யும் மழையில் ஒரு மழைத்துளி நிலத்தை வந்தடைய கிட்டத்தட்ட 5 முதல் 10 நிமிடங்கள் வரை கூட ஆகலாம். அந்த அளவிற்கு அதிகமான மரங்கள் இங்கு இருக்கின்றன. மேலும் இந்த மரங்களின் ஆதிக்கத்தின் தன்மையை கூறும் ஆய்வாளர்கள், இந்த வனாந்தரத்தில் ஒரு ஹெக்டேயரில் 750 வகையான மரங்கள் இருப்பதாக விளக்குகின்றனர்.

 

உலகினை காக்கும் அமேசன் காடு

இந்த அமேசன் காடு தென் அமெரிக்காவில் இருந்தாலும் இதன் அவசியம் உலகில் பல நாடுகளுக்கும் தேவைப்படுகிறது. இந்த காட்டிலிருந்து வெளிவிடப்படும் ஒட்சிசன் வாயு இந்த பூமியின் காலநிலைக்கு பெரிதும் உதவுகிறது. உலகின் சரியான வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது. அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் ஆபத்தானது. அமேசனின் அழிவு உலகை மிகவும் பாதிக்கும். அதனை தடுக்கவே உலக நாடுகள் பல அமேசனை காக்க உதவிக்கரம் நீட்டின.