சிறு வயதில் நீங்கள் இப்படியெல்லாம் நினைத்தீர்களா?

 

சிறுவர்களின் மனம் மிகவும் இளகியது. அவர்களின் அந்த மனதில் ஏதாவது நினைத்து விட்டால் அதுபற்றிய கற்பனையில் பல விடயங்களை மனதில் வரைந்து விடுவார்கள். நாமும் சிறு வயதை கடந்து வந்திருப்போம். நாமும் சிறுவயதில் சில விடயங்களை பற்றி யோசித்து கற்பனையில் நமக்கு தோன்றியபடி நினைத்திருப்போம். அவ்வாறான கற்பனைகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

கொட்டை சாப்பிட்டால் மரம் முளைக்குமா?

பழங்களில் காணப்படும் விதைகள் மற்றும் கொட்டைகளை  நாம் சிறுவயதில் சாப்பிட பயந்திருப்போம். அவை வயிற்றுக்குள் சென்று மரம் முளைக்கும் என்ற எமது கற்பனையே இதற்கு காரணம். இன்றும் இதை நினைக்கும் போது நீங்கள் நிச்சயம் சிரிப்பீர்கள்.

 

பின்னால் நிலா வருகிறது

நாம் எங்காவது வாகனத்தில் செல்லும்போது மரங்கள் வீடுகள் எல்லாம் பின்னால் செல்வது போலவும் நிலா, சூரியன் மட்டும் எம்மை தொடர்வது போலவும் இருக்கும். இதனை பார்த்து நம்மை நிலா பின்தொடர்வது போலவும் கற்பனை செய்திருப்போம். பெரியவனாக வளர்ந்த பின்னர்தான் இது பொய் என்றும் அது தொலைவில் இருந்து தெரிவதால் எம்மை பின்தொடர்வது போல் தோன்றுகிறது என்றும் விளங்கியிருப்போம்.

 

பிளாக் அண்ட் வைட் காலம்

எமது தாத்தா பாட்டி காலத்தில் எடுத்த படங்களை பார்க்கும் போது எல்லாமே ப்ளாக் அண்ட் வயிட் ஆக தான் இருக்கும். இதனால் எமது தாத்தா பாட்டி காலத்தில் கலர் ஒன்றும் இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி ஒரே கலரில்தான் ஆடை அணிந்திருப்பார்கள்  என்று நாம் சிறுவயதில் நினைத்திருப்போம். உண்மையில் அக்கால படப்பிடிப்பில் கறுப்பு வெள்ளை மாத்திரமே காணப்பட்டது. இது பின்னர் எமக்கு தெரியவந்த விடயம்.

 

மை ஹார்ட்

இதயம் என்று ஒரு உறுப்பு எம்மில் உள்ளது. அது என்ன செய்யும் என்றுகூட தெரியாத வயதில் நாம் அதனை வரைந்தும் உள்ளோம். அதுவும் இன்றுகூட இதயம் வரைய சொன்னால் வாட்சப் இமோஜியில் இருக்கும் அந்த இதயத்தைத்தான் வரைவோம். அதுவும் இப்பொழுது கலர் கலராக இருக்கின்றது. ஆனால் இப்போதே மொபைலை பயன்படுத்தி பல விடயங்களை கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இதயம் எல்லாம் அத்துப்படியாக இருக்கும்.

 

வளர்ந்த பின்னர் பிரச்சினையும் குறையும்

உண்மையில் சிறியவனாக இருக்கும்போது எல்லோரும் “எப்பொழுது நான் பெரியவனாக போகின்றேனோ?” என்று எண்ணியவாறே இருந்திருப்போம். ஆனால் வளர்ந்து வேலைக்குச் செல்லும் வயது வந்து பொறுப்புகள் வந்த பிறகு “ஏன் தான் நான் பெரியவன் ஆனேனோ?” என்று இருக்கும். உண்மையில் வளர்ந்த பின்னர் பிரச்சினை அதிகரித்து செல்லுமே தவிர குறைவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வது எமது புத்திசாலித்தனம்.