இதில் எந்த ஹேக்கர் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள்?

 

அறிவியல் வளர்ச்சியின்போது மறுபுறம் ஆபத்துகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஹேக்கர்கள் எனப்படும் இணைய ஊடுறுவல் காரணமாக இணைய பயன்பாட்டாளர்கள் நாளாந்தம் பயத்துடன் வாழ்கின்றனர். இணைய பாவனையாளர்கள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? இல்லை. வங்கித் தகவல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களையும் இந்த ஹேக்கர்கள் கைப்பற்றிவிடுகின்றனர். ஹேக்கர்களிலும் பல்வேறு வகையினர் உள்ளனர். சிலர் சிறிய பெரிய கம்பெனிகளின் தரவுகளை சட்டவிரோதமான முறைகளில் திருடுவதும் அதனை போட்டி கம்பெனிகளுக்கு விற்பது போன்ற தரகர் வேலையை செய்கின்றனர். இன்னும் சில ஹேக்கர்கள் பெரிய இலாபத்திற்காக செய்கின்றனர். இப்படி பலவிதமான ஹேக்கர்கள் வாழும் இந்த உலகில் ஹேக்கர்களை பற்றி தெரியாத பல உண்மைகள் இருக்கின்றன.

 

SCRIPT KIDDIES – ஸ்க்ரிப்ட் கிடிஸ்

ஸ்க்ரிப்ட் கிடிஸ் பெரும்பாலும் பாரிய வேலைகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் பெரும்பாலும் இளம் வயதுடையவர்களாகவும் பொழுதுபோக்கிற்காகவும் பெருமைக்காகவும் ஹேக் செய்பவர்களாக உள்ளனர். ஸ்க்ரிப்ட் கிட்ஸ் தனது ஹேக்கிங் திறன்களை விரைவாக பெறுவதற்கு பெரும்பாலான ஹேக்கிங் முறைகளை குறுக்குவழியில் கற்கின்றார்கள். அவர்கள் கணினி அறிவைப் பெறுவதற்கு அதிக சிந்தனையையோ நேரத்தையோ செலவு செய்வதில்லை. அதேபோல குறுகிய நேரத்தில் அதிகமான விடயங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களின் இந்த அவசரத்தினாலே விரைவாக மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

 

WHITE HAT HACKERS – வைட் ஹெட் ஹேக்கர்கள்

இவர்களை ETHICAL HACKER (நெறிமுறை ஹேக்கர்கள்) என்றும் அழைப்பார்கள். வைட் ஹெட் ஹேக்கர்கள், ஹேக்கர் உலகின் நல்ல மனிதர்கள் என்றும் கூறலாம். இவர்கள் ஒரு வைரஸை அகற்ற உதவுவார்கள். பெரும்பாலான வைட் ஹாட் ஹேக்கர்கள் தகவல் தொழிநுட்ப பாதுகாப்பு அல்லது கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்கள். வைட் ஹெட் ஹேக்கர்கள் பொதுவாக தங்கள் திறன்களை சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் செய்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்வார்கள். மற்ற ஹேக்கர்களிடமிருந்து தாங்கள் வேலைசெய்யும் இடத்தின் பாதுகாப்பை பராமரிப்பதே இவர்களின் பொதுவான வேலை.

 

BLACK HAT – பிளாக் ஹேட்

பெரும்பாலான ஹேக்கர் திரைப்படங்களில்கூட கதாநாயகன் வயிட் ஹேட் ஹேக்கர் ஆகவும், வில்லன் பிளாக் ஹேட் ஹேக்கர் ஆகவும்தான் இருப்பார்கள். “CRACKERS” என்றும் அழைக்கப்படும் இவர்கள் பலவீனமான பாதுகாப்பு அமைப்பு கொண்ட வங்கிகள் அல்லது பிற நிறுவனங்களைத் தேடி பணம்/கிரெடிட் கார்ட் போன்றவற்றின் தகவல்களைத் திருடும் ஹேக்கர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் திருட்டு வேலைகளில்தான் அதிகம் ஈடுபடுவார்கள். அவர்களின் தாக்குதல் முறை பற்றிய ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அவர்கள் முன்பு கற்றுக்கொண்ட பொதுவான ஹேக்கிங் நடைமுறைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

 

ORGANIZED CRIMINAL GANGS – குற்றவியல் கும்பல்கள்

இவர்கள் பொதுவாக குழுக்களாக இணைந்துதான் எந்தவொரு ஹேக்கிங் வேலைகளையும் செய்வார்கள். அதாவது பெரிய ஒரு நிறுவனத்தின் தகவல்களை அல்லது பணத்தை திருடும் வேலைகளில் ஈடுபடுவார்கள். அடுத்து இவர்கள் பாதுகாப்புத் தரவுகளை செயலிழக்கவும் செய்வார்கள். அதாவது ஒரு தனியாளை விட படையுடன் இருப்பவனுக்கு சக்தி அதிகம் இருப்பதுபோல இவர்களின் வேலை இருக்கும். இவர்களை ஹேக்கிங் உலகில் சைபர் செக்யூரிட்டி மாஃபியா என்றும் அழைப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் தொடர் குற்றவாளிகளாகவே இருக்கின்றனர்.

 

NATION STATES HACKERS – நேஷன் ஸ்டேட்ஸ்

நேஷன்-ஸ்டேட்ஸ் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் கிரைம் யூனிட் ஆகும். இது உலகெங்கிலும் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகளுடன் சர்வதேச அளவில் தொடர்புபட்டது. சைபர் பாதுகாப்பை வழங்குவதற்கும், பிற நாடுகளிலிருந்து இரகசிய தகவல்களைப் பெறுவதற்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள்தான் தேசத்தின் உதவியுடனிணைந்த ஹேக்கர்கள். இவர்கள் அதிகம் ஊழியம் பெறும் அரசாங்க ஊழியர்கள் ஆவர்.