செய்யும் தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்த சில வழிகள்

 

மனிதனாக பிறந்தால் உணவு, உடை, உறையுள் என்பன மிகவும் அவசியம். ஆனால் இவற்றை தடையின்றி பெற்றுக்கொள்ள தொழலுக்குச் செல்ல வேண்டும். சிலர் ஆசைப்பட்ட தொழிலை செய்வார்கள். பலர் தனது ஆசை எதுவாக இருந்தாலும், அதை ஓரங்கட்டிவிட்டு தனக்கேற்ற ஒரு தொழிலை செய்வார்கள். அவ்வாறு செய்யும்போது சிறிது காலத்தின் பின்னர் அதற்கு பழகிவிடுவார்கள். அவ்வாறு பழகினாலும் ஒரு சாதாரண மனிதனுக்கு தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டிருக்கும்போது அலுப்பு ஏற்படும். சோம்பேறித்தனமாக உணர்வார்கள். அது நீடித்தால் பின்னர் சிரமப்படுவீர்கள். சோம்பலுக்கு குட்பை கூறிவிட்டு உற்சாகமாக வேலைசெய்ய வேண்டுமா? இந்த கட்டுரையை வாசியுங்கள்.

 

வேலைக்கு எப்படி செல்கிறீர்கள்?

உதாரணமாக காலையில் குளித்துவிட்டு ரெடியாகி, பஸ் ஹோல்ட்டுக்கு வந்து நின்று,  நெரிசலான பஸ்ஸில் ஏறி சனத்தோடு சனமாக வேலைக்கு வந்து சேர யாராவது விருப்பப்படுவார்களா? இப்படி தினமும் நடக்கும்போது இப்படி ஒரு வேலைக்கு செல்லவேண்டுமா என எண்ணத்தோன்றும். இந்த நிலையை மாற்றுவதற்கு இலகுவான வழி என்ன? போக்குவரத்து முறையை மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காக உங்களை விமானத்தில் வருமாறு கூறவில்லை. குறைந்தது வரும் வாகனத்தில் புத்தகத்தை வாசிப்பது, இல்லையென்றால் யாராவது ஒருவரோடு பேசிக்கொண்டு வருதல், அப்படியும் இல்லையென்றால் சற்று நேரத்தோடு எழும்பி சனநெரிசலில் அகப்படாமல் வேலைக்குச் செல்லுங்கள்.

 

தேவையான தூக்கம்

அலுவலகத்தில் என்னதான் வேலைசெய்துவிட்டு களைப்புடன் வீடு வந்தாலும் நேரத்தோடு தூங்க மாட்டார்கள். நடுசாமம் வரைக்கும் போன் அல்லது மடிக்கணினியுடன் நேரத்தை கழிப்பார்கள். சிலவேளை முக்கிய விடயங்களுக்காக பயன்படுத்தலாம். பலர் எந்த வேலையும் இன்றி இவ்வாறு நேரத்தை கடத்துவார்கள். அலுவலகங்களில் காணப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் வந்து இவற்றை பயன்படுத்தவார்கள். சிலர் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு வருவார்கள். அலுவலக வேலைகள் வீட்டிற்குள் வந்தால் வாழ்க்கை வெறுத்துப்போகும். அதனால் முடிந்தவரை அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டுசெல்வதை தவிர்க்கவும்.

 

வேலை அதிகமானால் குறைத்துக் கொள்ளுங்கள்

சிலருக்கு லை அதிகமாக இருப்பது சற்று உற்சாகமாக இருக்கும். ஆனால் அந்த உற்சாகம் அதிக காலம் இருப்பதில்லை. அதோடு சேர்த்து வேலையும் வெறுக்கக் கூடும். சிலருக்கு வேலை அதிகமாக காரணம் அவர்களேதான். வேலை செய்யும் நேரத்தில் வேலையை செய்யாமல் அவர்களது சொந்த வேலையில் மும்முரமாக ஈடுபடும்போது அலுவலக வேலைகள் தடைபடுகின்றன. பின்னர் தலைக்கு மேல் வேலை என்று புலம்புவதில் அர்த்தமுண்டோ? இன்னும் சிலருக்கு உண்மையிலேயே வேலை செய்தாலும் மேலதிக வேலைகள் வரக்கூடும். அந்த சந்தர்ப்பத்தில் மேலதிகாரியிடம் பேசி தனது வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் உரிமையாகும்.

 

நான் ஏன் வேலை செய்கின்றேன்?

இந்த விடயத்தைப் பற்றி யோசிக்காத காரணத்தால் பலருக்கு தான் செய்யும் வேலை பிடிக்காமல் வெறுத்துப் போகும். நான் ஏன் வேலை செய்கிறேன்? எதற்காக வேலை செய்கிறேன்? இதனால எனக்கு என்ன லாபம்? இந்த சமுதாயத்திற்கு என்ன லாபம்? இவ்வாறான பொறுப்புவாய்ந்த விடயங்கள் பற்றி யோசித்து நடந்துகொண்டால் வேலையில் காணப்படும் சலிப்பு ஓடிவிடும்.

 

இயந்திர வாழ்க்கை

படுக்கையிலிருந்து எழும்பி வேலைக்கு செல்கிறார். வேலை முடிந்து வந்து மீண்டும் படுக்கைக்குச் செல்கிறார். மீண்டும் எழும்பி அடுத்த நாள் வேலைக்குச் செல்கிறார். இதையே தொடர்ந்து செய்தால், எவருக்குத்தான் சோம்பேறித்தனம் ஏற்படாது? வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யம் இல்லாவிட்டால், பொழுதுபோக்கு இல்லாவிட்டால் வாழ்க்கை இனிக்காது. அதற்கு பதிலாக தூக்கம்தான் வரும். இந்த பிரச்சினையை நீக்க மாதம் ஒருமுறையாவது சினிமா பார்க்கச் செல்லுங்கள். நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுடன் வெளியே சென்றுவாருங்கள். வாழ்க்கை அழகாகும்.

 

விருப்பமில்லாத வேலை!

மேலே சொன்ன காரணங்கள் எதுவும் பயனளிக்கவில்லையென வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு திருப்தி, மன சந்தோசத்தை தராமல் மன சஞ்சலத்தை ஏற்படுத்தினால் அந்த வேலை உங்களுக்கானது அல்ல என்பதை உணருங்கள். அப்படிப்பட்ட வேலையில் இருப்பதைவிட அங்கிருந்து விலகி வேறு வேலைக்குச் செல்ல முயற்சிப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடத்தில் வேலை செய்வதும் ஒருவித சோம்பேறித்தனத்தையும் கஷ்டத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும்.