உங்கள் அன்பிற்குரியவர் உங்களிடம் எதையாவது மறைக்கின்றாரா?

 

காதலிக்கும்போது இருவருக்கும் இடையில் திடமான நம்பிக்கை இருப்பது அவசியம். நம்பிக்கையை காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருவருக்கும் உண்டு. காதலனுக்கு தெரியாமல் காதலியும் காதலிக்கு தெரியாமல் காதலனும் வேறொருவருடன் தொடர்பை பேணுவது மாத்திரம் நம்பிக்கை என்ற விடயத்திற்குள் அடங்காது. அதற்கு அப்பால் பல விடயங்கள் உண்டு. அதாவது வேலை செய்யும் இடத்தில் அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம். அதனை மனம்விட்டு சொல்லாவிட்டாலும், சில நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

 

வேலை முடிந்து தாமதமாக வருதல்

நேரத்திற்கு அலுவலகத்திற்குச் சென்று மாலை சரியாக வீட்டிற்கு வருபவர், இரவு தூங்கும் நேரம் வந்தும் வீடுவரவில்லையா? சற்று கவனமாக இருங்கள். சிலவேளைகளில் அலுவலகத்தில் அதிக வேலை இருக்கலாம். ஆனால் உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் வழங்காமல், எந்நேரமும் வேலை வேலை என்று ஓடினால் உங்களிடம் ஏதோ ஒன்றை மறைக்கின்றார் என்று அர்த்தம்.

 

பேச்சில் தடுமாற்றம்

முன்னர் மணிக்கணக்கில் பேசியவர் இப்போது அளந்து அளந்து பேசினால், பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டால், பேசும் விடயத்தை மறந்தால், வேறு ஏதாவது சம்பந்தமில்லாமல் பேசினால் உங்களிடம் எதையோ மறைக்கின்றார் என்று அர்த்தம்.

 

கண்ணை பார்த்து பேச மாட்டார்கள்

தினமும் கண் பார்த்து பேசியவர் திடீரென அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பேசுகிறார் என்றால் ஏதாவது பிரச்சினை இருக்கத்தான் செய்யும். முன்பெல்லாம் பாடசாலையில் ஏதாவது தவறு செய்து மாட்டிக் கொண்டால் அதிபரின் முகம் பார்த்து பேசப் பயப்படுவோம் அதுபோலதான் இதுவும். உங்கள் காதலர் உங்கள் முகத்தை பார்த்து பேசினால் நீங்கள் அவரது கள்ளத்தனத்தை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று பயந்து பார்க்கமாட்டார்.

 

24 மணி நேர தொலைபேசி உரையாடல்

சிலர் தமது வேலை காரணமாக அதிக நேரத்தை தொலைபேசியில் செலவிடுவார்கள். அப்படியில்லாமல் தேவைக்கு கூட அவர்களது போனை தொடவிடாமல் தடுத்தால் அவர் எல்லை மீறுகின்றார் என்று அர்த்தம்.

 

வீண் சண்டை

உங்களிடம் ஏதாவது மறைத்தால் அவருக்கு குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். மேலும் அது மனதில் கஷ்டத்தை ஏற்படுத்திகொண்டும் இருக்கலாம். ஒன்றுமில்லாத விடயத்திற்கும் கத்திக்கொண்டு இருப்பார்கள். சிலரிடம் இயற்கையாகவே இந்த பண்பு காணப்படும். அப்படியில்லாமல் திடீரென இவ்வாறு நடந்துகொண்டால் உங்களிடம் ஏதாவது மறைக்கின்றார் என்று அர்த்தம்.

 

உடல் அசைவு

உங்களோடு இருக்கும்போது வழமையை விட ஏதாவது அவர்களிடம் மாற்றம் தெரிந்தால் அதாவது நகம் கடிப்பது, தலையை சொரிவது, இரண்டு பாக்கெட்டிலும் கைகளை போட்டுக்கொள்வது, கால் இரண்டையும் விசிறி விசிறி ஆட்டுவது இப்படியான விடயங்கள் உள்ளத்தில் இருக்கும் ஏதாவது பிரச்சினையை காட்டுவதாகவே அமையும்.

 

அடிக்கடி கண் சிமிட்டுதல்

சிலவேளைகளில் உங்களிடம் ஏதாவது மறைக்க நேர்ந்தால் கண்ணை அடிக்கடி சிமிட்டுவார்கள். அதுவும் வேகமாகவும் கண் சிமிட்டுவார்கள். அப்படியென்றால் உங்களிடம் ஏதாவது மறைக்கின்றார்கள் என்று அர்த்தம். பார்த்து ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்.