புதிய வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்!

 

புதிய வீடுகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் பல ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் பின்னால் சில வரலாறுகளும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் வேடிக்கையாகவும் இருக்கலாம். அவ்வாறு விசித்திரத்தை உண்டாக்கிய சில பொருட்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

18 ஆம் நூற்றாண்டின் பைபிள்

பிரித்தானியாவின் பர்க்சீர் எனுமிடத்தில் புதிய வீட்டு உரிமையாளர் ஒருவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைபிளை தனது வீட்டின் மாடிப் பகுதியில் கண்டெடுத்தார். அந்த பைபிளை கண்டுபிடித்த அதிர்ச்சி மட்டுமன்றி, அதில் வேறு ஆச்சரியமும் காத்திருந்தது. அதாவது அந்த வீட்டின் முன்னைய உரிமையாளர்கள் தமது வரலாற்று சுயசரிதையை அந்த பைபிளின் பிற்பகுதியில் எழுதி வைத்திருந்தனர். அங்கிருந்த ஒரு கிராமப்புற தேவாலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தரவுகளை வைத்திருந்தது. அதன்மூலம் அந்த வீட்டின் முன்னைய உரிமையாளரை கண்டுபிடித்து அந்த பைபிளை அவர்களின் குடும்பத்தினரிடமே ஒப்படைத்தனர்.

 

வீட்டிற்குள் பிணம் வைக்கும் அறை!

வீடொன்றின் புதிய உரிமையாளர்கள் அந்த வீட்டின் குழாயை சீர்திருத்தும்போது அந்த வீட்டின் மற்றொரு அறையை கண்டுபிடித்துள்ளனர். என்ன ஆச்சரியம்! அது பிணம் வைக்கும் அறை. பழைய போத்தல்கள், இரசாயன பொருட்கள், நறுமண பொருட்கள், சில புத்தகங்கள் போன்ற இன்னும் சில பொருட்களையும் அங்கிருந்து எடுத்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் அந்த பொருட்களை பழம்பொருள் வியாபாரியிடம் விற்றுள்ளார்.

 

மலசலகூட வங்கி!

புதிதாக குடிவந்த ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தின் பின்பகுதியில் 14000 டொலர்களை கண்டுபிடித்துள்ளார். முன்பு அந்த வீட்டில் வசித்தவருக்கு வங்கிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் மலசலகூடத்தில் பதுக்கி  வைத்திருக்கலாம் என புதிய உரிமையாளர் கூறுகிறார்.

 

45 வருடம் காணாமல் போன மோதிரம்

இங்கிலாந்தில் ஒருவர் தனது வீட்டின் முற்றத்திலுள்ள தோட்டத்தில் நீர் தெளித்துக் கொண்டிருந்தபோது திருமண மோதிரம் ஒன்றைக் கண்டார். அவர் நல்லவராக இருந்ததால் அந்த வீட்டின் முன்னைய உரிமையாளரை தொடர்புகொண்டு அவரிடம் ஒப்படைத்தார். அந்த மோதிரம் அந்த வீட்டு உரிமையாளரின் காலஞ்சென்ற கணவருடையது. மேலும், இந்த வீட்டிற்கு வந்து முதல் நாளே காணாமல் போனதாக பழைய வீட்டுரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக அந்த மோதிரம் 45 வருடங்களுக்கு பின்னரே கிடைத்துள்ளது.

 

கல்லறை கற்களினால் கட்டப்பட்ட வீடு

ஜெர்மனியில் புதிதாக வீடு வாங்கிய ஒருவர் அந்த வீட்டில் துளையிட முயற்சித்தார். அப்போது அவரது துளையிடும் கருவி உடைந்தது. பின்னர் அவர் பெரிய துளையிடும் கருவியின் மூலம் முயன்றபோது அந்த சுவற்றை இடித்து ஓவு அறையாகவும் அலுவலகமாகவும் மாற்ற முயன்றார். அதன் பின்னரே ஆச்சரியம் காத்திருந்தது. அந்த சுவர் ஒரு கல்லறை கல்லால் கட்டப்பட்டது என்பதை உணர்ந்தார். மேலும் அதனை அகற்றும்போது மரியா எனும் பெயர் வெளிவந்தது. அதன் பின்னர் அந்த வீடு போருக்குப் பின்னர் கல்லறை கற்களால் கட்டப்பட்டிருக்கலாமென யூகித்துக் கொண்டார்.