சுற்றுலா போகவேண்டுமென்றால் சேர்ந்துதான் போவார்கள். தனியாக சென்று மகிழ்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த கட்டுரை பொருத்தமாக இருக்கும். தனியாக சுற்றுலா செல்வது பற்றி அறிய விரும்புவோர் இனி இதை வாசித்துவிட்டு தனியாக செல்லுங்கள்.
சிங்கராஜ வனம்
சிங்கராஜா இலங்கையில் உள்ள அனைவரும் அறிந்த காடாகும். நீங்கள் சிங்கராஜாவில் தனியாக சென்றால், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டியுடன் செல்வது சிறந்தது. இவர்களுக்கு அந்த காட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களை பற்றியும் நன்கு தெரியும். மேலும் கைமருந்தும் தெரிந்திருக்கும். சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம். நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர் குளியல் ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்க முடியும்.
எல்ல ரொக்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குறைந்த செலவில் சுற்றிப் பார்க்கக்கூடிய இடமாக எல்ல அமைந்துள்ளது. குட்டி சிவனொளிபாதமலை, ஆதிகால கட்டடங்கள் என எல்ல தற்போது முற்றிலும் சுற்றுலாத்தளமாக மாறிவிட்டது. குளிர்ந்த காலங்களில் வெளியே செல்வதும் புத்தகத்தைப் படிப்பதும் எல்லயில் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். அங்கிருந்து சற்று கீழே சென்றால் ராவணனெல்லைக்குச் செல்லலாம்.
தெற்கு கடற்கரைகள்
எத்தனை தடவை கடற்கரைக்குச் சென்றாலும் அலுத்துப்போகாது என்பார்கள். ஆனால் அதற்கு சிறந்த இடம் அவசியம். கொழும்பில் உள்ளவர்களுக்கு கோல்பேஸ் சென்று அலுத்துப்போயிருக்கலாம். அவர்கள் தெற்கு கடற்கரையை நாடலாம். அங்கு நீங்கள் எத்தனை தடவை சென்றாலும் புது அனுபவமாகத்தான் இருக்கும். ஓய்வெடுக்க சிறந்த இடமாகவும் தெற்கு கடற்கரைகள் உள்ளன.
அருகம்பே
அருகம்பே பகுதியில் காடு, கடல், சதுப்பு நிலங்கள் என அழகிய சுற்றுச்சூழலை பார்க்கலாம். இங்குள்ள சரணாலயம் மீண்டும் பறவைகளால் நிரம்பி வழிகிறது. இதன் எந்த நுழைவாயிலிலும் மான் மற்றும் முயல்களைக் காணலாம். இந்த பிராந்தியத்தில் தனியாக சென்றால் செலவு சற்று அதிகமாக காணப்பட்டாலும் சர்ஃபிங்கிற்கு நிறைய சலுகைகள் உள்ளன.
நக்கிள்ஸ், ஹுலுகங்கை
நக்கிள்ஸின் ஹுலுகங்கா பிரதேசத்தில் மோட்டார் பைக்கில் போனால் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஆண்டின் எந்த நேரத்திலும் மிதமான காலநிலையைக் கொண்டிருக்கும் இந்த நக்கிள்ஸ், ஹுலுகங்கையை கடக்கும் சில மலைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவருடன் தனியாக நக்கிள்ஸ் மலை ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு மணி நேரத்திற்குள் கண்டியில் இருந்து அணுகக்கூடிய நக்கிள்ஸ், ஹுலுகங்கை பிரதேசத்தில் பிரயாணிகள் தங்குவதற்கு புதிய அறைகள் மற்றும் ஹோட்டல் இருக்கின்றன.