பொலிவூட் பிரபலங்கள் சினிமாவிற்கு முன்பு என்ன செய்தார்கள் தெரியுமா?

 

திரையுலகில் இன்று கொடிகட்டி பறக்கும் சினிமா நட்சத்திரங்கள், அதற்கு முன்னர் பல தொழில்களை செய்துள்ளார்கள். உதாரணமாக தென்னிந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் கூட ஒரு காலத்தில் பேருந்து நடத்துநராகவே (கன்டெக்டர்) இருந்தார். அதேபோலவே பொலிவூட் நட்சத்திரங்கள் பலரும் இதற்கு முன்னர் பல வேலைகளை செய்துள்ளனர். அவர்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

NAWSUDHEEN SIDEEK

எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறமைக்கொண்ட நவாஸுதீன் சித்தீக் சினிமாத்துறைக்குள் நுழையும் முன் ஒரு வேதியல் நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர் வேதியியலில் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மேடை நாடகத்தைப் பார்த்த பிறகு, நவாஸுதீன் உடனடியாக நடிப்பு மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்கிறார். பின்னர் டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து நடிப்பை கற்கத் தொடங்குகிறார். பின்னர் மேடை நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் படிப்படியாக இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

 

AMITHAB BACHCHAN

இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயரை சம்பாதித்துள்ள அமிதாப் பச்சன், சினிமாவில் இணைவதற்கு முன்னர் ஷா வாலஸ் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவரது முதல் சம்பளமே 500 இந்திய ரூபாய்தான். பின்னர், அமிதாப் வானொலி அறிவிப்பாளராகவும் முயன்றார். ஆனால் அவரை அங்கு நிராகரித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர் மும்பையில் ஒரு நடிகராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

 

AKSHAY KUMAR

நாம் அனைவரும் அறிந்த அக்‌ஷய் குமாரின் முதல் வேலை சமையல்காரர் என்றால் நம்புவீர்களா? தற்காப்புக் கலைகளைக் கற்க பாங்கொக்கில் இருந்தபோது அக்‌ஷய் அந்த வேலையைச் செய்துள்ளார். அக்ஷய் குமார் இந்தியாவிற்கு திரும்பி வந்ததும் தற்காப்புக்கலை ஆசிரியராகவும் பணிபுரிந்து, பின்னர் ஆடை வடிவமைப்பாளராகவே பொலிவூட்டிற்கு வந்தார்.

 

BOHMAN IRAANI

தாம் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அதிக நகைச்சுவைகளை சேர்த்த போமன் இரானி, ஒரு தீவிரமான கதாபாத்திரத்தை உருவாக்கக்கூடிய நடிகர். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பரிமாறும் சர்வராகவும் ஹோட்டல் பணியாளராகவும் போமன் இரானி ஆரம்பத்தில் பணியாற்றினார். பின்னர் அவர் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். நடிப்பில் காதல் கொண்ட போமன் இரானி, அதைக் கற்றார். அதன்பின்னர் ராம் கோபால் வர்மாவின் ‘தர்ணா மனா ஹே’ மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

 

SUNNY LEONE

இளைஞர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் சன்னி லியோன் முன்னர் ஜெர்மனியிலுள்ள பேக்கரியொன்றில் வேலை செய்தார். பின்னர் ஓய்வு மற்றும் வரி தொடர்பான நிறுவனத்தில் வேலை செய்தார். பின்னர் ஆபாச திரைப்படங்களில் நடித்து இப்போது பொலிவூட்டில் நடிக்கின்றார்.