ஸ்மார்ட்போன் வருவதற்கு முன்பு சிறிய மொபைல் போன்களை பாவித்தோம். எமது தாத்தா, பாட்டி காலத்தை எடுத்துக்கொண்டால் பெரிய தொலைபேசிகளை பயன்படுத்தினார்கள். வீட்டிற்கு ஒன்று அல்ல, வீதிக்கே ஒன்று அல்லது கிராமத்திற்கே ஒன்று என்ற ரீதியிலும் அந்த தொலைபேசிகள் காணப்பட்டன. அன்றைய காலத்தில் மிகவும் நேசித்த, பெறுமதி வாய்ந்ததென கருதப்பட்ட பல பொருட்களை இன்று கணக்கெடுக்காமல் உள்ள நிலையுண்டு. எம்மத்தியிலிருந்து அவை விலகிச் செல்கின்றன. ஆனாலும் அவற்றை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இன்று எம்மத்தியிலிருந்து சிறிது சிறிதாக காணாமல் போகும் பொருட்களை பற்றி இன்று பார்ப்போம்.
முத்திரை
முன்பொரு காலத்தில் முத்திரைகள் இல்லாத கடிதங்களை காணவே முடியாது. ஏனென்றால் வெளிநாடுகளில் இருந்து வரும் கடிதங்கள், தொழில் கடிதங்கள், போஸ்ட் கார்ட்கள் போன்றவை முத்திரை ஒட்டப்படாத நிலையில் இருந்தால் சரியாக போய் சேருவதும் இல்லை. கடிதத்தின் முக்கியமான அம்சமாக முத்திரை காணப்பட்டது. இன்று வாட்ஸ்அப், ஈமெயில் என்பவற்றின் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக கடிதங்கள் காணாமல் போயுள்ள நிலையில் முத்திரைகளின் பெயர்கூட தெரியவில்லை. இதனால் முத்திரைகளின் தயாரிப்பும் எதிர்காலத்தில் நிறுத்தப்படலாம்.
பிளாஸ்டிக் பேக்ஸ்
கொண்டு செல்வதற்கு இலகுவான நிறையில் காணப்படும் பொலித்தீன் பைகளின் பயன்பாடு இன்னும் சில காலங்களில் காணாமல் போய்விடும். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டில் எந்த கோளாறும் இல்லையென்றாலும், இதன் பாதிப்பு அதிகமாக உணரப்படுகிறது. அதாவது பிளாஸ்டிக் பைகள் சுற்றுப்புறச் சூழலில் வீசப்படுவதால் இது உக்கிப்போக சுமார் 100 ஆண்டுகளாகின்றன. இதன்மூலம் சூழல் சீர்குலைவதால் உலக சுகாதார அமைச்சு பெரும்பாலான பொலித்தீன் தயாரிக்கும் நிறுவனங்களை தடுத்து நிறுத்தியுள்ளது.
செய்தி பத்திரிகைகள்
தொழிநுட்ப வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட இன்னொரு துறையாக அச்சு ஊடகத்தை குறிப்பிடலாம். அனைத்து செய்திகளையும் இன்று ஸ்மார்ட் போன்களில் படிக்க முடிவதால், செய்திப்பத்திரிகைகளும் இன்று தமக்கென இணையத்தளங்களை உருவாக்கி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் இன்று காணாமல் போகும் பத்திரிகைகளாக லக்பிம, தருணயா, ரிவிர, ரெஜின, சண்டே லீடர் போன்றவை காணப்படுகின்றன.
கணக்கை முடித்த கணிப்பான் (கல்குலேட்டர்)
முன்பெல்லாம் பெட்டிக்கடை முதல் பெட்டி பெட்டியாய் இலாபம் ஈட்டும் கம்பெனி வரை இலகுவாக கணக்கு வேலைகளை பார்க்க உதவிய இந்த கல்குலேட்டர்களை இன்று காண முடிவதில்லை. இன்று ஸ்மார்ட்போன்களில் கல்குலேட்டர்கள் வந்துவிட்டன. கல்குலேட்டர் இன்றி கணக்கு சரியாக அமையாது என்று சொல்லும் அளவிற்கு இருந்த இவை, இன்று ஆதிகால பொருளாகிவிட்டது. எத்தகைய கஷ்டமான எண்ணிக்கையும் இலகுவாக கணக்கு போட்டுவிட ஸ்மார்ட்போன்கள் உதவுவதால் அழியும் தருவாயில் இந்த கல்குலேட்டர்கள் இருக்கின்றன.
வீட்டை பாதுகாத்த பூட்டு
எமது வீட்டின் பாதுகாப்பை பேண உபயோகிக்கும் இந்த பூட்டுக்களும் இன்னும் சில வருடங்களே உயிர்வாழும். இதன் பயன்பாட்டை குறைக்க தொழிநுட்பத்தின் உதவியுடன் பல முன்னணி நிறுவனங்கள் பயோமெட்ரிக்ஸ் லோக்களை பயன்படுத்துகின்றன. முன்னணி நாடுகளில் FINGERPRINT லோக்களும், PASSWORD லோக்களையும்தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் 20 , 30 வருடங்களில் பூட்டுக்களை படங்களில் பார்க்கும் நிலையே ஏற்படும்.