தொப்பை போடுவதற்கு காரணம் தெரியுமா?

 

மனிதனாக பிறந்த அனைவரும் தத்தமது உடல் நலத்திலும் கவர்ச்சியிலும் கவனம் செலுத்துவது முக்கியமானது. இன்று ஆண் பெண் வித்தியாசமின்றி கவலையுறும் ஒரே விடயம் என்னவென்றால் அது தொப்பை பிரச்சினையாகும். தொப்பை போட்டால் கவர்ச்சி குறைந்துவிடும் என நினைக்கின்றனர். குறிப்பாக பெண்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக வயிற்றுப்பகுதிக்கான பெல்ட், இயந்திரங்கள் என வாங்கிக் குவிக்கின்றனர். என்ன செய்தாலும் சிலரது தொப்பை மட்டும் அப்படியே செய்து வைத்த சிலை போல இருக்கும். சாப்பாடு காரணமாக இருக்கலாம் என நினைத்து சாப்பாட்டின் அளவை குறைத்துவிடுகின்றனர். ஆனால் சாப்பாட்டை தவிர எத்தனையே விடயங்கள் தொப்பை போடுவதற்கு காரணமாக இருக்கின்றதென உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த கட்டுரையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

தூக்கத்தை மறந்து மொபைலுடன் வாழ்க்கை நடத்துதல்

படுக்கைக்கு சென்ற பின்னர் சோஷியல் மீடியா செல்வது, நடுச்சாமம் வரைக்கும் கண்விழித்து டிவி பார்ப்பது, இரவு 12 மணியின் பின்னரும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போன்ற செயல்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதே போல வயிற்றுக்கும் நல்லதல்ல என்ற விடயம் பலருக்கு தெரியாது. . மருத்துவர்களின் கூற்றுப்படி, தூக்கத்தை அர்ப்பணித்து செய்யப்படும் வேளைகள் அவ்வளவாக உடலுக்கு நன்மை தருவதல்ல என்றும் அது வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல அதிக நேர தூக்கமும் உடலுக்கு நல்லதல்ல. 7 முதல் 8 மணித்தியால தூக்கமே சிறந்தது.

 

சேர்ந்து சாப்பிடும் சாக்கில் அதிகமாக விழுங்குதல்!

நம்மில் சிலர் தனிமையாக சாப்பிடுவதை விரும்புவதில்லை. அலுவலகத்திலும் வீட்டிலும் அல்லது நபர்களுடன் ஏதாவது வெளியிடங்களுக்கு செல்லும்போதும் சேர்ந்து சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் வழமையைவிட 44 சதவீதம் அதிகமான உணவை உட்கொள்வதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் அதிகமான கொழுப்பு உடம்பிலுள்ள வயிற்றுப்பகுதியில் குடியமர்கின்றன. நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை. சாப்பாட்டை தவிர பல்வேறு விடயங்களை செய்யலாம் என்கிறோம். அதாவது குறுகிய நேர விளையாட்டுக்களை அல்லது நடையோடு கலந்த பேச்சுக்களை பழக்கிக்கொள்ளுங்கள்.

 

சீனி கல்லாத குளிர்பானங்கள்

இப்பொழுது விற்பனையாகும் அனைத்து வகையான பான வகைகளிலும் சீனியின் அளவை குறிப்பிட்டு விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் சீனியின் அளவை அறிந்து பருகுவதனால் உடல் பருமனையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தேநீர் அல்லது கோப்பி பருகும் பழக்கம் உடையவராக இருப்பின் சீனியின் அளவை குறைத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு தேவையான நீரினை மருத்துவ ஆலோசனையின் படி தினமும் பருகி வருவதும் அவசியம். பொதுவாக சராசரி மனிதன் நாளொன்றுக்கு 3 லீட்டர் நீரினை பருக வேண்டும்.

 

உடல் சோர்வும் மன அழுத்தமும்

மன அழுத்தத்தில் அல்லது உடல் சோர்வின் போது சாப்பிடாமல் இருப்பதும் அல்லது அதிகமாக சாப்பிடுவதும் வயிற்றிற்கு உகந்ததல்ல. உணவு பற்றிய கவனம் இன்றி செல்வதனால் கட்டுப்பாடு அகன்று போய்விடும் வாய்ப்பும் அதிகம். இந்த சந்தர்ப்பங்களில் வாழ்வில் வினோத செயற்பாடுகளில் ஈடுபடல், குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுதல், விளையாட்டுக்களில் ஈடுபடல், பொழுதுபோக்குகளில் ஈடுபடல், வெளிப்பயணங்களில் ஈடுபடல் என்பன அழுத்தமற்ற வாழ்க்கைக்கு உதவும். அதேநேரம் வயிற்றிலுள்ள கொழுப்பும் கரைந்துபோகும்.

 

தினமும் செய்யும் சோம்பேறித்தனமான வேலைகள்

பெரும்பாலான பருமனானோர் பொதுவாக அலுவலகங்களில் பணிபுரிபவராகவே இருப்பர். அத்தோடு கார் அல்லது பைக் வைத்திருப்போர்களாகவே இருப்பார்கள். இதனை ஏன் கூறினேன் என்றால் அலுவலகத்தில் வேலை செய்வோர் பெரும்பாலும் படிக்கட்டுக்களை உபயோகிப்பதில்லை. அதேபோல வாகனத்தில் வருவதையே அதிகம் விரும்புவார்கள். இவை இரண்டும் சோம்பேறித்தனத்தையே காலப்போக்கில் கொடுக்கக்கூடியது. தினமும் நடந்தே வேளைக்கு வாருங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அதற்கு மாறாக கிழமைக்கு ஒன்று அல்லது இருதடவைகள் நடந்து செல்லுங்கள். அன்றைய நாள் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வளிக்கும்.