குறைந்த கல்வியறிவுடன் சிகரத்தை தொட்ட சாதனையாளர்கள்

 

கல்வி என்பது எல்லோரினதும் வாழ்விலும் இன்றியமையாதது. இன்றைய உலகில் ஒருவன் கல்வியின்றி வாழ்வதென்பது சாவதற்கு சமமென உலகம் எண்ணுகின்றது. ஆனால் அது உண்மையல்ல. இந்த உலகில் கல்வி இன்றியே வாழ்விலும் வர்த்தகத்திலும் உச்சத்தைத் தொட்ட பலர் உள்ளனர். அவர்கள் அதனை சாதித்தது தனது கல்வியினால் அல்ல முயற்சினால் என்பதே நிதர்சனமான உண்மை. அதன்படி இன்று வாழ்வில் கல்வியறிவின்றி சாதித்த வெற்றிகரமான நபர்களைப் பற்றி பார்ப்போம்.

 

ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரஹாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதி ஆவார். அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழித்த ஜனாதிபதி என்றும் அவர் அறியப்படுகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லிங்கனுக்கு முறையான கல்வி பெற ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பிற்பட்ட காலங்களில், அவர் சொந்தமாகப் படித்து வழக்கறிஞரானார். அடிப்படைக் கல்விக்கான வாய்ப்பை அவர் தவறவிட்டமை, உலகப் புகழ்பெற்ற தலைவராவதற்கு தடையாக அமையவில்லை. தனது மகனின் பாடசாலை ஆசிரியருக்கு அவர் எழுதிய புகழ்பெற்ற கடிதத்தைப் படிக்கும் எவருக்கும், அவர் ஆரம்ப கால கல்வி கற்கும் அதிஷ்டத்தை பெறாவிட்டாலும், கல்வியின் மீதான அவரது அணுகுமுறை, ஆர்வம் எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும்.

 

ரிச்சர்ட்  பிரான்சன்

சர் ரிச்சர்ட் சார்ளஸ் நிக்கோலஸ் பிரான்சன் பிரிட்டிஷ் வணிக அதிபர், முதலீட்டாளர் மற்றும் எழுத்தாளராவார். அவர் 1970 களில் VIRGIN GROUP  எனும் கம்பெனியை நிறுவினார். இது தற்போது பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால் அவர் கல்வி கற்காமல்தான் இதையெல்லாம் சாதித்தார். ஒருவர் குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் ரிச்சர்ட் பிரான்சனுக்கு ஒருபோதும் பல்கலைக்கழக கல்வி கிடைக்கவில்லை. அவர் 16 வயதில் வணிக உலகில் நுழைந்து ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். இருப்பினும், பிரான்சனின் பள்ளியின் கடைசி நாளில், அவரது பள்ளியின் அதிபர் , “நீ சிறையில் இருப்பாய் அல்லது கோடீஸ்வரன் ஆவாய்” என்றார். அது உண்மையாகிவிட்டது.

 

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட் தான் FORD மோட்டார் கம்பெனியின் நிறுவுனர். பல தோல்விகளுக்கும் முயற்சிகளுக்கும் பின்னர் வாழ்வில் முன்னேறி FORD மோட்டார் கார் கம்பெனியை நிறுவிய போர்ட் வாகன உலகில் சிறந்து விளங்கினாலும் தனது கல்வியில் சிறந்து விளங்கவில்லை. இவர் அமெரிக்காவின் மிச்சிகன் எனும் இடத்தில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்துள்ளார். இதன் விளைவாக, அவர் ஒரு முறையான பள்ளிக் கல்வியைப் பெறும் அதிஷ்டத்தை பெற்றிருக்கவில்லை. தனது சொந்த முயற்சிகளின் விளைவாக, அவர் பின்னர் ஃபோர்ட் கார்களை நிறுவனத்தை தொடங்கினார். கல்வியில் குறைந்திருந்தாலும் சிறந்த நினைவாற்றல் கொண்டவர். அத்தோடு வணிகத்தை பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர்.

 

டிராஜ்லால் ஹிராச்சந்த் அம்பானி

திருபாய் அம்பானி அல்லது டிராஜ்லால் ஹிராச்சந்த் அம்பானி நம் அண்டை நாடான இந்தியாவை சேர்ந்தவர். அவர் நன்கு அறியப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவுனர். 20 ஆம் நூற்றாண்டின் மனிதர் என்றும் அழைக்கப்படுகிறார். “உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் வேறொருவரின் கனவுகளை நனவாக்க நீங்கள் வேலைக்கு அமர்த்தப்படுவீர்கள்” என்ற அற்புதமான கருத்தையும் இவர் கூறியுள்ளார். அவர் நிறுவிய கம்பெனியை நடத்தி வரும் அவரது மகன் முகேஷ் அம்பானி இப்போது உலகின் 13 ஆவது பணக்காரர் என்று அறியப்படுகிறார். பாடசாலைக் கல்வியை விட வெளிக்கள நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டினார். மேலும் பாடசாலைக் கல்வியை மாத்திரமே முடித்த அவரது தகுதி அவரது வணிக உலகிற்குத் தடையாக இருக்கவில்லை.

 

சித்தாலேப முதலாளி

இது நம் நாட்டின் வர்த்தகத்தில் வளர்ந்தவர்களை பற்றியது. சித்தாலேப முதலாளி எனும்போது ​​அவர் யார் என்று தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அவரது பெயர் விக்டர் ஹெட்டிகொட. ஆனால் சித்தாலேப முதலாளி என்றாலே அனைவருக்கும் தெரியும். வீட்டு செய்முறையில் ஒரு தைலம் கொண்டு உலகெங்கிலும் 40இற்கும் மேற்பட்ட நாடுகளில் சித்தலேபா என்ற இலங்கை பெயரை பரப்பிய பெருமை இவரையே சாரும். குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகள் மிகச் சிறப்பாக கல்வியில் முன்னேறியிருக்க, விக்டர் தனது தந்தையின் நாட்டு மருத்துவத்தை கற்க ஆரம்பிக்கிறார். இலங்கையின் பெயரை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு வருவதில் இவர் வெற்றியும் பெற்றார்.

 

நவலோக முதலாளி

எச்.கே. தர்மதாஸ முதலாளி அல்லது நவலோக முதலாளி என்றால் இவரை பலருக்கும் தெரியும். கிராமத்தில் இருந்து கொழும்புக்கு வாழ்க்கை நடத்த வந்து வாழ்வில் பெரிய இடத்தை அடைந்து நவலோகவை நிறுவியவரும் இவரே. தனது 14 வயதிலேயே தந்தையை இழந்த பின்னர் கொழும்பிற்கு வந்து ஒரு கடையில் வேலை செய்து பின்னர் வாழ்வில் வெற்றியை பெற்றார். நவலோக முதலாளிக்கு முறையான கல்வியைப் பெறுவதில் அதிஷ்டம் இல்லாத போதிலும் வெற்றிகரமான தொழிலதிபராகும் வாய்ப்பு கிட்டியது. அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது வணிகம் இலங்கையில் இன்னும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

 

மெலிபன் முதலாளி

எச்.ஜீ. ஹிண்ணி அப்புஹாமி அல்லது மெலிபன் முதலாளி என்று கூறினால் அறியக்கூடிய இவர் மெலிபன் பிஸ்கட் கம்பெனியின் நிறுவுனர். கொழும்பு கோட்டையில் ஒரு சிறிய தேநீர் கடையில் தொடங்கிய இவரது இந்த முயற்சி இன்று பல நாடுகளுக்கும் தமது தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்கிறார். நம் நாட்டிலும் மெலிபன் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்புள்ளது. இவரது வாழ்விலும் ஆரம்பக் கல்வி தடையாக இருந்தாலும், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சியின் காரணமாக இலங்கையில் பெரும் செல்வாக்கு பெற்ற நபராக மாறினார்.