தம்பி, தங்கையரை படிக்க வைக்க என்ன செய்யலாம்?

 

தம்பி தங்கை உள்ள சகோதர சகோதரிகளுக்க பாரிய பொறுப்புள்ளது. மேலும் சகோதரர்கள் தங்களுடைய தம்பியையும் சகோதரியையும் மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான சண்டைகள் இருந்தாலும் அந்த அன்பின் காரணமாக தமது தம்பி தங்கையரை சிறந்த இடத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறார்கள். குறும்புச்செயல்களே அவர்களது விசேட பண்பு. வளர்ந்தாலும் வீட்டில் இளையவர்கள் சிறுபிள்ளைகள் போலவே குறும்பு செய்வார்கள். அவர்களை பக்குவப்படுத்தி சரியான பாதைக்கு இட்டுச்செல்லும் பொறுப்பு பெற்றோரை விட அண்ணா, அக்காமாருக்கு உண்டு. அதற்கு என்ன செய்யலாம்? இதோ சில வழிகள்.

 

எச்சரித்தல்

எச்சரிக்கும்போது, உங்கள் தம்பி தங்கையர் மீண்டும் உங்கள் பேச்சை திருப்பி கேட்காதவாறு செய்ய வேண்டாம். அவர்களுடன் பாசமாக, நண்பனை போல பேச வேண்டும்.குறிப்பாக, ஏதாவது ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்பினால், உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அல்லது அனுபவங்களை சுட்டிக்காட்டி அதனூடாக தெளிவுபடுத்துங்கள். அதன் மூலம் அவர்களுக்கு உங்கள் மேல் மதிப்பு ஏற்படும். என்ன நடந்தாலும் உங்களிடமே வந்து சொல்வார்கள்.

 

சேர்ந்து படித்தல் 

தனியாக படிப்பது சற்று சோம்பேறித்தனத்தை தரும் விடயமாகும். அண்ணா அக்காமார் பாடசாலை செல்லும் வயதுடையவராக இருப்பின், ஒரே நேரத்தில் ஒன்றாக படிப்பது சிறந்தது. அப்போது அவர்களுக்கு சொல்லிகொடுப்பதன் மூலம் அவர்களின் கல்வியையும் மேம்படுத்த முடியும். அப்படி செய்தால் படிப்பது சோம்பேறித்தை ஏற்படுத்தாது.

 

டிவி பார்ப்பதை குறையுங்கள் 

எந்த நேரமும் டிவி பார்க்கும் அண்ணா, அக்காமார்கள் இருப்பின் அவர்களுடன் சேர்ந்து தம்பி தங்கையரும் பார்ப்பார்கள்.  அவர்களை ஏசி உள்ளே அனுப்பவும் முடியாது. அதனால் அண்ணா அக்காமார் டிவி பார்க்கும் கால அளவை குறைத்து அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மிகவும் சிறப்பாகும்.

 

தொழிநுட்பங்களை பயன்படுத்துங்கள்

புதிய தொழிநுட்பங்களை நாம் வீட்டில் சரியாக கையாள்கிறோமா? நாம் சரியாக பயன்படுத்தினால் எமது தம்பி தங்கையரும் அதனை பின்பற்றுவார்கள். குறிப்பாக இன்று Youtube இல் பல பயனுள்ள விடயங்கள் வந்துவிட்டன. அதனை சரியான முறையில் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள். நீங்கள் பார்த்த நல்ல விடயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

சுயமாக செயற்பட பழக்குங்கள்

ஏதாவது புதிய விடயத்தை செய்ய வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆனால் அதனை எவ்வாறு செய்வதென தெரியாது. உங்கள் தம்பி, தங்கையரின் படிப்பு விடயத்திலும் புதிதாக ஏதேனும் முயற்சியுங்கள். குறிப்பாக ஒரு குறிப்பு புத்தகத்தை (Notebook) வாங்கிக்கொடுத்து அவர்களை எழுதச் செய்யுங்கள். சுயமாக அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள இது உதவும். பிற்காலத்தில் பிறரில் தங்கியிருக்க மாட்டார்கள்.

 

பரிசு கொடுத்தல்

பரிசு என்றவுடன் பெரிதாக யோசிக்க வேண்டாம். நீ இந்த முறை பரீட்சையில் முதலாவதாக வந்தால் நான் உனக்கு சைக்கிள் வாங்கி தருவேனென்று கூறி மாட்டிக்கொள்ளவும் வேண்டாம். அதற்கு பதிலாக நீ பதினைந்தாம் வாய்ப்பாடு பாடம் செய்தால் உனக்கொரு பரிசு தருவேன் என்று கூறி, அவர்கள் விரும்பக்கூடிய சிறு சிறு பரிசுகளை கொடுங்கள்.