வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்

 

எமது வீட்டு சாப்பாட்டு தட்டில் இருந்து ஸ்டார் ஹோட்டல் சமையலறை வரை வெள்ளைப்பூண்டு இல்லாத உணவில்லை எனலாம். வாசனையில் மட்டுமன்றி மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவும் வெள்ளைப்பூண்டு காணப்படுகின்றது. வெள்ளைப்பூண்டு இலங்கையில் வளர்க்கப்படுவதில்லை. இதை உணவுப்பொருளாக பயன்படுத்தினாலும் சில சந்தர்ப்பங்களில் கைமருந்துகளுக்கும் பயன்படுத்துகிறது. கைமருந்து மாத்திரமன்றி மேலும் பல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக நாட்டில் தற்போது கொவிட் வைரஸின் தாக்கம் பற்றி பேசப்படுகின்றது. இதற்குள் வெள்ளைப்பூண்டும் அடிக்கடி பேசப்படுகின்றது. எதுவாக இருந்தாலும் சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறுவோம்.

 

வெள்ளைப்பூண்டின் வரலாறு

கிசா பிரமிட்டுகள் கட்டப்பட்டு இற்றைக்கு 5,000 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பிரமிட்டுகளின் கட்டுமானத்தின்போது மக்கள் வெள்ளைப்பூண்டு பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. உணவு ஒரு மருந்து, மருந்து ஒரு உணவு என்று கூறும் ஹிப்போகிரட்டீஸ் தனது மருந்துகளில்கூட வெள்ளைப்பூண்டை சேர்த்துள்ளார். நவீன காலத்தில் ஹிப்போகிரட்டீஸ் மேற்கத்தேய மருத்துவத்தின் தந்தையாக கருதப்படுகிறார். பூண்டுக்கலவையினை இரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு ஹிப்போகிரேட்ஸ் பயன்படுத்தியுள்ளார். ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டிலே அந்த காலத்திலேயே வெள்ளைப்பூண்டினை ஒரு ஆற்றல் தரும் மூலப்பொருளாக பயன்படுத்தியுள்ளார்கள். மேற்கத்தேய நாடுகளில் மட்டுமல்ல, முந்தைய காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்திலும் வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. இது இப்போது பாகிஸ்தான்-இந்தியா எல்லையில் உள்ளது.

 

வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்

இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க வெள்ளைப்பூண்டு பயன்படுத்தலாம் எனவும் நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களிலிருந்து வெள்ளைப்பூண்டு நிவாரணம் அளிக்கக்கூடியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் ஏற்பட்டால், காய்ச்சலைக் கட்டுப்படுத்த வெள்ளைப்பூண்டினை பயன்படுத்தலாம். நாசி மற்றும் சளி, தடிமன் போன்றவற்றிற்கு பூண்டு பயன்படுத்தப்படுகிறது.  வெள்ளைப்பூண்டு அடிப்படையில் அல்லிசின் கலவையை கொண்டது. பூண்டு பரவலான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது போன்றே இந்த அலிசினின் மூலம் கேன்சர் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

எலும்பை பலப்படுத்தும்

எலும்பு பலப்படுத்தல் தொடர்பாக மனிதனைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்படாவிட்டாலும் வெள்ளைப்பூண்டினால் எலும்பில் நல்ல முன்னேற்றத்தை கொண்டிருப்பதாக விலங்குகளின் மீதான ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. வெள்ளைப்பூண்டினால் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. தினமும் வெள்ளைப்பூண்டு பயன்படுத்தும் பெண்களுக்கு எலும்பு கோளாறுகள் குறைவாக இருப்பதையும் பொதுவான ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. ஆனால் இந்த எலும்புகளின் நன்மை பெண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கு வயதாகும்போது எலும்பு வலிமை இழப்பதை தடுப்பதற்கும் பூண்டு பங்களிக்கிறது.

 

விஷத்தை நீக்கும்

“நாங்கள் சுகாதாரமான உணவை சாப்பிடுகிறோம்” என்று வாயால் சொன்னாலும் பெரும்பாலானோர் நிச்சயமாக சுத்தமான, சுகாதாரமான உணவை உண்ண முடியாது. நச்சு கலந்த உணவை அதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவை நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ வாழ்க்கை முறையுடன் இணைத்து விஷ வாயுக்களை உட்கொள்ள வேண்டும். நச்சு கலந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நச்சு பொருட்களை நம் உடலில் இருந்து அகற்ற பெரும்பாலும் இந்த பூண்டு உதவுகின்றது. நச்சுப்பொருட்கள் மூலம் உடலுக்கு ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் உடலில் கலப்பது ஒரு பெரிய ஆரோக்கிய பிரச்சினையும்கூட. இந்த நச்சுப்பதார்த்தங்களை உணவிலிருந்து விரைவாக அகற்ற பூண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் பேட்டரிகளுடன் பணிபுரியும் நபர்களின் இரத்தத்தில் சேரும் 19% ஈயத்தை பூண்டு அகற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

செயற்திறனை அதிகரிக்கும்

பண்டைய காலங்களில், வெள்ளைப்பூண்டு மனிதனின் சக்தியை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில், தொழிலாளர்கள் தங்கள் வேலையை விரைவுபடுத்துவதற்காக பூண்டு வழங்கப்பட்டுள்ளது. பூண்டு கடின உழைப்பில் ஈடுபடும்போது கூடுதல் பலத்தை அளிக்கும் என்று நம்பப்பட்டாலும், அது குறித்து பெரிதாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை.

 

மூளைக்கோளாறு ஏற்படாது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் வயதானோருக்கு ஆக்ஸிஜனேற் பிரச்சினைகளை வெள்ளைப்பூண்டின் இந்த பண்புகள் குறைக்கிறது. அல்சைமரின் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு பூண்டில் உள்ள கொலஸ்ட்ரோலை குறைக்கும் பண்பு மிகவும் பொருத்தமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முழு செயன்முறையுடனும் தவறாமல் வெள்ளைப்பூண்டு சாப்பிடுவோர், வயதானவுடன் மூளைக் கோளாறுகள் ஏற்படுவதையும் குறைக்கலாம்.

 

இதய நோயைக் குறைக்கிறது

வெள்ளைப்பூண்டு உடலின் கொழுப்பை 10-15 சதவீதம் வரை குறைக்கும். ஆனால் இரண்டு வகையான கொழுப்புகளில் ஒன்றை மட்டுமே குறைக்கிறது. இருப்பினும், இந்த குறை அடர்த்தி கொண்ட கொழுப்புக்கு கூடுதலாக, அதிக ட்ரைகிளிசரைடுகளும் மாரடைப்பில் தாக்கத்தை செலுத்துகின்றன. அதனால் வெள்ளைப்பூண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது.

 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

உயர் இரத்த அழுத்தம் காரணமாகவே உலகில் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் வெள்ளைப்பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சுமார் 600-1500 மி.கி பூண்டு 24 வாரங்களுக்கு சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு யாராவது ஏதாவது மருந்தை உட்கொள்வதாக இருந்தால் அதிகமாக பூண்டு சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் மருந்துகள் மற்றும் பூண்டு இரண்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் தேவைக்கு அதிகமாகவே இரத்த அழுத்தம் குறைந்து விட்டால் குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் பின் அதனை சரிசெய்ய வேறு மருந்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.