இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் வாழ முடியுமா?

 

நாட்டில் தற்போது மிகவும் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. இதே வெப்பம், நீர் பற்றாக்குறை, வறட்சி ஆகியவற்றை நாங்கள் கடந்த வருடமும் சந்தித்துள்ளோம். ஆனால் இதனை சாதாரணமாக நினைக்க முடியாது. இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்சென்று பாருங்கள். இவ்வாறான ஒரு வெப்பநிலை காணப்படவில்லை. அவ்வப்போது வறட்சி ஏற்பட்டாலும், பெரியவர்கள் அவை சீரற்ற காலநிலையால் ஏற்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இப்போதைய காலநிலை மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால் மனிதர்களின் செயற்பாடுகள் ஆகும்.

இந்த காலத்திலேயே பல நாடுகளில் அதிக வெப்பத்தின் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது கொரோனா என்ற வைரஸ் உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இவற்றையெல்லாம் வைத்து பார்த்தால் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் நிலை, காலநிலை, மனிதர்கள் வாழ்வார்களா இல்லையா போன்ற விடயங்கள் தொடர்பாக சற்று சிந்திக்க வைக்கும் பதிவே இது.

 

2012 இல் உலகம் அழியவில்லையே!

2012 எனும் திரைப்படம் அந்த ஆண்டில் உலகம் அழிவதை போன்ற ஒரு கற்பனையில் எடுக்கப்பட்ட படமாகும். அந்த அழிவில் பாரிய எரிமலைகள், பாரிய பூகம்பங்கள், சுனாமி மற்றும் உலக வாழ்க்கையே முடிந்து மீண்டும் புதிய உலகத்தை கட்டி எழுப்பும் அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டது. ஆனால் படத்தின் பின்பும் மரங்களையும் காடுகளையும் மனிதன் அழித்து வருவதால் விரைவில் உலகம் அழிந்து விடுமென கூறுகின்றனர். ஆனால் அப்படி உலகம் அழிய சாத்தியமில்லை. பல அனர்த்தங்கள் இடம்பெறவே வாய்ப்புண்டு. எப்படியோ குறைந்தது 100 வருடங்களுக்கு இந்த உலகம் அழியாமல் இருக்குமென கூறலாம்.

 

மக்கள் புரிந்துகொள்வார்களா?

இது மிக முக்கியமான விஷயம். இதுவரை ஏற்பட்ட அழிவுகள் அனைத்திற்குமே மனிதனின் செயற்பாடுகளே காரணம் என்பதை மனிதன் உணர்ந்துவிட்டான்.  சுற்றுச்சூழல் அமைப்புகள் தற்போது இவ்விடயத்தில் அதிக கரிசனை செலுத்துகின்றன. வானிலை மற்றும் உலகிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் காபன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் ஏற்கனவே பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது எதிர்காலத்தில் பலராலும் கவனம் செலுத்தப்பட்டு தீவிரமடையும். குறிப்பாக அடுத்த 100 ஆண்டுகளில், சுற்றுச்சூழலுடன் நட்புடன் இருக்கும் ஒரு உலகத்தை எதிர்பார்ககலாம். மக்கள் அதற்காக செயற்பட வேண்டும்.

 

புவி வெப்பமடைதல்

உலகம் வெப்பமயமாதல் பற்றி தற்போது அறிந்து கொள்ள முடிகின்றது. சூழலுக்கு மிகவும் அபாயகரமான சூழ்நிலை இப்போது உள்ளது. இது தொடர்ந்து சென்றால் வருடங்கள் கடந்து தசாப்தங்கள் கடந்தாலும் இதற்கு தீர்வு காண முடியாது. இதற்கு மனிதனின் செயற்பாடுகள்தான் காரணம். எனவே பூமி அந்த விதியிலிருந்து தப்ப முடியாது. எனவே எப்படியாவது அடுத்த 100 ஆண்டுகளில், புவி வெப்பமடைதலின் விளைவுகளை நாம் இன்னும் அனுபவிக்க நேரிடலாம். அந்த நேரத்தில், உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வெப்பநிலை உயர்ந்திருக்கும். தற்போது, ​​வானிலை ஆய்வுத் துறையிலிருந்து கடுமையான வானிலை எச்சரிக்கைகளை மட்டுமே நாங்கள் பெற்று வருகிறோம். ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் ஆபத்தான வெப்பநிலையை சந்திக்கலாம். அதனை தவிர்க்க மரங்களை வளர்ப்போம். சூழலை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம்.

 

அடை மழை

காலநிலை மாற்றம் புவி வெப்பமடைதலுக்கு மட்டுமல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, மழை பெய்யும் போதும் ஆக்ரோஷமாக பெய்யுமென கணிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம மழை பெய்தால் அதிக பட்சம் இடி மின்னலுடன் நின்றுவிடும். ஆனால் இப்போது, ​​வெப்பநிலை அதிகமாகி பின்னர், மழை பெய்யும் போதும், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் ஏற்படுகிறது. எனவே, 100 ஆண்டுகளுக்குப் பிறகும், அது இதே மாதிரியாக அல்லது இதைவிட மோசமாக இருக்கக்கூடும். நீர் செல்லும் பகுதிகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துதல் மற்றும் மழை நீர் நேராக பூமியில் விழும் அளவிற்கு இடம்பெறும் காடழிப்பு என்பவையே இதற்கு காரணம்.

 

உக்காத குப்பைகள்

மனித நுகர்வுக்குள் எஞ்சியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினோம். சிதைந்துபோகும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் பயன்பாடு மற்றும் குப்பைகளை முறையாக அகற்றுவது ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இதில் ஒரு பிரச்சினை உள்ளது. மனித செயற்பாடு காரணமாக, நம் பூமியில் இன்னும் ஏராளமான குப்பைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் பெருங்கடலில் தீவுகளை போன்று பிளாஸ்டிக் பொருட்கள் ஒன்றுசேர்ந்து பெரிய பிளாஸ்டிக் தீவுகளையும் உருவாக்கியுள்ளன. எனவே, 100 ஆண்டுகளில் குப்பை பிரச்சினையை முற்றிலுமாக சமாளித்தாலும், இதுவரை சேகரிக்கப்பட்ட குப்பைகளால் ஏற்பட்ட சேதம் முற்றிலுமாக நீங்கிவிடும் என்று கற்பனை செய்வது சற்று கடினம்தான். இதற்கு இப்பொழுதே தீர்வை பெறாவிட்டால் பின்னால் இதைவிட பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும். மேலும் தண்ணீர் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.

 

கடலின் நீர் மட்டம் மாறும்

இன்னும் சுமார் 100 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் உயருமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று புவி வெப்பமடைதலுடன் பனிப்பாறைகள் உருகுதல். இரண்டாவதாக, வெப்பமான நீர் நிலைகளால் அதிக இடத்தை கடல் நீர் பெற்றுக்கொள்ளும். எனவே, 100 ஆண்டுகளில், கடல் நீர் மட்டம் 2.5 அடி அல்லது சில நேரங்களில் 3 அடி வரை உயரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு பெரிய விடயமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடல் மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயரத்தில் மேலதிக நீர் என்பது நீங்கள் நினைப்பதை விட அதிகமான நிலம் என்று பொருள்படும். இதன் மூலம் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள். இது குறைந்தது நான்கு மில்லியன் மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குமென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

 

விலங்குகள்

உலகின் உயிரினங்களும் பல சிக்கல்களை சந்திக்கவுள்ளன. குறிப்பாக, பல உயிரினங்கள் விரைவாக அழிந்துபோகும் நிலையை அவ்வப்போது பார்த்து வருகின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வனவிலங்கு நிதியம், அடுத்த 40 ஆண்டுகளுக்குள் உலக வனவிலங்குகளில் பாதி அளவு அழிந்துவிடும் என்று கூறியது. அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இவ்வளவு பெரிய அழிவிலிருந்து பூமியை மீட்க குறைந்தபட்சம் மூன்று மில்லியன் ஆண்டுகள் ஆகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் இந்த அழிவு மனிதர்களை மிகவும் தீவிரமாக பாதிக்கிறது. காரணம் நாமும் மரங்களும் செடிகளும் கொடிகளும் விலங்குகளும் பறவைகளும் வாழ்வது இந்த பூமியில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.