சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

 

சிறுகுழந்தைகள் உள்ள வீட்டிற்கு செல்லும் போது அதிகமானோர் விளையாட்டுப் பொருட்கள் அல்லது இனிப்புகளையே கொண்டுசெல்வீர்கள். ஆனால் அதிகமான வீடுகளில் இனிப்புக்கள் சிறுவர்களின் உடலுக்கு உகந்ததல்ல என்று எண்ணி விளையாட்டு பொருட்களை மட்டும் எடுத்து வருவார்கள். அவ்வாறு விளையாட்டு பொருட்களை வாங்கும் போதும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் உள்ளன. அவ்வாறான விடயங்களை பற்றி இன்று பார்ப்போம்.

 

பாதுகாப்பானதா?

சிறார்களுக்கு பரிசாக கொடுக்கும் போது அந்த பரிசுப்பொருள் அவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான பரிசுப்பொருளை தேடுவது கடினம்தான். இதற்கு காரணம் நாம் அதிகமான சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். விளையாட்டு பொருட்களை வாய்க்குள் போட்ட சிறுவர்களைப் பற்றி, அதனால் விளையாட்டு பொருள் சிறாரினது வாய்க்குள் இலகுவாக நுழையக்கக்கூடாத வகையில் இருப்பதும் மேலும் அந்த பொருட்களினால் இவர்கள் தமது உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாத வகையிலும் இருத்தல் நன்று.

 

கவனித்துக்கொள்ளவும்

சாதாரணமாக விளையாட்டு பொருட்கள் வாங்கும் முன் சிறார்களின் பெற்றோர்களிடமும் சற்று கலந்தாலோசித்து வாங்குதல் சிறந்தது. ஏனென்றால் நாம் வாங்கும் பொருட்கள் சிறார்களுக்கு விருப்பமற்ற ஒன்றாயின் அல்லது அதே விளையாட்டுப் பொருள் அவர்களிடம் இருந்தாலும் அவர்களுக்கு அவ்வளவாக சர்ப்ரைஸாக இருக்காது. எவ்வளவுதான் விலைமதிப்பான பொருளாக இருந்தாலும் இதற்கு முன்னர் அதை வைத்து விளையாடி இருப்பார்களாயின் சிறார்கள் முகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சந்தோசத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் வாங்குவதற்கு முன் அது ஏற்கனவே அவர்களிடம் இருக்கின்றதா அல்லது இருந்ததா என்பதை கவனித்து வாங்குங்கள்.

 

கோபக்கார சிறார்களா?

விளையாட்டுப் பொருட்களை தூக்கி எறிந்து விளையாடும் சிறுவர்களாயின், அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் அவதானமாக இருங்கள். உடையக்கூடிய பொருட்களை தூக்கி எறிந்தால் அன்று அந்த வீட்டில் ஒரு யுத்தமே நடைபெறும். அதனால் தூக்கி எறியும் குழந்தைகளுக்கு பஞ்சினாலான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சிறந்தது.

 

வயதுக்கு ஏற்றதா?

சிறுவர்களுக்கு பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுக்க முன்னர் அந்த பொருட்கள் அவர்களது வயதுக்கு ஏற்றதா என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக விளையாட்டுப் பொருட்களை வயது அடிப்படியில் குறிப்பிட்டிருப்பார்கள். அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு அறிவுசார்ந்த வழிகளை காட்டவும் முடியும்.

 

விரும்பிய விளையாட்டுப் பொருள் என்ன?

சிறுவர்களுக்கு பரிசு வழங்க முன் அவர்கள் எதனை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதனை அவர்களின் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் வேண்டும். அவற்றை கொடுப்பதன் மூலம் அவர்களின் முகத்தில் சந்தோசத்தை காணலாம்.

 

கல்வி தொடர்பானது

குறிப்பாக சிறுவர்களுக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அவர்களது கல்வியுடன் தொடர்புடையதாக இருப்பதே உகந்தது. ஆனால் எல்லா விளையாட்டுப் பொருட்களிலும் கல்வி தொடர்பான விடயங்களை தேடவும் முடியாது. ஆனால் பொதுவாக இலக்கங்கள், அறிவு சார்ந்த, விளையாட்டு சார்ந்த, பொழுது போக்கு சார்ந்த விடயங்களில் விளையாட்டுப் பொருட்கள் இருப்பதால் அவற்றை வாங்கிக் கொடுப்பதும் சிறந்தது.