நேர்மையாக தோற்றமளிக்க இந்த விடயங்களை செய்துபாருங்கள்

 

சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ அனைவரும் விரும்புவார்கள்தானே? நேர்மையாக வாழ்ந்தாலே இது கிடைக்கும் என்பது எமது கருத்து. எல்லோருக்கும் சிறந்த அந்தஸ்துடன் வாழும் பாக்கியம் கிடைப்பதில்லை. அதற்கு, சூழவுள்ள பிரச்சினைகளும் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் பிசியாக இருப்பதுமே  காரணம். சமூகத்தில் நேர்மையான, நம்பகரமான மனிதராக நீங்கள் வாழ ஆசைப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென நாம் உங்களுக்கு சொல்லித்தர தயார்.

 

நேர்மையாக இருக்கவேண்டும்

இது அனைவரும் அறிந்த விடயமாகும். நம்பகரமான, உண்மையான மனிதராக வாழ ஆசைப்பட்டால் நேர்மையாக செயற்பட வேண்டும். இதற்கு உதாரணமாக சிலர் வீட்டில் கெட்ட மனிதராக இருப்பார். ஆனால் வெளியே மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு தயாராக இருப்பார். இப்படி நேர்மையானவராக நடிப்பது எந்தவொரு பலனையும் தராது. ஏனையோரது பார்வையில் மாத்திரம் நாம் நல்ல மனிதராக இருக்கக்கூடாது. நமக்கு நாமே உண்மையாக இருக்காதவரை பிறர் நமக்கு உண்மையாக இருப்பது சந்தேகம்தான். இன்று சமூகத்தில் பிரச்சினைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் நம்பகத்தன்மையை இழந்து வருவதே காரணம்.

 

நீதிக்கு முதலிடம்

நம்பிக்கை, உண்மை, நாணயமுடைய மனிதர்கள் என்றுமே நீதிக்கு புறம்பாக செயற்பட மாட்டார்கள். ஆனால் பிறரின் பார்வைக்கு மட்டும் நேர்மையாக நடந்துகொள்வதை போல நடிப்பவர்களை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது. சில வாரங்களுக்கு முன்பு கம்பஹா மாவட்ட வனப்பாதுகாப்பு அதிகாரியான பெண்மணி ஒருவர், தவறை சுட்டிக்காட்டி தன்னை சூழ எதிர்த்து நின்ற அனைவரினதும் முன்னிலையில் தைரியமாக பேசினார். நீதியின் பக்கம் நின்றார். சூழலுக்கு ஏற்படப்போகும் பாதகத்தை சுட்டிக்காட்டினார். நேர்மைக்கு சிறந்த உதாரணமாக இவ்விடயத்தைக் குறிப்பிடலாம்.

 

அலுவலக நேரத்தில் அதை மட்டும் பாருங்கள்

நாம் எல்லோருமே வேலைசெய்வது சம்பளம் வாங்குவதற்காகத்தான். ஆனால் தமக்கு வழங்கும் சம்பளத்திற்கு ஏற்ற வகையில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பது சந்தேகமே. அநேகமானோர் தமது சொந்த வேலைகளை அலுவலக நேரத்தில் செய்துவிட்டு, அலுவலக வேலைகளை அதன் பின்னரே நேர்மையானவர்கள் செய்யும் வேலையல்ல இது. உதாரணமாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, நேற்று இரவு சாப்பிட்ட உணவு பற்றி, அடுத்தவர்களை பற்றி பேசுதல் போன்ற செயற்பாடுகளையே செய்வார்கள். இதே உங்களது அலுவலக வேலைகளை நேரங்காலத்தோடு செய்துவிட்டு உங்களது தனிப்பட்ட வேலைகளை செய்தால் யாரும் உங்களை குறைகூற மாட்டார்கள். மதிப்பும் அதிகரிக்கும்.

 

சொல்வதொன்று செய்வதொன்று!

சிலர் சொல்வதை செய்யமாட்டார்கள். வாய்வார்த்தையில் ஏதேதோ கூறிவிட்டு செயலில் அதனை காட்டமாட்டார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதிலும் கெட்டிக்காரர்கள். ஆனால் தாம் அப்படி நடந்துகொள்ளமாட்டார்கள். இப்படிபட்டவர்களை யாரும் பெரிதாக மதிக்கமாட்டார்கள். நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் சில அரசியல்வாதிகள் தமது அரசியல் கூட்டங்களில் தம்மை பெருமைப் படுத்திக்கொள்ள ஒருசில வீடுகளை கட்டிவிட்டு ஏதோ ஊரையே கட்டியது போல பெருமிதம் கொள்வார்கள். அதன்படி பணத்தையும் பிடுங்கிக் கொள்வார்கள். நாம் எப்படி இது போன்ற அரசியல்வாதிகளை பற்றி பேசுகிறோமோ அதுபோலவே நம்மில் சிலர் இருக்கின்றனர். இவ்வாறான பழக்கம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

 

மனதில் ஒன்று பேச்சில் மற்றொன்று!

சில நண்பர்களை பார்த்தீர்கள் என்றால் நீ எனது உயிர் நண்பன் அல்லது நண்பி என்பார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு இருப்பதில்லை. அப்படி உயிர் போகும்வரை கூடவே இருக்கும் நண்பர்களும் அரிது. அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதும் அரிது. இது நண்பர்களை பற்றி விளக்கும் தலைப்பும் அல்ல. (http://tamil.lifie.lk/2020/01/23/reasons-for-friends-to-split-up/) சிலர் ஒன்றாக சாப்பிட்டு, ஒரு உடையை உடுத்தி உண்மையாக இருப்பதுபோல கதைப்பார்கள். ஆனால் முதுகுக்குப் பின்னால் நேர்மறையாக கதைப்பார்கள். இப்படி நடந்து கொள்ளாமல் தனது உள்ளத்தில் இருப்பதையே நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்கள் உண்மையில் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

 

கள்ளங்கபடமற்ற சிரிப்பு

இது மேற்கூறிய காரணியுடன் ஒத்துப்போகக்கூடிய ஒரு காரணியாகும். ஒளிவு மறைவில்லாத சிரிப்பு சிறுபிள்ளைக்கு மட்டும்தான் என்பதை உண்மையாக்கும் விதமாகவே இன்று பலரது செயற்பாடுகள் உள்ளன. அதாவது ஒருவரை பார்த்து இலவசமாக வழங்கும் சிரிப்பைக்கூட சிலர் பொய்யாக வழங்குகிறார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யாக சிரிக்காமல் மனதார சிரித்தீர்கள் என்றால் நீங்களும் உயர்ந்த மனிதரே.