கொரோனாவுக்கு பயந்து நம் நாட்டு மக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

 

உலக சுகாதார அமைப்பால் ஒரு தொற்றுநோயாக அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் எங்கிருந்து எப்படி பரவுகின்றது என்பது கண்டுபிடிக்கமுடியாத நிலையில், இந்த வைரஸ் அனைவருக்கும் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளைப் போலவே, இதுபோன்ற நோய்ப்பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் சமூகத்தில் இது வித்தியாசமான முறையில் கையாளப்படுவதையும் பார்க்கின்றோம். அவ்வாறு மக்கள் செய்யும் சில விடயங்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

சூப்பர்மார்க்கெட்டை வலம்வரும் மக்கள்

மக்களுக்கு பயமோ சந்தேகமோ வந்ததால் திடீரென கூட்டம் கூட்டமாக சூப்பர்மார்க்கெட்களில் போய் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். மற்றவர்களும் வாழவேண்டும் என்பதைக்கூட யோசிக்கவில்லை. CONDOM பக்கற்றுகளைக்கூட மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளார்கள் என்றால் பாருங்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் பதிவுகள் ஒருபக்கத்தில் சிரிப்பை உண்டாக்கினாலும் இந்த வைரஸ் தொடர்பாக இவ்வளவு பதற்றத்தையும் பீதியையும் மக்களிடத்தில் பரப்ப காரணமாக இருந்ததே சூப்பர்மார்க்கெட்டுகள்தான்.

 

சொகுசு மெத்தைகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களிடமிருந்து தொற்றிக்கொண்ட மோசமான பழக்கமே இது. தங்கத் தட்டில் பிறந்து தங்கத் தட்டில் வாழ்ந்தவர்களைப் போல தமக்கு இலங்கையில் போதிய வசதியில்லையென சமூக ஊடகங்களில் இவர்கள் புலம்பியவற்றை பார்த்திருப்பீர்கள். தம்மாலான உதவியை செய்து கவனித்துக்கொண்ட போதும், இவர்கள் நடந்துகொண்ட விதம் மோசமானது. அந்த கவனிப்பிற்கு தகுதியற்றவர்களே இவர்கள்.

 

வதந்தியின் வடிவங்கள்

எய்ட்ஸ் நோய் காற்றால் பரவும் என்று சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் மக்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும் வாழ்கின்றனர். இவர்களுக்கென்றே உருவாக்கி வைத்ததைப் போன்ற சில போலி மனிதர்கள் சமூக ஊடகங்களிலும் இருக்கின்றனர். அதனால் அவர்கள் சொல்லும் பொய்களையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வார்கள். வாட்ஸ்அப்பிலும் அனுப்பிவிடுவார்கள். அரசாங்கத்திடமிருந்து வந்த எச்சரிக்கைகளை தொடர்ந்தே இவர்களின் போலி தகவல்கள் ஓரளவு குறைந்துள்ளன.

 

ஃபேஸ் மாஸ்க் பிஸ்னஸ்

பார்மஸியில் உள்ள மாஸ்க்கை வாங்கி சேர்க்கும் இன்னொரு கூட்டமும் இருக்கின்றது. பார்மஸிகளில்கூட மாஸ்க் இல்லை. இந்த பேர்வழிகள் அதிக விலைக்கு விற்க செய்யும் வேலை இது. ஆனால் வீதியில் பேஸ்மாஸ்க் போட்டுக்கொண்டு செல்வோரின் எண்ணிக்கை என்னவோ குறைவாகத்தான் இருக்கின்றது. இது தொடர்ந்து இப்படியே சென்றால் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் மையங்களிலும் மருத்துவமனை ஊழியர்களிடமும்கூட முகமூடிகள் போதாமல் போகலாம். இப்படி பீதியை கிளப்பி பயந்து முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை. எதையும் வாங்கி சேர்ப்பதற்கு முன்னர் அடுத்தவர்களை பற்றியும் யோசியுங்கள்.

 

ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் என்பது சாதாரணமான விடயம். ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்களை இலங்கைக்குள் விடவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்வது மனிதாபிமானமற்ற செயல். சிலரது ஆதரவுடன் ஹெந்தல பகுதியில் நடந்த இவ்வாறான ஆர்ப்பாட்டம் சரியானதென சிலர் நியாயம் கற்பிக்கின்றமை வேடிக்கையானது.

 

னடோல் ஆபத்து

இத்தாலியில் இருந்து வந்தவர்களில் சிலர் செய்த பிற்போக்கான வேலைகளில் இதுவும் ஒன்று. இத்தாலியில் இருந்து வரும்போதே காய்ச்சலோடுதான் வந்துள்ளார்கள். தம்மை பரிசோதித்தால் கொரோனா இருப்பது உறுதியாகி குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வைத்து விடுவார்களென பயந்து பனடோலை குடித்துள்ளார்கள். ஆனால் இவ்வாறு மறைப்பது தமது குடும்பத்தினருக்கே ஆபத்தானதென அவர்கள் மறந்துவிட்டார்கள்.

 

கருத்துச்சொல்லும் கூட்டம்

நாடு பிரச்சினையில் சூழ்ந்திருக்கும்போது மக்களின் கருத்து மிகவும் பிரயோசனமாக இருப்பது அவசியம். ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு போலியான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட விடயங்களையும் மிகைப்படுத்தியும் கூறுகின்றனர். சிலர் அரசியல் இலாபம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இவ்வாறான விடயங்களை தவிர்த்துக்கொள்வது அவசியம்.