சமூக ஊடகம் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

 

மனிதர்கள் வீட்டில் இருக்கின்றார்களோ இல்லையோ, எந்த நேரமும் ஒன்லைனில் இருப்பார்கள். அதுவும் சமூக ஊடகங்களில்தான் தனது காலத்தை அதிகமாக செலவழிப்பார்கள். நேரம் காலம் தெரியாமல் அதில் மூழ்கியிருப்பார்கள். நேரம் சென்றபின்னர் அப்படி என்னதான் செய்தோம் என யோசித்தால் ஒன்றும் இருக்காது. சமூக ஊடகங்களில் அப்படி என்னதான் செய்கின்றோம்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

 

போராடுவோம்! போராடுவோம்!

முன்பு ஏதாவது பிரச்சினை என்றால் வீதிக்கு வந்து மக்கள் கோஷமெழுப்ப தொடங்கிவிடுவார்கள். இப்போது எல்லோருடைய கையிலும் ஸமார்ட் போன் தாராளமாக புரளுகிறது. அதிலேயே இப்போது போராட்டங்களையும் செய்கின்றனர். யார் மீது கோபமோ அல்லது போராட்டம் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு எதிராக ஒரு குரூப்பையும் ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து விடுவார்கள்.  அந்தவகையில் சமூக வலைத்தளங்கள் பல இன்று ரணகளமாகத்தான் காட்சியளிக்கின்றன.

 

மச்சான் எப்படா வந்த?

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவே இருந்தாலும், அதன் இன்னொரு பக்கம் மிகவும் மோசமானது. அதனால் பெற்றோரையே மறந்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். அதற்கேற்றாற்போல நாளுக்கு நாள் புதுப்புது அப்ளிகேஷன்கள் வந்து மனதை மாற்றிவிடுகின்றன. சமூக வலைத்தள்களை மூடி வைத்துவிட்டு கொஞ்சம் வெளியில் எட்டிப்பார்த்தால் உலகம் எவ்வளவு அழகானது என தெரியவரும்.

 

தெரிந்துகொள்ள என்ன இருக்கின்றது?

இக்காலத்தில் மக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளையே அதிகமாக பகிர்கின்றனர். புத்தகங்களை படிப்பதை விட இன்று ஃபேஸ்புக்கில் வரும் விடயங்களை அதிகமாக படிக்கின்றனர். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து படியுங்கள். பிறந்தநாள், திருமண நாள் என சகல விடயங்களையும் கொண்டாடுகின்றனர். நாமே மறந்தாலும் ஃபேஸ்புக் எமக்கு நினைவுபடுத்திவிடும்.

 

அவனா நீ?

சமூக ஊடகங்கள் எமது நேரத்தை சாப்பிடுவது என்னவோ உண்மைதான். ஆனால், ஒர மனிதனைப் பற்றி தெரிந்துகொள்ள இன்று சமூக ஊடகங்கள் மிகவும் உதவுகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்கள் இடும் பதிவுகள் காட்டிவிடுகின்றன. ஏன் சமூக ஊடகங்களில், குறிப்பாக திருமணமான ஆண்கள் ஜொல்லு விடுவதை பல சந்தர்ப்பங்களில் மனைவிமார் எப்படியோ கண்டுபிடித்தும் விடுகின்றனர். குறிப்பாக இந்த போலிக்கணக்குகளை (fake id) உருவாக்கி அதன்மூலம் இவர்களை கண்டுபிடிக்கும் மனைவிமாரும் உள்ளனர்.

 

நேரக்கொள்ளையன்!

ஏற்கனவே நாம் பார்த்ததைப் போல சமூக ஊடகங்கள் எமது நேரத்தை எமக்கே தெரியாமல் கொள்ளையிடும் ஒரு விடயம்தான். ஒருநாளைக்கு எத்தனை தடவை FACEBOOK POST, WHATSAPP STATUS, IMO STATUS, TWITTER TWEETS என்று எவ்வளோ நேரத்தை வீணாக கழித்திருப்போம். வாழும் நாள் எவ்வளவென எமக்கு தெரியாது. வாழும்வரை அந்த நேரத்தை பிரயோசனமாக பயன்படுத்துவோமே.

உதாரணமாக இக்காலகட்டத்தில் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்போம். புதியவற்றை கற்போம்.

 

போலிச் செய்திகள்

தற்போதைய காலத்தில் போலிச் செய்திகள் மிகத் தாராளமாக பகிரப்படுவதால் அவதானமாக இருங்கள். நாடு தற்போதுள்ள நிலையில் எமது பதிவுகள் விழிப்புணர்வூட்டக்கூடியதாக இருப்பதே பொருத்தம். வெறுப்புணர்வூட்டும், மத பிரிவினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. இவ்வாறான விடயங்களை தவிர்த்து சமூக பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வோம்.