ஒரு நாட்டின் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள அந்த நாட்டின் பொதுச்சேவையை அணுகிப் பார் என எனது அடுத்த வீட்டு மாமி சொல்லி இருக்கிறார். அதன்படி இலங்கையில் இருக்கும் பொதுசேவைகளுள் ஒன்றான பஸ்ஸில் பயணிக்கும் மக்களை பற்றி இன்று பார்க்கப்போகிறோம்.
டிக்கெட்
பஸ்ஸில் டிக்கெட் இன்றி போவது தண்டனைக்குரிய குற்றம் என்று நிறைய இடங்களில் (பஸ்ஸில்) ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனாலும் நம் நாட்டு வீர சூரர்கள் அதனை கவனத்தில் வைத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் டிக்கெட்டே இல்லையே. ஓசியில் ஏசி காற்று வாங்குவதைப்போல சென்றுவிடுவார்கள். இப்படிப்பட்ட திருட்டுப்பிராணிகளும் பஸ்ஸில் வருவது வழக்கமாகிவிட்டது.
நான்தான் முதலில் வந்தேன்
சிலர் தாம் ஒவ்வொரு நாளும் பயணிக்கும் இருக்கையே வேண்டுமென ஓடி அமர்ந்துவிடுவார்கள். வயதானவர், கர்ப்பிணித் தாய்மார், மதகுருமார் வந்தாலும் மதிப்பதில்லை. அது ஒவ்வொரு மனிதர்களின் இயல்பையும் சூழ்நிலையையும் பொறுத்தது. சூழ்நிலை சூழ இருந்தாலும் அங்கவீனர்களுக்கும் கர்ப்பிணிகளுக்குக்கூட இடம் கொடுக்காமல் அமர்வது ஒரு வகையான கெட்ட குணமாகும்.
வளர்ந்த பூசணிக்காய்
பஸ்ஸில் நடக்கும் முக்கியமான விடயம் இது. சிலரது உடல் அமைப்பே அவ்வாறுதான் இருக்கும் அதனால் அவர்களை திட்டி பயில்லை. இருந்தாலும் போதியளவு தள்ளி அமர்ந்துகொள்ளலாம். ஆனால் சிலர், குறிப்பாக ஆண்கள் இரண்டு கால்களையும் விரித்து வைத்துக்கொள்வார்கள். அப்படியானால், அருகில் இருப்பவருக்கு இடம் இருக்காது. நீண்ட தூர பயணமாக இருந்தால் மிகவும் சிரமமாகிவிடும்.
மறந்துவிட்டேன்
சிலர் தான் எங்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டு அமர்ந்திருப்பார்கள். செல்ல வேண்டிய இடம் பாமன்கடையாக இருக்கும் ஆனால் வேறெங்கோ செல்லும் பஸ்ஸில் இருப்பார்கள். தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டுவிட்டு ஏறலாம். அதில் தப்பே இல்லை. ஆனால், கௌரவம் பார்க்கும் சிலர் இவ்வாறு கேட்காமல் பிறகு டிக்கெட் எடுக்கும்போது நடத்துனர் இடையில் இறக்கிவிட்டுச் செல்வார்.
ஜோடிகளின் சில்மிஷம்
இப்பொழுதெல்லாம் ஒரு பஸ்ஸிற்கு ஒரு ஜோடியாவது இருக்கும். அதிலும் சிலர் நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டிய சில்மிஷத்தை பஸ்ஸில் செய்துகொண்டிருப்பார்கள். அந்த பஸ்ஸில் பெற்றோர், பெற்றோருடன் குழந்தைகள் என பல வயதினரும் வருவார்கள். அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொள்வார்கள்.
ஜெக் ஜாக்சன்
இது பொதுவாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய ஒன்றுதான். பஸ்ஸில் வரும் பெண்களுடன் ஒட்டி உரசி சீண்டுவது இவர்களின் வேலையாகும். இந்த விளையாட்டை சிலர் விளையாட போய் அடிவாங்கிய சந்தர்ப்பமும் உண்டு. அப்படி நீங்களும் அடிவாங்கிய சந்தர்ப்பம் இருந்தால் கீழே பதிவு செய்யுங்க.
மிதிபலகை வீரன்
ஆமாம், தாம் பெரிய சாகச வீரர் என சிலர் காட்டிக்கொள்வர். பஸ்ஸில் ஏறியது முதல் இறங்குவது வரை மிதிபலகையில் பயணிப்பார்கள். பஸ்ஸில் ஏறுவோருக்கும் இடைஞ்சல் இறங்குவோருக்கும் இடைஞ்சல். சில சந்தர்ப்பங்களில் பஸ் சாரதியும், நடத்துனரும் அவர்களை உள்ளே வருமாறு கத்திக்கொண்டிருப்பதையும் நாம் அவதானித்திருப்போம்.