தவறு செய்யாமல் பொலிஸை கண்டு பயப்பட காரணம் என்ன?

 

இங்கிலாந்தில் பொலிஸை BILS என்பார்கள். ஆனால் நம் நாட்டில் பொலிஸை பாசத்துடன் “மாமா“ என்போம். எது எப்படியாயினும் உலக நாடுகளில் எந்த நாடாக இருந்தாலும் பொலிஸ் என்றாலே சற்று பயம் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் பொலிஸின் தொழிலே குற்றம் செய்பவனை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதாகும். ஆனாலும் சிலர் தவறுகளை செய்யாமலேயே சிலர் பொலிஸை கண்டால் பயப்படுகின்றனர். குறிப்பாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இக்காலத்தில் வெளியே திரிபவர்கள் பொலிஸை கண்டவுடன் ஓட்டமெடுப்பதை பார்த்திருப்பீர்கள். சரி, அவ்வாறான சில சந்தர்ப்பங்கள் சிலவற்றை இன்று பார்ப்போம்.

 

லைசென்ஸ் எடுத்த ஆரம்பத்தில் பயம்

எவரும் புதிதாக லைசன்ஸ் எடுத்த பின் வாகனத்தை செலுத்தும்போது மிகவும் கவனமாக, சிக்னல்களை சரியாக போட்டு, வேகத்தை குறைத்து, அடிக்கடி கண்ணாடிகளை பார்த்தவாறே வண்டியை செலுத்துவர். ஆனால் சில நாட்கள் போன பின் நமக்குதான் வண்டி பழக்கமாவிவிட்டதே என்று வீதியில் முறுக்கி வேகமாக செல்வதும், ஓவர் டேக் அடிக்கடி பண்ணுவதும் ஆகி இருக்கும். இதே எதிராக ஒரு பொலிஸ் அங்கிளை கண்டால் வேகத்தை குறைத்து, ரேஸிங் மூடில் இருந்து மாட்டுவண்டி மூடிற்கு வந்து விடுவார்கள். ஆனால் இப்படி வேகமாக செல்லாதவர்களுக்குக்கூட சில சந்தர்ப்பங்களில் பொலிஸை கண்டால் பயத்தால் நடுங்கி அந்த நேரத்தில், நான் லைசன் எடுத்து வந்தேனா? இன்ஷுரன்ஸ் இருக்கு தானே? என்றெல்லாம் யோசிப்பார்கள். அப்படி இருந்தும் பொலிஸார் கண்ணில் இருந்து மறையும்வரை அதே பீதியில் இருப்பார்கள்.

 

வீட்டு வாசலில் பொலிஸ் வாகனம்

பொலிஸ் வண்டி இரண்டு விதமாக போகும். ஒன்று வேகமாக போய் போகவேண்டிய இடத்தில் பிரேக் அடிப்பார்கள். இரண்டாவது புலி மாதிரி மெதுவாக போய் கள்ளர்களை பிடித்து வருவார்கள். இதுபோல பொலிஸ் ஜீப் வீட்டுக்கு முன் வந்து நின்றால் சிலருக்கு மூச்சும் வராது. ஏனென்றால் பயத்தில் நெஞ்செல்லாம் சில்லிட்டு போய்விடும். அடுத்த வீட்டுக்காரருடன் அன்று சண்டைப்பிடித்ததால் இன்று வந்துவிட்டார்களோ என்று நம் வீட்டு பயந்திருப்பார்கள். ஆனால் பொலிஸாரோ, அடுத்த வீட்டிலுள்ளவர்களின் தகவல் ஏதாவது கேட்டு தெரிந்துகொள்ள வந்திருப்பார்.

 

நண்பர்களுடனான பயணம்

நண்பர்களுடன் நாம் வெளியில் செல்வது வழமையான விடயம். நண்பர்களுடன் என்பதால் சந்தோஷமாக குதூகலமாக செல்வார்கள். சிலர் பியர் போன்ற இலேசான போதை தரக்கூடிய மதுபானத்தையும் அருந்துவார்கள். ஆனால் வாகனத்தை செலுத்தும் நண்பன் மது அருந்தினால் அது தவறு. வாகனம் ஓட்டும் நண்பன் மது அருந்தக் கூடாது. எப்படியாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் வாகனத்தை நிற்பாட்டினால் அனைவருக்கும் பயம் வந்துவிடும். வாகனத்தில் பயணிப்பவர்கள் குடிக்கக்கூடாதென சட்டம் இல்லை என்றாலும் அனைவரும் பயந்து நடுங்குவார்கள்.

 

பொலிஸை கண்டாலே பயம்

கொழும்பில் எல்லா பிரதான வீதியிலும் அல்லது ஏதாவது வளைவுகளில் பொலிஸார் ஒருவராவது இருப்பார். தற்செயலாக அவர் எம்மை உற்றுப்பார்தாலும் நாம் பயந்துவிடுவோம். உடனே அடையாள அட்டை கொண்டுவந்தோமா என யோசிப்பார்கள். எந்த தவறும் செய்யாவிட்டாலும் பொலிஸாரைக் கண்டால், நேர் வீதியில் செல்லாமல் சுற்றி வளைத்து ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

 

கைது பயம்

இவ்வாறான சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதாவது நீங்களும் உங்களது காதலியும் காதலின் உச்சக்கட்டத்திற்கு சென்று எந்த நாளும் விக்டோரியா பார்க்கில் சந்திப்பதை விடவும் சிறப்பாக ஏதாவது செய்ய ஆசைப்படுவீர்கள். அதாவது கிசுகிசு விளையாட்டுக்கள், முத்தங்கள் போன்றவை. இந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் பொலிஸ் வண்டி வந்து நிற்குமானால் என்ன செய்வது? சிலர் பயத்திலேயே தனக்கு 18  வயது பூர்த்தியா என்று மீள பரீட்சித்துக்கொள்வார்கள். தனது காதலியிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். எவ்வாறுதான் இருந்தாலும் பொது இடங்களில் இவற்றை தவிர்த்துக்கொள்வதே சிறந்தது.

 

எங்களுக்கும் பயம்

இந்த நாட்டில் குறிப்பாக அரசியல்வாதிகளை பற்றி எழுதினால் எமக்கு பிரச்சினைதான். ஏதாவது மதத்தை நிந்தித்து எழுதினால் 2,3 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியதுதான். பொலிஸார் வந்து கைதுசெய்துவிடுவர். அப்படியிருக்கையில் பொலிஸாரை பற்றி எழுதினால் என்ன நடக்கும்? எமக்கும் பயம்தான். ஆனால் நாம் சரியானதையே எழுதியுள்ளோம் என்பதால் திருப்தியே.