புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

 

எமது உறவினர் அல்லது நண்பர்களில் யாருக்காவது குழந்தை பிறந்தால் பார்க்கச்செல்வது வழமை. ஆசீர்வாதம் செய்வது மட்டுமன்றி அந்தக் குழந்தைக்கு பரிசையும் கொண்டுசெல்வோம். ஆனால் குழந்தைக்கு என்ன பரிசை வாங்கிக்கொடுப்பது என்ற குழப்பம் எம் அனைவருக்கும் வரும். இனி யோசிக்க வேண்டாம். இந்த பதிவை வாசித்தால் உங்களுக்கு சில ஆலோசனைகள் வரும்.

 

தாய்க்கொரு பரிசு

பலர் இதனைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை இதனை செய்வதும் இல்லை. ஒரு புதிய குழந்தையைப் பார்க்கும்போது இது ஒரு முக்கியமான விடயமாகும். குழந்தையை பெற்றெடுத்த தாயும் குழந்தையை போல கவனிக்கப்பட வேண்டியவர். பிரசவ காலத்தில் அவர்களை் படும் வேதனையை எம்மால் வர்ணிக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பரிசு ஒரு ஆறுதலாக அமையும். கொண்டுசெல்வது சிறிய பரிசாக இருந்தாலும் அதனால் அடையும் சந்தோசமும் ஆறுதலும் எண்ணில் அடங்காதவை. குறிப்பாக பூச்செண்டு, போஷாக்கான உணவுகள் போன்றவற்றை கொண்டுசெல்வது சிறப்பானது.

 

டயபர்ஸ் / வெட் வைப்ஸ்

பச்சிளங் குழந்தைகளுக்கு பெரிதும் தேவைப்படும் ஒன்றே டயபர்கள். ஏனென்றால் அடிக்கடி மாற்றவேண்டிய தேவை ஏற்படும். ஆனால் இலங்கையில் டயப்பர்களைப் பயன்படுத்துவது குறித்த தவறான எண்ணம் காரணமாக, சில குடும்பங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர்களை போடுவதில்லை. ஆகையால் வாங்குவதற்கு முன்னர் குறித்த குழந்தையின் பெற்றோரிடம் கேட்டுவிட்டு வாங்குங்கள். அத்தோடு அளவையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

 

கோட் மொபைல்ஸ்

முன்பெல்லாம் சிறு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பிள்ளைகளின் தொட்டிலில் தொங்க விடப்பட்டிருக்கும் கிளுகிளுப்புக்கள்தான் கோட் மொபைல்ஸ். குழந்தையின் தலையணைக்கு மேல் தொங்கும் அழகிய வண்ண நிறத்தில் இது காணப்படும். குழந்தையின் நுண்ணறிவின் வளர்ச்சிக்கு இந்த கோட் மொபைல்களின் வெவ்வேறு வண்ணங்களும் வடிவங்களும் மிக முக்கியமானவை.

 

புதிய ஆடைகள்

புதிய கைக்குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய இன்னொரு பரிசாக உடைகளை கூற முடியும். கைக்குழந்தைகள் விரைவாக வளர்ச்சியடைவதால் ஆடைகளும் விரைவாக சிறிதாகிவிடும். அதனால் நீங்கள் ஆடைகளை பரிசாக கொடுப்பதனால் ஒவ்வொரு அளவில் ஆடைகளை கொடுப்பது சிறந்தது. அதன்மூலம் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

 

பேபி மெட்

குழந்தைகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும் போது தவழ ஆரம்பிக்கும் முன் முகங்குப்புற புரள்வார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு பஞ்சு மெத்தை மிகவும் அவசியம். இல்லாவிட்டால் குழந்தையின் முகம் அடிபட்டுவிடும். இப்போது அச்சிடப்பட்ட மெத்தைகள் சந்தையில் உள்ளன. சிறியவர்களுக்காக உருவாக்கப்பட்ட சில அழகான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் படங்கள் என அழகழகாக உள்ளன. எனவே ஒரு பேபி மெட் எடுத்துக்கொடுப்பது குழந்தைக்கு உதவும்.

 

பேபி ரோக்கர்

குழந்தையை வைத்து ஆட்டக்கூடிய ஒரு சிறிய தொட்டில் போன்றதே ரோக்கராகும். குறுகிய காலத்திற்கு படுக்கையில் இருந்து விலக்கி வைக்க இது மிகவும் உபயோகமான பொருள். ஆனால் சுமார் எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, குழந்தை தவழ தொடங்குகிறது. எனவே குழந்தையின் 6 அல்லது 7 ஆவது மாதத்திற்கு முன்னரே வாங்கிக் கொடுப்பது சிறந்தது.

 

கோ கார்ட் / ஃபீடிங் செயார்

இலங்கையில் ஒரு குழந்தைக்கு ஒரு கோ-கார்ட் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. குழந்தையை வைத்து தள்ளிச்சென்று சூழலை காண்பிக்க முடியும்.  ஆனால் வெளிநாடுகளில் இதன் மூலம் நிறைய பயன்பெறுகின்றனர். நீங்கள் எங்கு நடந்தாலும் குழந்தையை உங்களுடன் அழைத்துச் செல்லலாம். நாம் சுதந்திரமாக நடக்கும்போது குழந்தையை வைத்து அதைத் தள்ளலாம்.

மேலும், ஒரு உணவளிக்கும் நாற்காலி (பீடிங் செயார்) குழந்தைக்கு குறைந்தபட்சம் இரண்டு வயதாக இருக்கும்போது சாப்பிட வைக்க மிகவும் பயனுள்ள பொருளாகும். நடைபயிற்சி மற்றும் சாப்பிட வைப்பது பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இரண்டும் ரூ.7000 வரை செலவாகும். ஆனால் மிகவும் பயனுள்ளது.

 

தங்கம்

மிகவும் நெருங்கிய சொந்தங்கள் அல்லது நெருங்கிய நண்பரின் ஒரு குழந்தைக்கு இதனை வாங்கிக் கொடுக்கலாம். ஏனெனில் தங்கம் எப்போதும் விலை அதிகரித்துச் செல்லும். இதே ஒரு பெண் குழந்தை என்றால் இரண்டு காதணிகளையும் கொடுக்கலாம்.

 

பணப்பரிசு

இது மிகவும் பயனுள்ள பரிசு. ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்த காலத்தில் வீட்டில் குழந்தைக்கான செலவு அதிகமாகவே இருக்கும். மேலும் குழந்தையை பற்றி குழந்தையின் குடும்பத்திற்கே நன்கு தெரியும். ஆகவே பணத்தை கொடுத்தால் தேவையானதை வாங்கிக்கொள்வார்கள். குழந்தைக்கு வங்கி புத்தகத்தை திறப்பதற்கும் அந்த பணத்தை கொடுத்து உதவலாம். அது குழந்தையின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும்.