தேங்காய் மூலம் செய்யக்கூடிய சுவையான உணவுகள்

 

உணவில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக தேங்காய் காணப்படுகின்றது. கறிசமைக்க, இனிப்பு வகைகள் தயாரிக்க என பல உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் இன்று உங்களுக்கு தேங்காய் அல்லது தேங்காய் பாலால் செய்யக்கூடிய உணவுப்பண்டங்களை தொடர்பாக தகவல் தரவுள்ளோம்.

 

தேங்காய் குக்கீஸ்

தேவையான பொருட்கள்

 • சர்க்கரை தூள் – 1/2 கப்
 • உருகிய நெய் அல்லது எண்ணெய் – 1/2 கப்
 • கோதுமை மா – 1 கப்
 • துருவிய காய்ந்த தேங்காய் (கொப்பரை தேங்காய்) – 1/2 கப்
 • பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
 • பால் – 2 டீஸ்பூன்

செய்முறை

 • சர்க்கரை தூள் மற்றும் நெய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து அதில் கோதுமை மா மற்றும் காய்ந்த தேங்காய் துருவலை சேர்க்கவும்.
 • பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும். பால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாவில் இருந்து சிறிதளவை எடுத்து குக்கீ வடிவத்தில் செய்து தேங்காயில் பிரட்டிக்கொள்ளவும்.
 • இப்போது இதை ஒரு எண்ணெய் தேய்த்த தட்டில் வைத்து 175 செல்சியஸில் 8-10 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

தேங்காய் டொபி

தேவையான பொருட்கள்

 • 1 ½ தேங்காயில் தயாரித்த பால்
 • சர்க்கரை – 250 கிராம்
 • கோதுமை மா – 250 கிராம்
 • வெணிலா அசன்ஸ் – 1 டீஸ்பூன்
 • கஜூ – சிறிதளவு

செய்முறை

 • ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலையும் சர்க்கரையும் போட்டு கரண்டியால் கிளறவும்.
 • கிளறி வரும் போது சற்று இறுக்கமாக வரும். அந்த நேரத்தில் கோதுமை மாவுடன் வெணிலா அசன்ஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் நறுக்கிய கஜூ துண்டுகளை போட்டுக்கொள்ளவும்.
 • பின் பட்டர் தேய்த்த ட்ரேயில் அதை போட்டு வெட்டிக்கொள்ளவும்.

 

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்

 • துருவிய தேங்காய் – 3 கப்
 • சர்க்கரை – 2 கப்
 • பால் – 1/2 கப்
 • பிரஷ் கிரீம் (விரும்பினால்) – 2 தேக்கரண்டி
 • ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை

 • துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து அதில் பால் கலந்து இளஞ்சூட்டில் கிளறவும். சர்க்கரை உருகி, கலவை கட்டியாகிவிடும். தொடர்ந்து கிளறுங்கள். அதனுள் பிரஷ் கிரீம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
 • பாத்திரத்தில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் நெருப்பை குறைத்து நடுத்தர அளவில் வைத்துக்கொள்ளுங்கள். கட்டிப்பதார்த்தமாக வரும்போது ஒரு தட்டில் நறுக்கி துண்டுகளாக வெட்டவும்.

 

தேங்காய் புடின்

தேவையான பொருட்கள்

 • மில்க்மேட் டின் – 1
 • முட்டை – 3
 • தேங்காய் பால் – 1 கப்
 • வெணிலா அசன்ஸ் – 1 டீஸ்பூன்
 • நறுக்கிய தேங்காய் – 1 கப்
 • உப்பு – ஒரு சிட்டிகை
 • சர்க்கரை – 2 மேசைக்கரண்டி

செய்முறை

 • சர்க்கரையை உருக்கி தட்டில் ஊற்றவும். மில்க்மெய்டை ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டைகளைச் சேர்த்து பீட் செய்யவும்.
 • அதில் தேங்காய் பால், உப்பு மற்றும் வெணிலா சேர்க்கவும்.
 • நறுக்கிய தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
 • இந்த கலவையை தட்டில் வைத்து 180 ° C க்கு 30 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

தேங்காய்ப்பால் சொக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

 • கோதுமை மா – 1 கப்
 • சர்க்கரை – 1 கப்
 • தேங்காய் கிரீம் 1 கப்
 • பேக்கிங் பவுடர் – 1 மேசைக்கரண்டி
 • தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 • வினாகிரி – 1 தேக்கரண்டி
 • சொக்கலேட் பவுடர் – 2 மேசைக்கரண்டி
 • வெணிலா அசன்ஸ் – 2 டீஸ்பூன்
 • உப்பு – சிறிதளவு

செய்முறை

 • மா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், சொக்கலேட் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
 • ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், வினாகிரி மற்றும் வெணிலா அசன்ஸ் போட்டு கலக்கிக் கொள்ளவும். பின்னர் மா கலவையைச் சேர்த்து கிளறவும்.
 • இப்போது அதனை எண்ணெய் தேய்த்த தட்டில் வைத்து 180 ° C க்கு 25 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
 • தேங்காய் கிரீம் வீட்டிலேயே தயாரிக்க, பிழிந்த தேங்காய் பாலை குளிர்சாதன பெட்டியில் இரவில் வைக்கவும். காலையில், தேங்காய் பால் குறைந்து, கீழே நீர் போல இருக்கும். அதன் மேலே இருப்பதுதான் தேங்காய் கிரீம்.