வேலைசெய்யும் இடத்தில் உங்களை மதிக்க வேண்டுமானால் இதனை செய்யுங்கள்

 

எந்த ஒரு வேலை செய்தாலும் எந்த இடத்தில் வேலை செய்தாலும் அந்தந்த இடத்திற்கு ஒவ்வொரு கலாசாரங்கள் இருக்கும். அதன்படி நாம் வேலை செய்தால் அவ்விடத்தில் நமக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்ளலாம். இதனை சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது என்றும் கூறுவர். இது ஒரு சில இடங்களில் நல்லதாக இருந்தால் கூட, நம்மில் பெரும்பாலானோருக்கு அவ்வாறு இருப்பது அசௌகரியமாக இருக்கலாம்.. இதற்கு உதாரணமாக நாம் வீட்டில் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் பேசிக்கொண்டு சாப்பிட்டிருப்போம். சில ஒழுக்கங்களை பேணாமல்கூட சாப்பிட்டிருப்போம். அனால் இதே நாம் வெளியில் ஏதாவது பெரிய ஹோட்டலில் போய் சாப்பிடுகிறோம் என்றால் அந்த ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறுதான் அலுவலகங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி இன்று பார்ப்போம்.

 

அலுவலக பொருட்கள் அலுவலக தேவைக்கு மட்டுமே

இது பெரும்பாலும் பலரும் பெரிதாக கவனத்தில் எடுக்கும் விடயமல்ல. இதற்கு நமது நாட்டின் அரச ஊழியர்களையே எடுத்துக் கொள்ளலாம். தனது சொந்த தேவையையும் இந்த சேவைகளில் சேர்த்து செய்து கொள்வார்கள். அலுவலக வாகனத்தில் தனது சொந்த பயணங்களை செல்வது, அலுவலகத்தில் திரைப்படங்களை டவுன்லோட் செய்துகொள்வது, தமது பிள்ளைகளின் பாடசாலை தேவைக்கு அலுவலக பிரிண்டரை பயன்படுத்துவது, மாலை நேரங்களில் மனைவியுடன் கதைக்க அலுவலக தொலைபேசியை பயன்படுத்துவது போன்றவற்றை சாதாரணமாக நாம் எண்ணினாலும் இவை நல்ல பழக்கங்கள் இல்லை. உயர் அதிகாரிகள் நீங்கள் செய்யும் இந்த செயல்களை கண்டுபிடித்தால் உங்களுக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது.

 

அமைதியை கடைப்பிடியுங்கள்

சத்தம் போடாமல் இருக்க அலுவலகம் என்பது நூலகம் அல்லதான். ஆனால், மீன்கடையும் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எதை நேரமும் கீச் கீச் என்று சத்தமிடாதீர்கள்.  எமது வேலை முடிந்தவுடன் அடுத்தவர்களை பற்றி சிந்திக்காமல் எமது தேவைகளின் போது சத்தமாக கூச்சல் இடுவது நல்ல பழக்கம் அல்ல. சத்தம் போட்டுதான் அந்த செயல் நடைபெறுமாயின் அது அடுத்தவர்களுக்கு வெறுப்பை உண்டாக்காத அளவுக்கு இருக்க வேண்டும். ஏன் எமது மொபைல் போனில் ரிங்கிங் டோன் சத்தம் அதிகமானது என்றால் அலுவலக நேரத்தில் அதை குறைத்து வைப்பது அல்லது சைலன்ட்டில்போடுவதும் நல்ல பழக்கம்.

 

தொலைபேசி பாவனையை குறையுங்கள்

இதுவும் கவனத்தில் எடுக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம். எமக்கு அலுவலக நேரத்தில் சொந்த அழைப்புக்களை அனுமதிக்காமல் இருக்க முடியாது. அதேவேளை அதனை தூக்கிப் பிடித்து கொண்டு அதிகநேரம் அலுவலக நேரத்தை வீணடிக்கவும் கூடாது. அதனால் நாம் அந்த நேரத்தில் சொந்த அழைப்புகளை மட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் மிக அத்தியாவசிய அழைப்புக்களை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளலாம். அப்படி எமக்கு அதிக நேரம் கதைக்க வேண்டிய சந்தர்ப்பம் வேண்டுமென்றாலும் ஒரு தனிப்பட்ட இடத்திற்கு சென்று கதைக்க வேண்டும். மேலதிகாரியின் அனுமதியையும் பெற்றால் சிறப்பாக இருக்கும்.

 

தொழிலுக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி வேண்டும்

இது அதிகமானவர்கள் தவறாக எண்ணக்கூடிய விடயம். மேலதிகாரி கடிந்துகொண்டார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் செயற்படக் கூடாது. வேலைநேரத்தில் தவறுகள் இடம்பெற்றால் மேலதிகாரி ஏதாவது சொன்னால் அதனை அவ்வளவாக மனதில் எடுத்துக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் அவர்கள் ஏசமாட்டார்கள்தானே? தவறு ஏற்பட்டுள்ளதென்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தவறு உங்கள் பக்கம் இல்லாவிட்டால் மேன்முறையீடு செய்யுங்கள். மேலதிகாரியின் வீட்டில் உள்ள பிரச்சனைக்காக, அலுவலகத்தில் வந்து கோபத்தைக் காட்டுவதும் நல்லதல்ல. நீங்கள் ஒரு மேலதிகாரியாக இருந்தால் இதனை கடைப்பிடியுங்கள்.

 

தொடர்பாடலை வளர்த்துக்கொள்ளுங்கள்

இது சரியாக அமையாவிட்டால் நீங்கள் அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்குவது மிகவும் கடினம். தொடர்பாடல் திறன் உங்களுக்கு எப்போதும் உதவும். தொடர்பாடல் திறன்கொண்டவர்களே அலுவலகங்களில் அதிகமாக இருப்பார்கள். அதாவது ஒரு பிரச்சினை வந்தாலும் அதனை இலகுவாக சமாளித்து தனது பேச்சுத் திறமையாலும் அதற்கு சரியான பதிலை விளக்கப்படுத்துவதிலும் தேர்ச்சி உடையவராக இருத்தல் வேண்டும். இந்த திறன் பெரும்பாலும் பெண்களுக்குத்தான் இருக்கின்றது என்றாலும் குற்றமில்லை. எமது தாய்மார் இதற்கு சிறந்த உதாரணம்.

 

வேலைக்கேற்ற சன்மானம்

அலுவலக வேலைகளில் போட்டித்தன்மையும் காணப்படும். அந்த நேரத்தில் மற்றவர்களை விட அதிகமாக வேலை செய்து நல்ல பெயர் எடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லோருக்கும் இது வாய்ப்பளிப்பதும் இல்லை. சில அலுவலகங்களில் இருக்கக்கூடிய டீம் லீடர்கள் அவர்களுக்கு கீழே வேலை செய்பவர்களின் வேலையை இவர்கள் செய்த வேலையை போல் காட்டி நல்ல பெயர்களையும் மேலும் பல நன்மைகளையும் அடைந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவரவர் செய்த வேலைகளுக்கான பெறுமதிகளை அவரவர்க்கு வழங்கிவிடுங்கள். அவர்களை முன்னிலைப்படுத்தும் நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

 

மரியாதையும் கண்ணியமும்

கடைசியாக சொன்னாலும் இதுதான் முதன்மையானது. தன்னோடு வேலை செய்பவர்களை கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்த பழகவேண்டும். என்னதான் நாங்கள் அட்வைஸ் சொன்னாலும் பெரும்பாலும் அனைவராலும் ஓரளவுக்கு மேல் கடைபிடிக்க முடியாது. பொதுவாக மனிதன் என்ற அடிப்படையில் பாலினம், பதவி அல்லது சாதி, மதம், இனம், நாடு அல்லது வேறு எந்த விஷயத்தின் அடிப்படையிலும் யாரையும், தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் பாகுபாடு காண்பது அல்லது இழிவுபடுத்துவது நல்ல பழக்கம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எந்த அடிப்படையில் ஒருவரை தவறாக, மரியாதை குறைவாக நடத்துகிறோமோ அந்த விடயத்தில் நாமும் மாட்டிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். ஏனென்றால் கர்மா தொடரும்.