எமது வாழ்க்கை எதிர்பார்ப்புகள் நிறைந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசைகள் இருக்கும். சிலர் கவிதை எழுதுவதை விரும்புகிறார்கள். சிலர் கல்வி கற்க விரும்புகிறார்கள். சிலர் சமைப்பதில் ஆர்வமுள்ளவர்கள். அவ்வாறே சிலர் தமது வாழ்க்கையில் தமது ஆர்வத்தின்படி தொழிலையும் அமைத்துக் கொள்கிறார்கள். சிலர் விரும்பியும் விரும்பாமலும் ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். எமது ஆசைகள் என்ன என்று வெளிப்படுத்தாதவரை எமக்கு யாரும் உதவப்போவதில்லை. தாம் உண்மையில் எதில் ஆர்வம் கொண்டுள்ளோம் என்பதை அறியாதோர் பலர் உள்ளனர். அவர்களுக்கான பதிவாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.
நான் உண்மையில் எதை விரும்புகிறேன்?
பாடசாலைக் கல்வியை முடித்தவர்களிடம் இந்தக் கேள்வி அதிகமாக வருவதுண்டு. தனது ஆசை, ஆர்வம், தெரிவுசெய்யவேண்டிய துறை பற்றி தமக்கு அதிக கேள்விகளை கொண்டிருப்பர். சிலர் ஏதோ ஒரு பாதையை தெரிவுசெய்து, பின்னர் இதே கேள்விகளை மீண்டும் கேட்டுக்கொள்வார்கள். தாம் தேர்நதெடுத்த துறை பற்றிய போதிய விளக்கமின்மையே இதற்குக் காரணம். ஆனால் வல்லுனர்களின் கூற்றுப்படி, தத்தமது வாழ்வின் ஆசையை அறிய இந்த மூன்று கேள்விகளை கேட்கவேண்டும்.
எனக்கு 500 புத்தகம் வாசிப்பதென்றால், எது சம்பந்தமாக வாசிப்பது பிடிக்கும்?
பணத்தை எதிர்பார்க்காமல் ஒரு வேலையை 5 வருடங்கள் செய்ய முடியும் என்றால் அது என்ன?
என்னிடம் எதை செய்யவும் பணம் இருந்தும், நான் ஆர்வமாக செய்ய விரும்புவது என்ன?
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் பெரும்பாலும் உங்களது ஆர்வத்தை அறிந்துகொள்ள முடியும்.
செய்யும் தொழில் தாம் விரும்பியதாக இருக்கவேண்டுமா?
உண்மையில் அப்படி இருக்கத் தேவையில்லை என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது தாம் செய்ய விரும்பும், ஆர்வம் காட்டும் விடயத்தை தொடர்ந்து செய்யவும், அதன் மூலம் நமக்கு வருமானம் வருகின்றது என்றால் பரவாயில்லை. ஆனால் சில சமயம் நாம் ஆசைப்படும் விடயங்களில் தேர்ச்சியற்றவராக இருக்கலாம். உதாரணமாக எனக்கு வரைதலில் ஆர்வம் இருந்தும் எனக்கு வரைய தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. அதனால் ஆசைப்படுவதற்கு முன்னர் என்னால் அதனை தொடர்ந்து செய்ய முடியுமா என்றும் அதற்கான திறன் என்னிடம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். பின்னர் நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் ஒரு பொழுதுபோக்கு போல செய்யலாம்.
எனது வாழ்வில் விருப்பமான தொழில்
இந்த இடத்தில்தான் அதிகமானோருக்கு பிரச்சினை வருகின்றது. அதாவது தான் எந்த விடயத்தில் திறமையாக செயறபடுவேன் என்ற கேள்வி எழுகின்றது. உதாரணமாக, மேலே கூறியது போல ஒருவருக்கு வரைதலின் மீது ஆர்வம் உள்ளதென வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த தடவை அவருக்கு சுமாராக வரைய முடியும். ஆனால் அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், சம்பவங்களின் மறுபக்கத்தைக் காணும் திறனும் இருப்பதாக இருந்தால் பின்னர் அவர் எளிதாக கார்ட்டூனிஸ்டாக முடியும். ஆகவே எம்மிடம் அதிகமாக எந்த திறமை இருக்கின்றது என்று மட்டும் பார்க்காமல் என்னிடம் உள்ள அனைத்து திறமையும் சேர்த்து என்னால் புதிதாக எதை வெளிக்காட்ட முடியும் என்பதையே அறிய வேண்டும்.
தொழிலாக செய்யவேண்டிய விருப்பமற்ற விடயங்கள்
ஒரு நாளில் பத்து பேரிடம் எமக்கு ஆசையான தொழிலைப் பற்றி பேசினாலும் அதில் ஒருவர்கூட ஆசைப்படும் தொழிலில் இல்லாமலிருக்க வாய்ப்புண்டு. ஆனால் தாம் விருப்பப்படாத ஒரு தொழிலை செய்யக்கூடிய ஒருவராவது அல்லது பலராவது அந்த பத்து பேரில் இருக்கக்கூடும். அதற்கு காரணம் சிலருக்கு தனக்கு அதுவாகவே அமைந்த தொழிலாக இருக்கலாம். வேறு சிலருக்கு தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு தொழிலில் இணைய வாய்ப்பு அமையலாம். இன்னும் சிலருக்கு வீட்டுப் பிரச்சினையால் அமைந்த தொழிலாகவும் இருக்கலாம்.
உண்மையில் நாம் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும் போது, நாம் விரும்பும் பிறர் செய்யும் தொழில் என்னென்ன, அதற்கு அவர்கள் செய்த விடயம் என்ன போன்ற கேள்விகளை கேட்டுப்பாருங்கள். இதன் மூலம் நமக்கு விரும்பிய தொழில் அமைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம்
சொகுசான தொழில் செய்யவே அநேகமானோர் விரும்புவர். உதாரணமாக ஒரு எழுத்தாளரை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் நினைப்பதெல்லாம் அவர் விரும்பிய நேரத்தில் விரும்பியது போல் ஆசைபடுவதை எழுதிக்கொண்டு போகிறார் என்றும், அவருக்கு அது அவ்வளவாக கஷ்டத்தை கொடுப்பது இல்லை என்றும் நினைக்கலாம். ஆனால் உண்மை அப்படியிருக்காது. ஏனென்றால் ஒரு தொகுப்பை எழுதி முடிக்க சில சந்தர்ப்பங்களில் பல மணித்தியாலங்கள் செல்லும். ஏன் சில நேரங்களில் பல தினங்கள்கூட செல்லும். எந்த வேலையும் மேலோட்டமாக ரோஜா பூ கொட்டிய மலர் பாதையை போல தெரிந்தாலும், அதில் நடக்கும் போதே அங்கு காணப்படும் முட்கள் கண்ணுக்குத் தெரியும். ஆகையால் எந்த வேலையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
கஷ்டத்தை போலவே சந்தோஷம் இருப்பது நிச்சயம்
மேலே நாம் கூறியதை தலைகீழாக எடுத்துக்கொண்டு, நாம் எதிர்பார்த்த தொழில் அனைத்தும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு அந்த எழுத்தாளர் உதாரணத்தையே மீண்டும் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு எழுத்தாளன் இரவு பகலாக கண்விழித்து ஒரு தொகுப்பை எழுதும்போது இதனை எழுத வேண்டுமா என்று எண்ணவும் கூடும். ஆனால் அதே தொகுப்பு வெளியாகி மக்களை கவரும்போது வரும் சந்தோஷம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. அதனால் எந்த தொழிலிலும் கஷ்டம் ஏற்படுவது போலவே சதோஷமும் பின்னால் சேர்ந்தே வரும்.
சிறுவயது ஆசையையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
சிறுவனாக இருக்கும்போது, எம்மைப்பார்த்து ஆசிரியர்கள் ஒரு கேள்வியை கேட்டிருப்பார்கள். அதாவது “நீ பெரியனாகி என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டிருப்பார்கள். அதற்கு நாம் வைத்தியர், இன்ஜினீயர், விமானி, பொலிஸ் என பல விடயங்களை கூறியிருப்போம். ஆனால் அப்போது நாங்கள் கூறியது பெரிதும் வெறும் வாய்வார்த்தையாக மாத்திரம் இருப்பதில்லை. ஏனென்றால் சிறு பிள்ளையாக இருக்கும்போது எமக்கு எதாவது பிடித்திருந்தால் மட்டுமே அதற்காக அடம்பிடிப்போம். ஆகவே சிறுபிள்ளையில் நாம் எதைச் செய்ய ஆசைப்பட்டோமோ அதையும் சற்று கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது. வைத்தியராகி உயிர்களை காப்பாற்ற ஆசையென்றால் வைத்தியராகத்தான் மாற வேண்டும் என்றில்லை. வைத்தியருக்கு உதவும் தாதியாக மாறி உதவினாலும் உயிர்களை காப்பாற்றும் பங்களிப்பு உங்களுக்கும் உண்டு.