பணக்காரர்களாக மாறுவதற்காக சிலர் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகள்

 

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பணக்காரராகி வாழ்க்கையை கொண்டுசெல்ல ஆசைப்படுகின்றனர். அதற்காக நிறைய பேர் தம்மையே அர்ப்பணித்து வேலை செய்கின்றனர். வேலை செய்து சம்பாதித்து, சேமித்து, முதலீடு செய்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவும் செய்கிறார்கள். ஆனால் இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, உலகில் சிலர் தாங்கள் வைத்திருக்கும் வித்தியாசமான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வில் முன்னேறலாம் என்று நினைக்கின்றர். அவ்வாறான சில விடயங்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

பணப் பையை கீழே வைக்காமலிருப்பது!

தாம் பணம் போட்டு வைக்கும் பை அல்லது பர்ஸை ஏதாவது அவசரத்திற்குக்கூட கீழே வைப்பதை ஒரு சில நாடுகளில் அபசகுணமாக பார்க்கின்றனர். நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அவமதிப்பதால் பணம் வந்த வழியாலே ஓடுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் அதிக பணம் சம்பாதிப்பதற்காக பணப்பைக்கு கௌரவம் வழங்குகிறார்கள்.

 

கழிப்பறை கதவை அல்லது மூடியை மூடுதல் 

இது ஒரு ஃபெங் சுய் நம்பிக்கை. ஃபெங் சுய் நம்பிக்கைகளில், வீட்டு கழிப்பறை மிகவும் செல்வ செழிப்பை கொட்டக்கூடிய இடம் போலும். இந்த நம்பிக்கையின் படி, நாம் ஒருபோதும் கழிப்பறை மூடியைத் திறக்கக்கூடாது (கழிப்பறையைப் பயன்படுத்தும் போது தவிர). இது வீட்டின் செல்வத்தை கழிப்பறையிலிருந்து தூக்கி எறிய காரணமாக அமையுமாம்.

 

பணப் பையை வெறுமையாக வைக்காமல் இருத்தல்!

பர்ஸை பரிசாகக் கொடுக்கும்போது, சிலர் அதில் 100 ரூபாயோ நல்லது 50 ரூபாயோ போட்டுக் கொடுப்பதுண்டு. நம்மிலும் சிலர் இப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதனை ஒரு நம்பிக்கையாகவே கொண்டு சில நாடுகளில், ஒருவரின் பைகளில், பணப்பைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் காலியாக வைக்க மாட்டார்கள். அதாவது எல்லா நேரங்களிலும் ஒரு வங்கிக் கணக்கு அல்லது ஒரு பணப்பையில் ஒரு நாணய குற்றியாவது இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவருக்கு பணம் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்குமாம்.

 

மாலை நேரத்தில் பொருட்களை யாருக்கும் கொடுக்காமல் இருத்தல்!

இந்த பழக்கத்தை பெரிதும் இந்தியாவில் காணக்கூடியதாக இருக்கும். சூரியன் மறைந்த  பிறகு மாலை  வேளையில் பணப்புழக்கம் செய்வது, பால், சீனி, உப்பு, உசி போன்றவற்றை பிறருக்கு கொடுப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவை வீட்டில் உள்ள செல்வதை குறைக்கும் என்றும் சொல்வதுண்டு. இதனை நம்மில் பலரும் கஞ்சத்தனமாக எண்ணினாலும் அது அவரவர் நம்பிக்கையாகும்.

 

அடுத்த வருடத்திற்கான பணத்தை சேமித்தல்

புத்தாண்டு தொடங்கும்போது கடந்த ஆண்டின் பணத்தில் சிறிதளவை சேமித்து புதிய ஆண்டிற்கு கொண்டுசென்றால், முன்னரை விட அதிக செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த வருடத்தில் முயற்சித்து பார்க்க நமக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே. அடுத்த வருடம் முயற்சிப்போம். அதற்காக இப்போதே சிறிதளவு சேமித்துக்கொள்ளுங்கள்.

 

கால்களை ஆட்டி அசைத்தல்

உட்கார்ந்திருக்கும்போது கால்களை அங்கும் இங்குமாக அசைப்பதை சாதாரணமான பழக்கமாகத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் கொரியாவில் உள்ளவர்கள் இந்த நடத்தையை கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் நம்பிக்கையின்படி செழுமையின் சக்தி ஒருவரின் கால்களில் இருப்பதாக நம்புகின்றனர். எனவே நீங்கள் கால்களை நீட்டும்போதும், வீணாக அசைக்கும்போதும் அதன் செல்வத்தை இழந்து விடுவதாக எண்ணுகிறார்கள்.

 

உள்ளங்கை அரிப்பு

உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் அது செல்வம் வரவிருப்பதற்கான அறிகுறி என்றும் மக்கள் எண்ணுகின்றனர். இடது கையில் அரிப்பு ஏற்பட்டால் பணம் வரப்போவதாகவும் வலது கையில் அரிப்பு ஏற்பட்டால் நட்டம் வரப்போவதாகவும் எண்ணுகின்றனர். ​​இடது கையின் மூலம் பணத்தை பெற்று, கொடுக்கும் போது வலது கையில் கொடுப்பதும் ஒருவரினது செல்வத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர்.