வருடாந்த பாடசாலை விடுமுறைக்கு முன்பாகவே இப்போது பாடசாலைகளில் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறைக்கு வீட்டை விட்டு வெளியே போகவும் முடியாது. கொரோனா தொற்றினால் குழந்தைகளுக்கு நீண்ட விடுமுறை கிடைத்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவர்களை வைத்து சமாளிக்கும் பெற்றோர்களின் நிலை பற்றி சிறிது கவலையாகத்தான் உள்ளது. உங்கள் குழந்தைகளின் சுட்டித்தனமான செயற்பாடுகளிலிருந்து உங்களையும் வீட்டுப்பொருட்களையும் காப்பாற்றுவதற்கு, நீங்கள் செய்யக்கூடிய மிக சுவையான உணவு தயாரிப்பு முறைகளை உங்களிடம் கொண்டுவந்துள்ளோம். முடிந்தால் செய்துகொடுங்கள். பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு பேன் கேக்
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 3
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய பச்சைமிளகாய் – 2
- நறுக்கிய பசளி இலைகள் – சிறிதளவு
- நறுக்கிய இஞ்சி பூண்டு – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – 1/2 தேக்கரண்டி
- கோதுமை மா – ஒரு கப்
- முட்டை – 1
- உருளைக்கிழங்கினை தோல் உரித்து நன்கு கழுவி துருவிக்கொள்ளுங்கள். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி வடிக்கவும்.
- பிறகு அந்த கிழங்கின் மேலுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
- தட்டு ஒன்றில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி கலவையை சிறிது சிறிதாக வட்ட வடிவில் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சொக்கலேட் டோனட்
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 500 கிராம்
- ஈஸ்ட் – 3 தேக்கரண்டி
- உருகிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- சிறிது சூடான நீர் – ஒரு கப்
- முட்டை – 1
- சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
- இளம்சூட்டில் பால் – 3/4 கப்
- உப்பு – சிறிதளவு
- ஈஸ்ட்டில் இளஞ்சூடான நீரை கொஞ்சம் சேர்த்து அதில் 2 மேசைக்கரண்டி கோதுமை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நல்ல கட்டியான பதார்த்தத்தில் வைத்து 20 நிமிடங்கள் பொங்க விடுங்கள்.
- கோதுமை மாவில் உருகிய பட்டர், முட்டை, சீனி, உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இதில் முதலில் செய்த ஈஸ்ட் கலவையை போட்டு கலக்குங்கள்.
- பின்னர் பால் சேர்த்து கையில் ஒட்டாத பதார்த்தத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவையை ஈரமான துணியால் 1 மணி நேரம் மூடி வையுங்கள்.
- அதன் பிறகு டோனட் வடிவத்திற்கு ஏதாவது ஒரு அச்சில் எடுத்து பின்னர் அதனை பொரித்து எடுங்கள்.
சொக்கலேட் சோஸ் செய்யும் முறை
- குக்கிங் சொக்கலேட் – 5 துண்டுகள்
- தூய பால் – 2 தேக்கரண்டி
- குக்கிங் சொக்கலேட்டை சற்று உருக்கி எடுத்து அதில் பால் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்பு அதை பொறித்த டோனத்தின் மீது ஊற்றி பரிமாறவும்.
ஒம்லட் சன்ட்விச் பிரெட்
தேவையான பொருட்கள்
- சாண்ட்விச் – சில துண்டுகள்
- முட்டை – 1
- உப்பு – தேவையான அளவு
- நறுக்கிய வெங்காயம் – பாதி
- நறுக்கப்பட்ட குடைமிளகாய் – 2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – சிறிதளவு
- மொஸெரெல்லா சீஸ்
- முட்டையும் உப்பும் கலந்துகொள்ளுங்கள். சண்ட்விச் பாணின் நடுப்பகுதியை நீக்கி விடவும்.
- தட்டு ஒன்றில் எண்ணெய் சற்று சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில் குடைமிளகாய் போட்டு அதனையும் சேர்த்து பொரித்துக்கொள்ளுங்கள்.
- நடுப்பகுதி நீக்கிய சண்ட்விச்சை தட்டில் வைத்து அதன் நடுவில் வெங்காய கலவையை போடுங்கள்.
- அதன் மீது முட்டை கலவையையும் போட்டுக்கொள்ளுங்கள். அதில் துருவிய சீஸையும் போடுங்கள். எல்லாவற்ரையும் தட்டு சூடாக இருக்கும்போதே செய்யுங்கள்.
சிக்கன் மினி கீஷ்
தேவையான பொருட்கள்
சிக்கன் பில்லிங்கிற்கு
- வெண்ணெய் – 2 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய பூண்டு – 4
- எலும்பு இல்லாத கோழி இறைச்சி – 100 கிராம்
- நறுக்கிய கறிமிளகாய் – 1/2 கப்
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- கடுகு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
முட்டை கிரீம் கலவைக்கு
- முட்டை – 2
- ஃபிரஷ் கிரீம் – 1 கப்
- ஒரிகானோ – 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
- நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
மா கலவை
- கோதுமை மா – 500 கிராம்
- வெண்ணெய் – 200 கிராம்
- உப்பு – சிறிதளவு
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
- பால் – 1/4 கப்
- கோழியிறைச்சி பில்லிங் செய்வதற்கு, பட்டர் சிறிதளவு தட்டு ஒன்றில் போட்டு உருகி வரும் போது வெங்காயம், வெள்ளைப்பூண்டு சற்று சேர்த்து தாளித்து எடுக்கவும்.
- அதிலேயே சிறிது சிறிதாக வெட்டிய கோழியிறைச்சியை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடங்கள் மூடிவிடவும்.
- பிறகு அதில் கறிமிளகாய், உப்பு, மிளகுத்தூள், கடுகு பேஸ்ட் போட்டு பில்லிங் செய்து ஆறவிடுங்கள்.
- முட்டை க்ரீம் கலவையை தயாரிக்க தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள்.
- மா கலவையை செய்ய தேவையான எல்லா பொருட்களையும் கோப்பை ஒன்றில் போட்டு கலந்து 30 நிமிடங்கள் வரை மூடி வையுங்கள்.
- பின்னர் அதனை வட்ட வடிவில் தட்டையாக்கி ஒரு மஃபின் கப் வடிவத்தில் மஃபின் டிரேயில் போட்டு 180 செல்ஷியஸில் 5 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுங்கள்.
- அதன் பிறகு அந்த கப் வடிவில் செய்ததில் சிக்கன் கலவையை போட்டு வையுங்கள். விரும்பினால் துருவிய சீஸையும் மேலே தூவி 180 செல்ஷியஸில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மினி கீஷ் ரெடி.